பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6301-6310

6301.
கேட்கவென்றால் அடியேனுங் கானகத்தில் கீர்த்தியுடன் பெண்ணாய்தா னிருந்தோம்
மீட்கமுடன் இரைதேடி போகும்போது மிக்கான கானகத்தில் யாம்திரிந்தோம்
சூட்சமுடன் பாலையென்ற வனத்தில்நாங்கள் சுந்தரமே சித்தொளிவே போகும்போது
ஆட்கள்விட்டு ஒருவரையும் பிரிந்துமல்லோ வையனே கல்லால மரங்கண்டோமே
6302.
கண்டோமே சிவசித்து மாண்பர்தம்மை கைலாச நாதரைப்போல் வேஷங்கொண்டு
உண்டான பொருள்தேடி கற்பமுண்ண உத்தமரே இருவர்தம்மைக் கண்டேன்யானும்
விட்டதொரு வழலையென்ற முப்பூதன்னை விருப்பமுடன் எடுக்கவந்த மாண்பர்தம்மை
சண்டமா ருதம்போல துரத்தியானும் சாங்கமுடன் சீறலது சீறினேனே
6303.
சீறியே யோடுகையில் மாண்பர்தாமும் சிறப்பான கல்லாலின் மரத்தின்பேரில்
மீறியே எனைக்கண்டு பயந்தொடுங்கி மீளாத மரத்தின்மேல் ஏறிநின்றார்
வீரியமாய் அப்பாலே எந்தனைத்தான் விட்டல்லோ கொண்டுமே சிதைத்துப்போட்டார்
கீரியென்னும் விஷமூலி தன்னைத்தானும் கிருபையுடன் எந்தனுக்குக் கொடுக்கலாச்சே
6304.
கொடுக்கவே என்சேனை பிணையிலொன்று கொப்பெனவே நானிறந்த பாவனத்தை
அடுத்துமே கண்டல்லோ வாலோசித்து ஐயனே குருமூலி தேடிவந்து
அடுத்திருந்த எந்தன்முன் வந்துநின்று பாங்கான மூலிதனை முகத்தில்வைக்க
நடுத்தலையில் வில்லறுந்த நாணிபோலே நாதனே உயிர்கொண்டு வந்திட்டேனே
6305.
வந்தேனே என்பிணையுங் கூடியல்லோ வளமான மரம்விட்டு வந்தபோது
சிந்தனையாய் மூலிதனை விட்டகற்றி சீறியே நாமிருவர் வந்தபின்பு
பந்தமுள்ள சிவமாண்பர் இருவர்தாமும் பட்சமுடன் கல்லாலின் மரத்தைவிட்டு
சந்தோஷ மாகியல்லோ இறங்கிமாண்பர் சட்டமுடன் மூலிதனைத் தொட்டிட்டாரே
6306.
தொட்டிட்ட மூலியது எந்தன்நாதா துடர்ந்துமே கைதனையே பற்றியல்லோ
விட்டு விடா தவர்கரத்தை பிடித்துமல்லோ வீறான நாமிருக்குங் கானகத்தில்
சட்டமுடன் கரந்தனையே பற்றியல்லோ சாங்கமுடன் தானிருக்குங் காலந்தன்னில்
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வீரமுடன் விரல்தனை துண்டிட்டாரே
6307.
துண்டிடவே கரமதுவும் எந்தன்பக்கல் துப்புரவாய் விஷமூலி வேகத்தாலே
கண்டிதமாய் அவர்செய்த பாவத்தாலே கர்த்தாவே கரமதுவும் வந்துதென்று
திண்டிரை சூழ்வையகத்தில் சமாதிபூண்ட திரளான வெந்தன்குரு தீர்க்கநாதா
கொண்டுவந்தேன் உந்தமக்கு சாட்சியாக கொற்றவனே கதியென்ன யென்னலாச்சே
6308.
யாச்சென்று சொல்லுகையில் ரிஷியார்தாமும் அங்ஙனவே சர்ப்பமதுக் கோதுவார்பார்
மூச்சடங்கி இருந்ததொரு சர்ப்பந்தன்னை முசியாமல் உயிர்மூலி தான்கொடுத்து
பாச்சலுடன் கானகத்தில் பின்னுமல்லோ பட்சமுடன் இருபேரும் வந்திட்டார்கள்
ஆச்சரிய மானதொரு விஷமூலிதன்னால் வப்பனே பிழைத்ததுவும் அருமைதானே
6309.
தானான சர்க்குருவின் கடாட்சத்தாலும் தாக்கான மனோன்மணியாள் கிருபையாலும்
கோனான மகதேவர் கிருபையாலும் கூர்மையுடன் பிழைத்ததுவும் புண்ணியந்தான்
தேனான சிவமாண்பர் கரமறிந்து தீர்க்கமுடன் வந்ததுவும் பாவமாச்சு
மானான பாவத்துக் கிடங்கொடாமல் மகத்தான சாபமதை நீக்குவீரே
6310.
நீக்கினால் வெகுகோடி புண்ணியந்தான் நிட்களங்க மானதொரு மாண்பருக்கு
ஆக்கமுடன் கரந்தனையே ஒட்டிக்கொள்ள வப்பனே மூலியது கொண்டுவந்து
நோக்கமுடன் தான்கொடுத்து வனுப்பினாக்கால் நெடிதான விரலதுவும் விருட்சந்தன்னில்
பாக்களவு பிறந்ததொரு கதையைப்போலே பாங்கான விரலதுவும் ஒட்டும்பாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6311-6320

6311.
ஒட்டுமே பின்னுமந்த மாண்பர்தாமும் ஓகோகோ வழலைதனைத் தானெடுக்க
கிட்டியே மறுபடியும் வருவாரங்கே கீழான விரலதுவும் அவரைக்கண்டு
எட்டியே தான்துரத்தி கையிலொட்டி எழிலான வங்கமது பங்கம்நீக்கி
சுட்டியே சிவமாண்பர் தானுமப்பா சொந்தமுடன் கைகொண்டு வாழ்குவாரே
6312.
வாழ்ந்தாலே தந்தமக்கு மோட்சமுண்டு வளமான கீர்த்தியது வதிகமுண்டு
ஆழ்ந்ததொரு வார்த்தைக்குக் குறைவில்லாமல் அங்ஙனவே மூலியது வாராய்ந்தல்லோ
தாழ்ந்துமே குருபாதம் வாக்குதப்பி தானடைந்தால் குருவுக்குப் பாவமென்று
சூழ்ந்துமே குருவுரைத்த வாக்குபோலே சூட்சமுடன் செய்யவல்லோ எண்ணலாச்சே
6313.
எண்ணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எளிதான புலிப்பாணி மகனேபாரு
வண்ணமுடன் காலாங்கி கிருபையாலே வளமையுடன் லோகபதி எல்லாங்காண
திண்ணமுடன் குளிகையது பூண்டுகொண்டு தீர்க்கமுடன் சீனபதி சென்றேன்யானும்
அண்ணலெனும் பதாம்புயத்தை யானுங்கண்டு வப்பனே காலாங்கி வரம்பெற்றேனே
6314.
பெற்றதொரு வரத்தினால் அனேகம்பெற்று பேரான பேரின்ப வீடறிந்து
கற்றதொரு சிவயோகி தவக்கியானி கைலாச சட்டமுனி நாதர்கூட்டம்
சுற்றுமுள்ள திருமூல வர்க்கத்தோரும் சுந்தரா னந்தரொடு ரோமந்தானும்
மற்றுமுள்ள சித்தாதி சித்தரெல்லாம் மகிட்சியுடன் மலைதனிலே பார்த்திட்டேனே
6315.
பார்த்தேனே யவரவர்கள் செய்தநூலை பாங்கான சமாதிமுகம் நின்றுகொண்டு
நேர்த்தியுள்ள பெருநூலாங் கிரந்தங்கோடி நெடிதான விரிநூலுஞ் சுருக்கங்கோடி
பூர்த்தியுடன் அவரவர்க்கு யிதவுகூறி புகழான சாத்திரத்தைக் கையிற்பற்றி
தீர்த்தமுடன் சிவலிங்க பதியில்சென்று சிற்பரனே நூல்களை யாம்பூசித்தேனே
6316.
பூசித்தேன் அதிதமென்ற நூல்கள்தம்மை புகழான சீனபதி மாண்பருக்கு
வாசித்தேன் சந்தேகந் தெளிவுநீங்கி வாகுடனே கருவிகர ணாதியந்தம்
நேசித்தேன் சீனபதி பெண்களைத்தான் நெடிதான சாத்திரத்தின் மார்க்கங்கண்டு
ஆசித்தேன் நெடுங்கால மங்கிருந்தேன் வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
6317.
பறந்தேனே குளிகையது பூண்டுகொண்டு பாங்கான யிமயகிரி மேற்கேயப்பா
சிறந்ததொரு புவனமென்ற கிரியில்யானும் சிற்பரனே குளிகைவிட்டு இறங்கியேதான்
நிறைந்ததொரு குகைதனிலே சென்றேன்யானும் நெடிதான தேவரிஷி கோடாகோடி
குறைந்ததொரு கணக்கதுவும் லக்கோயில்லை கோடான கோடிசித்து முனிகண்டேனே
6318.
கண்டதொரு சித்துமுனி ரிஷியார்தாமும் கைலாச புவனகிரி தன்னிற்றானும்
அண்டமுடி போகாமல் யாகஞ்செய்து வப்பனே தானிருக்குங் காலந்தன்னில்
தண்டறிக மானதொரு கானகத்தில் தாட்டீக முள்ளதொரு செந்தேளப்பா
சண்டமா ருதம்போலே ரெக்கைகொண்டு சட்டமுடன் இறங்கிநிற்கப் பார்த்திட்டேனே
6319.
பார்த்தேனே புவனகிரி சிகரந்தன்னில் பாங்கான செந்தேளின் கொடூரந்தன்னை
தீர்த்தமுடன் சிகரம்விட்டு மேலேநோக்கி திகழான கொடிமுனையைப் பற்றிநின்று
வேர்த்துடலும் விஷமதுவும் தலைகொண்டேறி மிக்கான சிகரமென்ற செம்புதன்னை
ஆர்த்துமே தானோக்கி கொட்டும்போது வழகான செம்பதுவும் உருகிப்போச்சே
6320.
உருக்கியே செம்பதுவும் மலையோரத்தில் வுத்தமனே பாய்ந்துமல்லோ லிங்கமாச்சு
மெருகான லிங்கமது செம்புமாகி மேன்மையுள்ள சமாதியென்ற பீடமாச்சு
திருவான பீடமது சித்தர்கண்டு தீரமுடன் சிவலிங்க மென்றுசொல்லி
பருவமுடன் அமாவாசை காலந்தன்னில் பட்சமது குருபூசை செய்வார்தானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6321-6330

6321.
தானான பூசையது செய்யும்போது தாக்கான சிவலிங்கந் தன்னில்நின்று
தேனான ஜலமதுவும் முத்துபோலே தேற்றமுடன் சிவலிங்கந் தன்னிற்பொங்கி
கோனான விஷமதுவும் பொங்கியல்லோ கொப்பெனவே ஜலமதுவாய் சுத்திநிற்கும்
பானான நிலமதனை எடுத்துசித்தர் பாங்குடனே சீசாவில் அடைப்பார்பாரே
6322.
பாரேதான் ஜலமதனை எடுத்துமல்லோ பாங்கான செம்பதனை யுருக்கிக்கொண்டு
நேரேதான் ஆயிரமாங் களஞ்சிதானும் நேர்மையுடன் தானுருவங் காலந்தன்னில்
சேரேதான் இருக்குமுகந் தன்னிலப்பா சேர்வைகண்டு விஷநீரை தாக்குவார்பார்
கூரேதான் ஆயிரத்துக்கோர் களஞ்சிகொடுத்து வுருக்கியல்லோ எடுப்பார்காணே
6323.
காணவே ஆயிரத்து எட்டுமாற்று கனமான தேவேந்திரன் தங்கமாச்சு
பூணவே தங்கமது பிறவித்தங்கம் புகழான சித்துமுனி வழங்குந்தங்கம்
வீணவே பூசைக்கு வுதவுந்தங்கம் வேறுபடாத் தங்கமது சுயம்புத்தங்கம்
நீணவே கைலாச நாதர்தாமும் நீதியுடன் வீற்றிருக்கும் பீடந்தானே
6324.
பீடமாம் ஆயிரங்கண் இந்திரர்க்கு பேரான வாசனத்தின் தங்கமாகும்
கூடகோ புரந்தனுக்கு சிகரந்தங்கம் குவலயத்தில் மாண்பர்களுங் காணாத்தங்கம்
மாடமாளிகை நெருங்கும் மன்னர்தாமும் மார்க்கமுடன் ஆதீனத் தங்கமாகும்
தேடறியா நாதாக்கள் ரிஷிகள்தேவர் தோற்றமுடன் கண்டதொரு தங்கமாமே
6325.
தங்கமாம் புவனகிரி தன்னில்நின்று தாக்கான விஷமீறி வந்ததங்கம்
லிங்கமாம் சமாதியென்ற பீடந்தன்னில் நிஷ்களங்க மாகிவந்த தங்கமாச்சு
புங்கசித்தி எட்டுடனே பிறந்ததங்கம் புகழான நாதாக்கள் வசிக்குந்தங்கம்
பங்கமிலாத் தங்கமது பாரில்மாண்பர் பார்க்காத பிறவியென்ற தங்கமாச்சே
6326.
ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி சுகுணமாரா
பாச்சலென்ற பாஷாண கற்பஞ்சொல்வேன் பாருலகில் நாதாக்கள் சொன்னதில்லை
நீச்சுடைய சர்ப்பமது தான்பிடித்து நீமகனே பாஷாணங் களஞ்சிரெண்டு
மூச்சுடனே சர்ப்பமது தானிருக்க முனியான பாஷாணந் தன்னைவாங்கே
6327.
வாங்கியே அரவத்தின் வாயில்தன்னில் வளமான பாஷாணங் களஞ்சிதன்னை
தூங்கியே திரியாமல் மைந்தாபாரு துப்புரவாய் வாயில் வைத்து தைத்துப்போடு
ஏங்கியே போகாமல் பாண்டந்தன்னில் எழிலாகத் தானடைத்து வாரமிட்டு
ஓங்கியே போகாமல் மேலுமூடி வுத்தமனே பதனமது நாள்தானெட்டே
6328.
எட்டான நாளதுவுஞ் சென்றபின்பு யெளிதான பாண்டமதை திறந்துமைந்தா
கட்டான அரவத்தின் வாயைத்தானும் கடுகெனவே தானவிழ்த்து பார்க்கும்போது
திட்டமுடன் அரவமது ஜீவன்செத்து தீர்க்கமுடன் உயிரதுவும் சற்றேநிற்கும்
சட்டமுடன் பாஷாணந் தனையெடுத்து சாங்கமுடன் பாம்புக்குப் பாலைவாரே
6329.
வார்க்கையிலே யரவமது உயிருண்டாகி வளமான அரவமது மலமேசெல்லும்
பார்க்கையிலே பாஷாணம் விஷந்தானேறி பாங்கான காயகற்ப மாச்சுதப்பா
தீர்க்கமுடன் பாஷாணந் தனையெடுத்து திணையளவு வாகவல்லோ மண்டலந்தான்
ஏற்கையிலே மண்டலமும் மூன்றுகொண்டால் யெழிலான காயமது இருக்கும்பாரே
6330.
அறுகுமே பாஷாண கற்பத்தாலே எழிலான கற்பமது கொண்டபேர்க்கு 
குறுகியே தேகமது வயிரம்போலாம் குவலயத்தில் சித்துமுனி தம்மைப்போலே
அறுவதுவும் மிகவாகி புத்தியுண்டாய் அவனியிலே நீயுமொரு சித்தனாவாய்
நறுவலென்ற திரைநரையும் அற்றுப்போகும் நாதாந்த சித்தொளிவு நிதியுமாச்சே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6331-6340

6331.
சித்தான சித்துமுனி ரிஷிகளெல்லாம் தேசமதில் பலபலவாய் நூல்கள்கூறி
முத்தான பாஷாண கற்பஞ்சொல்ல மூதுலகில் மறைத்துவைத்தார் சித்தரெல்லாம்
சத்தசா கரங்கடந்து குளிகைபூண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று
புத்தியுடன் காலாங்கி தாள்பணிந்து புகழான கற்பமதைக் கூறிட்டேனே
6332.
கூறினேன் கற்பமதைக் கொண்டபேர்க்கு குவலயத்தில் நெடுங்கால மிருக்கலாகும்
மாறிட்ட மேனியது தங்கம்போலாம் மகத்தான வாசியது மேல்நோக்காது
நின்றிட்ட மேனியது தவளம்போலாம் நிட்களங்க வாசியது மேலோடாது
வீறிட்டு வார்த்தையது மொழிசொன்னாலும் வீணாகித் தேகமது குண்ணாதன்றே
6333.
அன்றான புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே சொல்லுகிறேன் உந்தமக்கு
குன்றான மலையேறி குகைகடந்து கூறான சுவர்ணகிரி பதியமர்ந்து
வென்றிடவே குளிகையது பூண்டுகொண்டு வீறான சிகரமென்ற பதியைக்கண்டேன்
தென்றிசையில் தட்சணா மூர்த்திநாயன் தோற்றமுடன் கண்டதொரு கூர்மந்தானே
6334.
தானான கூர்மமது தன்னைக்கண்டேன் தாக்கான திரேதாயி னுகத்திலப்பா
மானான பிரளயங்கள் வந்தபோது மகத்தான கூர்மமது மலையிற்சென்று
தேனான மனோன்மணியாள் இருக்கும்பீடம் தெரிசனமே செய்வதற்கு மனதிலுன்னி
பானான பார்லோகப் பிரளயத்தில் பட்சமுடன் கூர்மமது வந்ததாச்சே
6335.
வந்ததொரு கூர்மத்தைக் கண்டேன்யானும் வளம்பெரிய சுவர்ணகிரி மலையிலப்பா
அந்தமுடன் மலையைவிட்டு கீழிறங்கி வப்பனே சுனையருகே சென்றேன்யானும் 
சிந்தனையாய் மனதுவந்து படியிறங்கி சிற்பரனைத் தெரிசிக்க தியானங்கொண்டு
சந்தோஷ மாகியல்லோ சுனையோரத்தில் சட்டமுடன் இறங்கையிலே கண்டிட்டேனே
6336.
கண்டவுடன் கூர்மமது எனைப்பணிந்து கைலாச நாதரென்று தாள்பணிந்து
தெண்டமுடன் பதாம்புயத்தை பணிந்துபோற்றி தெளிவாக சுனையேறி மேலேநின்று
அண்டர்பிரான் எந்தனையுங் காணவந்த வன்பான போகரிஷி நாதாகேளும்
துண்டரிக மாகவல்லோ தட்சணாயன் துப்புரவாய் சாபமது தந்திட்டாரே
6337.
தந்ததொரு சாபத்தால் திரேதாயுகத்தில் சட்டமுடன் பிரளயத்தில் வந்தேனிங்கே
அந்தமுடன் நெடுங்காலம் சுனையில்யானும் வன்புடனே வாசமது செய்திருந்தேன்
சித்ததொரு சுவர்ணகிரி சுனையில்தானும் சிறப்பான சித்துமுனி வந்ததில்லை
வந்தையுடன் எந்தனுக்கு சாபந்தீர்க்க விட்டகுறை இருந்ததினால் வந்தீர்பாரே
6338.
பாரேதான் காலாங்கி நாதபாதா பட்சமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சாபமதை நிவர்த்திசெய்து தீர்க்கமுடன் எந்தனையு மீட்பீரானால்
நேரேதான் உந்தமக்குக் காயகற்பம் நெடுங்காலந் தானிருக்க யான்கொடுப்பேன்
கூரேதான் வார்த்தையது மொழியுங்கூறி குறிப்புடனே வரலாறு கூறலாச்சே
6339.
கூறவே கூர்மமது சொல்லும்போது கொற்றவனே சாபமது நிவர்த்திசெய்தேன்
மீறவே கூர்மமதை சாபம்நீக்கி மிக்கான கற்பமதைக் கேட்கும்போது
மாறவே எந்தனுக்குத் தெரியவோதி மகத்தான கற்பமதைக் கேட்கும்போது
நாறலுடன் கூர்மமது வயிற்றிருக்கும் நலமான குளிகைதனைத் தருகலாச்சே
6340.
தருகவே வயிற்றிலுள்ள காயகற்பம் தண்மையுடன் மனதுவந்து அடியேன்தானும்
பெருகவே யான்வாங்கி மண்டலந்தான் பேரான குளிகைதனில் குன்றியுண்ண
மெருகலுடன் தேகமது இறுகியல்லோ மேதினியில் நெடுங்கால மிருப்பதற்கு
பொருகவே காயாதி கற்பங்கொண்டு பேறான வுலகுதனில் வசித்திட்டேனே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6341-6350

6341.
வசித்ததொரு குளிகையினால் எந்தனுக்கு வாகான மகிமைகளு மனேகமுண்டு
பசியதுவு மில்லையப்பா பண்புள்ளோனே பாலகனே சித்தர்களுக் கிடைக்குமோசொல்
நிசிதமுள்ள காயாதி கற்பந்தன்னை நிகழ்ச்சியுடன் முன்னிருந்த நாதர்தாமும்
உசிதமுடன் கண்டவரும் யாருமில்லை வுத்தமனே நாதாக்கள் சொல்லார்பாரே
6342.
சொல்லாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் சுவர்ணமென்ற மலையிலப்பா மேற்பாகத்தில்
வெல்லவே குளிகைகொண்டு வடியேன்தானும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
புல்லவே வனந்தனிலே கலைமான்தன்னை புகழ்ச்சியுடன் அடியேனுங் கண்டபோது
நல்லதொரு கலைமானும் என்னைக்கண்டு நலமுடனே ஓடிவந்து பணியலாச்சே
6343.
பணிந்துமே எந்தனிட பாதம்போற்றி பட்சமுடன் எந்தனையும் வினவிகேட்க
துணிந்துமே காலாங்கி நாதர்பாதம் துப்புரவாய் மனதுவந்து அடியேன்தானும்
அணிகடனின் பதாம்புயத்தின் சீஷனென்றேன் ஆத்தாளின் கடைபாத தூளியென்றேன்
மணிபோன்ற வார்த்தையது கூறும்போது மகத்தான என்குருவே என்னலாச்சு
6344.
என்னவே காலாங்கி நாதசீஷா எழிலாக எந்தனுக்கு வந்தசாபம்
பன்னவே புஜண்டரிஷி யார்தாமும் பாங்கான கானகத்தில் யாகஞ்செய்ய
துன்னவே யடியனால் வந்தநேர்மை துப்புரவாய் யாதென்று வினவிக்கேட்பீர்
முன்னமே பெரியோர்கள் செய்தயாகம் மூதுலகில் அடியேனும் அறியேன்தானே
6345.
தானான புஜண்டமகா ரிஷியார்தாமும் தன்மையுடன் தவஞ்செய்யுங் காலந்தன்னில்
கோனான வுமதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிபோலே
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் சாபமதை நீக்கவெண்ணி
பானான குருபரனார் ரிஷியாசீர்மம் பாங்குடனே யான்வணங்கி நின்றிட்டேனே
6346.
நின்றேனே புஜண்டமகா ரிஷியார்பக்கல் நிட்களங்க மானதொரு சமாதிதன்னை
சென்றேனே நெடுங்காலம் நானிருந்தேன் தேஜொளியின் கிருபையது வண்மையாலே
வென்றதொரு யான்செய்த பாவந்தன்னை வேட்கையுடன் அணிதவரா வண்ணம்யானும்
குன்றுடனே மலைதேடி சமாதிபக்கல் கொற்றவனே சாபமதால் சென்றிட்டேனே
6347.
இட்டதொரு சாபமதை நீக்கியல்லோ எழிலாக வெந்தனுக்குக் காட்சிதந்து
சட்டமுடன் ஞானோப தேசங்கொண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று
திட்டமுடன் மனோலயத்தால் அருளுந்தந்து தீர்க்கமுடன் ஆசீர்மஞ் சாபம்நீக்கி
விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே விடுதிக்கிப் போகவென வருள்கொள்வீரே
6348.
கொள்ளவென்று கலைமானுங் கூறும்போது கொப்பெனவே காலாங்கி கடாட்சத்தாலே
தெள்ளமுர்த மானபரா பரியின்பாதம் தேற்றமுடன் அடியேனும் முடிவணங்கி
எள்ளளவுந் தீங்குமிக நேராமற்றான் எழிலான மனோன்மணியைப் போற்றிச்செய்து
உள்ளபடி கலைமானைப் பாதுகாக்க உவமையுடன் என்மனதில் எண்ணினேனே
6349.
எண்ணியே கலைமானின் சாபம்தீர்ந்தேன் எழிலான காயாதிதான் கொடுக்க
உண்ணவே நெடுங்காலந் தானிருந்தேன் உத்தமனே சித்துமுனி ரிஷியார்கூட்டம்
வண்ணமுடன் கலைமானின் கற்பந்தன்னை வாகுபெற வுண்டவர்கள் ஆருமில்லை
கண்ணபிரான் கொண்டதொரு கற்பந்தானும் கலைமானின் கற்பத்துக் கீடாகாதே
6350.
ஈடான கற்பமதை உண்டேன்யானும் எழிலான வையகத்து மாண்பரெல்லாம்
தேடாமல் கற்பமதை யுண்டேன்யென்று தேசமதில் சன்னியாசி வேஷங்கொண்டு
கோடான கோடிபொருள் சம்பாதிக்க கூறினார் கற்பமது கொண்டேன்யென்று
தாடாண்மை கொண்டதொரு பொய்ழஞானிக்கு தாரணியில் தனங்கொடுத்து கெட்டார்பாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6351-6360

6351.
பாரேதான் கற்பமதைக் கொண்டபோது பாங்குடனே சீனபதி சென்றேன்யானும்
நேரேதான் குளிகையது பூண்டுகொண்டு நெடிதான கடலோரஞ் சென்றுயானும்
சீரேதான் சுவர்ணகிரி இடபாகத்தில் சிறப்புடனே மலையேறி சென்றேன் யானும்
ஆரோதான் கண்டவர்கள் ஆருமில்லை வப்பனே சுவர்ணகிரி கண்டிட்டேனே
6352.
கண்டேனே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
சண்டமா ருதம்போல குளிகைகொண்டு சாங்கமுடன் சுவர்ணகிரி இடபாகத்தில் 
தண்டகா ரணியமதில் அடியேன்தானும் சாங்கமுடன் சமாதிமுகந் தன்னில்நின்றேன்
அண்டர்பிரான் அருளினது கடாட்சத்தாலே வப்பனே கடலோர மமர்ந்தேன்தானே
6353.
தானான வையகத்து மகிமையெல்லாம் தாக்கான சுவர்ணகிரி கடலோரத்தில்
மானான மகத்துவங்கள் அதிகமென்று மார்க்கமுடன் சுந்தரா னந்தரேசர்
தேனான சாத்திரங்கள் பாடியல்லோ தேற்றமுடன் குகைதனிலே வைத்தாரப்பா
கோனான யென்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குக் கூறினாரே
6354.
கூறியதோர் நூலதுவும் பொய்யாதென்று கொற்றவனே சமாதியென்ற பீடம்நின்று
மீறியே யஷ்டாங்க யோகஞ்சென்று மிக்கான தவநிலையில் நிற்கும்போது
நீறுடை சுந்தரா னந்தரேசர் நிஷ்களங்க சொருபமென்ற சுடரேகொண்டு
மாறுடைய சித்தனைப்போல் வேஷங்கொண்டு மார்க்கமுடன் தரிசனங்கள் தந்திட்டாரே
6355.
தந்தாரே எந்தனுக்குத் தரிசனங்கள் தாக்கான எந்தனையும் ஆரென்றேதான்
சிந்தனையாய் மனதுவந்து கேட்கயானும் சிறப்புடைய காலாங்கி சீஷனென்றேன்
அந்தமுடன் சீனபதி விட்டுயானும் வையனே குளிகையது பூண்டுகொண்டு
விந்தைகளை யறியவென்று இடபாகத்தில் விருப்பமுடன் யான்பணிந்து துதித்திட்டேனே
6356.
துதிக்கையிலே சுந்தரா னந்தரேசர் துப்புரவாய் எந்தனுக்குத் துகளகற்றி
மதிப்புடனே எந்தனையு மனதுவந்து மார்க்கமுடன் கண்டதொரு வினயந்தானும் 
விதிப்புடைய விட்டகுறை இருந்ததாலும் விருப்பமுடன் உந்தமக்கு உபதேசங்கள்
கதிபெறவே ஞானோபதேசஞ் செய்து கருவான கேசரியுந் தருவேன்பாரே
6357.
பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாங்குடனே சுந்தரா னந்தரேசர் 
சேரேதான் எந்தனுக்குக் குளிகைதந்து தேற்றமுடன் உலகுபதி மகிமையெல்லாம்
நேரேதான் சதாகாலஞ் சீஷனாக நேர்மையுடன் என்மீதில் மனதுவந்து
கூரேதான் கேசரியின் மார்க்கந்தன்னை குறிப்புடனே எந்தனுக்குக் கூறினாரே
6358.
கூறவே புலிப்பாணி மைந்தாகேளு குவலயத்தில் எந்தனுக்கு சீஷமார்க்கம்
தேறவே கண்டல்லோ வாராய்ந்தேதான் தேற்றமுடன் இருப்பதற்கு முறையுஞ்சொல்வேன்
மாறவே தொண்டுசெய்யும் சீஷனுக்கு மகத்தான சன்மார்க்க மேதென்றாக்கால்
ஆறவே விசுவாச வருளும்வேண்டும் வப்பனே அறிவுஜெபம் வேண்டும்பாரே
6359.
வேண்டுமே ஆசையுடன் இன்பம்வேண்டும் விருப்பமுடன் தவமுடனே பொறுமைவேண்டும்
தாண்டவம்போல் குருமொழியின் வணக்கம்வேண்டும் தாரணியில் ஜீவகாருண்யம் வேண்டும்
ஆண்டகையின் பதாம்புயத்தை நண்ணல்வேண்டும் வப்பனே இரக்கமுடன் ஈகைவேண்டும்
தூண்டியதோர் கருமான மின்னஞ்சொல்வேன் துப்புரவாய்த் துகளகற்றி இருக்கநன்றே
6360.
நன்றாக இறவாமல் முயற்சிதேடல் நலமான கற்புடைமை நண்ணல்வேண்டும்
குன்றான கொடியதொரு பாவம்நீக்கி குவலயத்தில் இருப்பவனே சன்மார்க்கன்தான்
தென்றிசையில் அகத்தியர்க்கு நேர்மையாக தேற்றமுடன் உபதேசஞ் செய்யவல்லோன்
நன்றிபுரி வேணாடு வாழுமாண்பர் நலமான சித்துமுனிக் குவமையாச்சே