பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4901-4910

4901.
கூறவென்றால் சாரனைகள் என்னசொல்வேன் கொப்பெனவே வசிஷ்டமகா ரிஷியார்தாமும்
மாறலுடன் குளிகைக்கு வுறுதிசொல்லி மகத்தான சாரனைகள் மிகவுஞ்செய்து
ஆறவே எந்தனுக்கு வதிதங்கூறி வப்பனே குளிகையிட மார்க்கங்கூறி
சேறவே மகமேரு தன்னிலப்பா தேற்றமுடன் செல்கவென்று வரந்தந்தாரே
4902.
தந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு
தெந்தமுடன் அடியேனுங் குளிகைகொண்டு துப்புரவாய் மேருகிரி தன்னிற் சென்றேன்
அந்தமுடன் பதிமூன்றாம் வரையிற்சென்று அவ்வரையில் விநாயகரைக் காணவென்று
விந்தையுடன் அடியேனும் மனதுவந்து விருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேன்தானே
4903.
தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர் தண்மையுடன் குருதனையே நினைத்துகொண்டு
தேனான பதிமூன்றாம் வரையிற் சென்றேன் தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண
கோனான தும்பிக்கை யுடையமாண்பன் கொற்றவனாங் கணபதியா மென்றசித்து
மானான மகதேவ ரென்னுஞ்சித்து மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே
4904.
கண்டேனே சமாதியிட பக்கந்தன்னில் கருவான சித்துமுனி கோடாகோடி
விண்டதொரு நாதாக்கள் கூட்டந்தன்னை விருப்பமுடன் யான்கண்டு மனதுவந்து
தெண்டமுடன் அடியேனும் முடிகள்சாய்ந்து தேற்றமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
கொண்டனைத்து எந்தனுக்கு விதிகள்கூறி குருவான விநாயகரைக் காண்பிப்பீரே
4905.
காண்பிக்க வேண்டுமென்று அடியேன்தானும் கனமான சித்துகளை வினவும்போது
வீண்பாலா வுந்தனையும் சபிப்பேனென்று வினவுடனே சித்துமுனி கூறும்போது
ஆண்மையுள்ள ரிஷிதேவர் அனைவோருக்கும் வப்பனே ஆதரிக்க வென்றுசொல்லி
கேண்மையுடன் அடியேனுங் காலாங்கிதன்னை கீழ்மையுடன் அடியேனும் நினைந்திட்டேனே
4906.
நினைத்தேனே எந்தனையும் ஆதரித்து நிலையான பதின்மூன்றாம் வரையிற்கொண்டு
கனைபோன்ற விநாயகரின் சமாதிபக்கல் சுத்தமுடன் கொண்டுமல்லோ சித்துதாமும்
தினையளவு குற்றமது நேராமல்தான் தீரமுடன் எந்தனுக்கு வுளவுகூறி
பனையளவாய் வுயரமது குளிகைபூண்டு பார்த்தேனே விநாயகரின் சமாதிகாணே
4907.
காணவே விநாயகரின் சமாதிகண்டேன் கருவான சமாதியது மூடவில்லை
பூணவே யங்குசமும் ஒத்தைக்கொம்பும் புகழான யானைமுகம் தன்னைப்போலே
ஊணவே பூமிதனில் சமாதிபூண்டு உறுதியுடன் இருகரமு மேந்திகொண்டு
காணவே வெகுகால மிருந்தசித்து மகத்தான மூன்றுயுகங் கண்டசித்தே
4908.
சித்தான சித்துமுனி விநாயகன்தான் சிறப்பான மேருகிரி தன்னிலப்பா
முத்தான பதிமூன்றாம் வரையில்தானும் முனையான குளிகையினால் கண்டுவந்தேன்
பத்திதரும் நெடுங்கால மிருந்தசித்து பாருலகில் சாத்திரத்தின் முதலாஞ்சித்து
வெத்திபெறும் விநாயகரின் சித்துதம்மை வேகமுடன் மேருவரை பார்திட்டேனே
4909.
பார்த்தேனே யின்னமொரு மகிமைசொல்வேன் பாங்குடனே பதினான்காம் வரையிற்சென்றேன்
தீர்த்தமுடன் மேருகிரி தன்னிலப்பா திறமான சிவலிங்கப் பதியைக்கண்டேன்
ஆர்த்தியுடன் கோடியே ரிஷிகளப்பா அம்மலையில் சூழ்ந்திருக்க யானுங்கண்டேன்
மூர்த்தியுடன் திருமூர்த்தி சொரூபரோடும் முனையான சிவலிங்கங் கண்டிட்டேனே
4910.
சிவலிங்கங் கண்டேனே யதற்குமேலே திருவான சிவலிங்கம் பதினாயிரத்தெட்டு
தவமுடனே நாதாக்கள் ரிஷிகள்தாமும் தண்மையுடன் சிவலிங்கந் தன்னைநோக்க
பவமகற்றி யர்ச்சனைகள் மிகவுங்கூறி பாங்குடனே நாதாக்கள் இருப்பாரங்கே
குவலயத்தில் மற்றொருவர் காணாமற்றான் கொற்றவனே பதினைந்தாம் வரைசென்றேனே