பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6261-6270

6261.
கேளேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கெடியான புலிப்பாணி மன்னாகேளு
மீளேதான் பூநீரு எடுப்பதற்கு மீளாமல் வெகுமாண்பர் மாண்டாரப்பா
ஆளேதான் வகையறியா மாண்பரப்பா வப்பனே சாத்திரங்கள் படித்துக்கெட்டு
சூளேதான் சுடுவாதி மாண்பர்கூடி துறைமுகத்தை காணாமல் கெட்டார்தாமே
6262.
கெட்டதோர் மாண்பர்களின் சாத்திரவண்ணம் கேடறியார் பாடறியார் பயனுங்காணார்
நட்டதொரு பயிரதனை களைகள்போக்க நாதாந்த சித்துமுனி சொல்லைப்போல
விட்டகுறை இருந்ததொரு மாண்பர்போலே வீணாக வாசைகொண்டு மதியுங்கெட்டு
தொட்டலைந்து பூநீராய் எடுக்காமற்றான் சேர்ந்துருண்டு வெகுபேர்கள் மாண்டார்தானே
6263.
மடிந்தாரே வையகத்து மாண்பரெல்லாம் மகதேவர் கடவுளது யேமவித்தை
கடிந்ததொரு பொருளறிய மாட்டாமற்றான் காசினியில் வெகுமாண்பர் மாண்டாரப்பா
முடிந்ததொரு சிவானந்தப் பொருளைக்காண மூதுலகில் யாராலுங் கிட்டுமோசொல்
படிந்தபொருள் முப்பூவின் நிதானமார்க்கம் பாருலகில் விதியாளி யறிவான்பாரே
6264.
விதியான விதியிருந்தால் அதற்குக்கிட்டும் வீணாகக் கருமிகட்குக் கிட்டுமோசொல்
துதியான பராபரமான வஸ்துதன்னை துறைமுறையாய் கண்டறிந்தோன் காண்பான்பாரு
மதியான மூடனுக்கு வாய்க்குமோசொல் மகத்தான ஏமவித்தை பிரம்மவித்தை
கதிகாண எண்ணமது கொண்டபேர்க்கு கைவசமாம் ஏமவித்தை கிட்டும்பாரே
6265.
கிட்டுதற்கு பூவழலை யெடுக்கவல்லான் கீர்த்தியுடன் நடராஜ னருளேவேண்டும்
தொட்டகுறி போலதுபோல் காண்பதற்கு துரைராஜர் குருமுறைகள் வேண்டுமப்பா
பட்டமரம் போல்துளுக்கும் வழலைகாண பராபரியாள் கிருபையது வேண்டுமப்பா
விட்டகுறை யிருந்தாலே லபிக்கும்பாரு விருதாவாய் மாண்டவர் கோடியாமே
6266.
கோடியா மனுகோடி ராஜமன்னர் குவலயத்தில் வழலையுட மார்க்கந்தன்னால்
நாடியே வழலையது பூர்க்குங்காலம் நலமுடனே கண்டறிய மாளாமற்றான்
ஓடியே யிருமாப்பு வனப்புவாய்ந்து ஓகோகோ மாண்பரெல்லாம் மடிந்தாரப்பா
நீடியதோர் பொருளதுவும் விஷகாலந்தான் நிகட்சியுடன் யெடுப்பதற்கு யில்லைதானே
6267.
இல்லையே வெகுபேர்கள் மாண்பரப்பா யெழிலான சாத்திரத்தைப் பாராமற்றான்
அல்லல்படுந் துயரமது வருமையாலே வன்புடனே பூநீரை எடுப்பதற்கு
தொல்லையெனும் சாத்திரத்தை முன்பின்னாக சோராமல் பாடிவைத்தார் சித்தர்யாவும்
கல்லுதெய்வம் பேசுமென்று கையெடுத்து காசினியில் கையுரைத்த காட்சியாமே
6268.
காட்சியாம் கனகமென்ற பொருளையப்பா காசினியில் வெகுபேர்கள் காண்பதற்கு
தாட்சியில்லா சாத்திரங்கள் கண்டாராய்ந்து தடுமாறி தலைமாறி கலையுமாறி
மாட்சியுடன் கோர்வையென்ற சாத்திரத்தை மார்க்கமுடன் காணாமல் மயங்கினார்கள்
ஆட்சிபந்தம் வெகுநூல்கள் சொன்னாருண்டு வப்பனே குருநூல்தான் பாரார்தானே
6269.
பாராமல் மாண்பரெல்லாம் பதியுங்கெட்டு பாங்கான சாத்திரத்தின் முறையுங்கெட்டு
நேரேதான் சாத்திரத்தை விட்டகற்றி நேர்மையுடன் மதியூன்றி பாராமற்றான் 
பூராய மானதொரு ரிஷிகள்நூலில் புகன்றிட்ட மர்மமதை யறியாமற்றான்
சாராய மானதொரு வஸ்துதன்னை சாங்கமுடன் கற்பமென்று கொண்டிட்டாரே
6270.
கொண்டாரே லாகிரிகள் அருந்தியல்லோ கோடான கோடிநூல்கள் மறைத்திட்டார்கள்
விண்டதொரு சாத்திரத்தை வினயங்கொண்டு வீண்காலம் போக்கியல்லோ மடிந்திட்டார்கள்
தண்டனையாஞ் சாபமது வுள்ளுமாகி தாரணியில் வெகுபேர்கள் சமைத்திட்டார்கள்
சண்டமாரு போலே சத்தகாண்டம் சாற்றினேன் போகரே ழாயிரமுங்காணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக