பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6201-6210

6201.
கற்பமென்ற நத்தையது யாதென்றாக்கால் கருவான பிரிதிவினில் வளர்ந்தபிண்டம்
சொற்பமென்று நினையாதே துய்யபாலா துப்புரவாய் பிரிதிவினில் வளர்ந்தசொர்ணம்
விற்பனர்கள் ராஜாதி யோகிமாண்பர் விருப்பமுடன் கொண்டருளும் காயகற்பம்
துப்புரவாய் இருந்தோர்க்கு ஒன்றுமில்லை துறைகோடி வரைகோடி கற்பமாமே
6202.
வரையான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி இந்திரகோபா
திரைமரைவு நேராமல் முப்புமார்க்கம் செப்புகிறேன் உந்தமக்கு புனிதவானே
முறையான வழிபாடு முன்னந்தம் முனையான சுருக்கமது இதிலடக்கம்
குறையாது சிடிகையென்ற வேதையப்பா குவலயத்தில் சித்துமுனி சொல்வார்தானே
6203.
தானான மனோன்மணியாள் கிருபையாலும் தாக்கான காலாங்கிக் கடாட்சத்தாலும்
தேனான முப்பூவின் வளமைதன்னை தேற்றமுடன் வெளியாங்க மாகச்சொல்வேன்
பானான முப்பூவை யெடுக்குமார்க்கம் பாலகனே முறைபாடு வழிபாடாகும்
மானான பங்குனியாம் பருவந்தன்னில் மார்க்கமுடன் அமாவாசை பருவந்தானே
6204.
பருவமாம் வடக்குவெகு தூரமப்பா பாங்கான வளர்பூமி தன்னிற்சென்று
உருவுடனே நடுச்சாம வேளைதன்னில் வுத்தமனே மனோன்மணியை மனதிலுன்னி
குருவான பூநீரை யெடுப்பதற்கு கொற்றவனே வெடிகாலந் தன்னிலப்பா
பருவமுடன் பூர்க்குமந்த முப்பூதன்னை பட்சமுடன் தானெடுத்து வரையக்கேளே
6205.
கேளேதான் முப்பூவென்ற பூநீர்தன்னை கவனமுடன் பீங்கானிற் பதனம்பண்ணு
நாளேதான் போகாமல் குருமுடிக்கும் நலமாகக் கைபாகஞ் சொல்வேனப்பா 
பாளேதான் போகாமல் பூநீர்தன்னை பாங்கான நிலமதனிற் சொல்லக்கேளு
ஆளேதான் பூநீர்க ளெடுத்தபூமி வதிலிருக்கும் மர்மமதை யறைவேன்பாரே
6206.
பாரேதான் வோராளு மட்டமாக பான்மையுடன் குழியதுதான் தோண்டும்போது
நேரேதான் பிரமமென்ற கல்தானப்பா நேர்மையுடன் தானிருக்கும் நிகலக்கேளு
தீரேதான் பிரமமென்ற சுக்கான்கல்லை தீரமுடன் தானெடுத்து சொல்லக்கேளு
சேரேதான் கல்லதனைப் பதனம்பண்ணு செயலான பாக்கியமும் அனேகமுண்டே
6207.
உண்டான யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே முப்பூவின் மார்க்கமப்பா
திண்டான கல்லுப்பு வேணமட்டும் திரமுடனே தானெடுத்து புகலக்கேளும்
வண்மையுடன் கல்லுப்பைப் பதனம்பண்ண வாகுடனே போகும்வகை வண்மைபாரீர்
வண்பாக மூன்றையுந்தான் முடிப்பதற்கு நலமான மும்மூர்த்தி சொரூபந்தானே
6208.
தானான பழச்சாறு என்றமார்க்கம் தன்மையுடன் முடிப்பதற்கு பருவஞ்சொல்வேன்
கோனான குருவையென்ற நெல்தானப்பா கொற்றவனே அவிக்காமல் தானெடுத்து
பானான வரிசியது படிதானான்கு பாலகனே தானளந்து வரிசைபாரீர்
மானான புதுப்பாண்டந் தன்னில்தானும் மார்க்கமுடன் தான்சமைக்கும் வகைதான்கேளே
6209.
வகையான வரிசியது பொங்கியேதான் வண்மையுடன் தானிறக்கி யாரப்போடு
தொகையுடனே மறுபாண்டந் தன்னிலிட்டு தோறாமல் ஜலமதுவும் சோடசந்தான்
முகையுடனே பாணியென்ற தண்ணீர்தன்னை முசியாமல் தான்காய்ச்சி இறக்கிக்கொண்டு
பகையான வரிசியென்ற சாரந்தன்னில் பக்குவமாய் நிலம்விட்டு மூடக்கேளே
6210.
மூடவே ரவியென்ற வெயில்தன்னில் முனையான காடியென்ற பாண்டந்தன்னை
நீடியே நாள்தோறும் அருணன்முன்னில் நிலையான பாண்டமதை வெயிலில்வைத்து
சாடியென்ற பாண்டமதில் ஜலமுந்தானும் தாக்கான ரவியினிலே சுண்டுமட்டும்
கூடியதோர் ஜலமதனைக் காய்ச்சிமைந்தா கொற்றவனே குறைவுக்கு விட்டிடாயே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6211-6220

6211.
விட்டிடவே நாள்தோறும் குறைவுமட்டும் வீரான காடியென்ற பாண்டந்தன்னில் 
கொட்டளவு வெந்நீரை யாறவைத்து குறையாமல் நாள்தோறும் இப்படியேவாரு
சட்டமுடன் பாணடமதை யாறுதிங்கள் சாங்கமுடன் தினந்தோறும் ரவியில்வைத்து
திட்டமுடன் ராக்காலம் பனியில்வைக்க தீர்க்கமுடன் செய்குவது பாகமாமே
6212.
பாகமாங் காடியென்ற பாண்டந்தன்னை பரிதிமுன்னே தினந்தோறும் வைக்கும்போது
நாகமது சீரியதோர் விஷத்தைப்போல நாதாந்த காடிக்குக் காரமேறி
வேகமுள்ள சரக்குக்குக் காலனாச்சு வேகாத சரக்கெல்லாம் வெந்துநீரும்
யூகமுடன் காலாங்கி பாதம்போற்றி வுத்தமனே காடியது வழிசொன்னேனே
6213.
சொன்னதொரு காடிதன்னை யாறுதிங்கள் துப்புரவாய் ரவிதனிலே வைக்கும்போது
நன்னயமாய் நாதாக்கள் செய்பாகந்தான் நலமான பழச்சாறு என்னலாச்சு
வின்னமது நேராது முப்புமார்க்கம் விள்ளார்கள் சித்துமுனி ரிஷிகள்தேவர்
பன்னவே சாத்திரத்தில் சூட்சமுப்பு பாடவில்லை சித்தர்களும் பாடார்தானே
6214.
தானான ஆதியென்ற முப்புதன்னை தண்மையுள்ள பதினெண்பேர் சித்துதாமும்
மானான சாத்திரத்தில் சூட்சமாக மார்க்கமுடன் முடிக்கும்வகை சொல்லார்தாமும்
கோனான குருநூலாம் சத்தகாண்டம் கூறினேன் போகரே ழாயிரத்தில்
பானான சூட்சமென்ற முப்புதன்னை பாருலகில் மாண்பருக்கு பாடினேனே
6215.
பாடினேன் காடியென்ற பழச்சார்சொன்னேன் பாண்மையுள்ள நாதாக்கள் மறைத்துவிட்டார்
நீடியதோர் சிவமுப்பு யிந்தமுப்பு நீடாழி யுலகமெலாம் இதிலடக்கம்
கூடியதோர் கருவிகர ணாதியந்தம் குருவான ஜெயநீர்கள் இதிலடக்கம்
ஆடியதோர் சரக்கு அறுபத்துநான்கு வப்பனே சிவமுப்பால் மடிவுகாணே
6216.
மடியவே சரக்கு வறுபத்துநான்கும் மார்க்கமுடன் கைபாகஞ் செய்பாகந்தான்
முடியுமே கைபாகந் தவறிட்டாலும் முனையான வைத்தியத்துக் காதியாகும்
அடியான காயகற்ப மிதுவேயாகும் வப்பனே காடியென்ற பழச்சார்தானும்
நெடியான காரமது யேற்றுதற்கு நேர்மையுடன் கைபாகஞ் சொல்லக்கேளே
6217.
சொல்லவே காடியென்ற மார்க்கந்தன்னை தோறாமல் திராவகமாய் முடிப்பதற்கு
வெல்லவே வாலையென்ற சக்ரவாலை வேகமுடன் தீநீராய் வாங்குதற்கு
புல்லவே காடியென்ற மட்பாண்டத்தில் புகழான வாலையதை மேற்பொதிந்து 
சில்லுடனே சீலையது வலுவாய்ச்செய்து தீர்க்கமுடன் வாலுகையாம் அடுப்பிலேற்றே
6218.
ஏற்றவே தீபதூபந் தான்கொடுத்து எழிலான வாலையென்ற பாண்டத்திற்கு
நாற்றிசையுங் குழலமைத்து சீஸாவைத்து நலமுடனே திராவகத்தை இறக்கிக்கொண்டு
மெற்புறமாம் ஜலமதனைத் தள்ளிநீக்கி மேன்மையுடன் மறுபடியும் ஜலத்தைவாறு
ஆற்கமுடன் மறுபடியும் குழலமைத்து வப்பனே திராவகத்தை வாங்கிடாயே
6219.
வாங்கியே திராவகத்தை பதனம்பண்ணு வளமான காடியென்ற பழச்சார்தன்னை
தூங்கியே திரியாதே வருண்மைந்தாகேள் துப்புரவாய் குருமுடிக்குந் திராவகந்தான்
ஏங்கியே திராவகத்தை முடியாமற்றான் எழிலான வையகத்து மாண்பரெல்லாம்
சாங்கமுடன் சாத்திரத்தை யுணராமற்றான் சட்டமுடன் பலதுறையாய்ப் போனார்தாமே
6220.
தாமான வழலையது எடுக்கும்பூமி தாக்கான நெடுங்காசி தன்னிலப்பா
பூமான்கள் செல்வதற்கு வளப்பஞ்சொல்வேன் புகழான திண்டிக்கல் பீம்பாறையாகும்
நாமேதான் சொன்னபடி திருபுவனமாகும் நலமான யாவடியார் கோயில்தானும்
வேமேதான் விலாடபுரம் தன்னில்தானும் மிக்கான வயநாடு பூமியாச்சே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6221-6230

6221.
ஆச்சப்பா தென்காசி பதியில்தானும் வப்பனே கன்னியா குமரியாகும்
நீச்சான வளையலென்ற குப்பிதன்னை நேர்மையுடன் தான்முடிக்கும் காளாஸ்திரிதானும்
மூச்சுடனே நெடுந்தூரஞ் சென்றாலப்பா முனையான பாளமென்ற கோயம்புத்தூர்
வீச்சுடைய பூமியது பள்ளநாடு வீரான கல்லழகர் நாடுதாமே
6222.
நாடான நற்மதா தேசமப்பா நலமான சித்தூரஞ் சிங்கிநாடு
பாடாண்மை கொண்டதொரு சீனதேசம் பாங்கான முப்பூவுக் கிடமேயாகும்
கோடான கோடிமனு மாண்பர்க்கெல்லாம் கொற்றவர்க்கு இந்நாடே வஞ்சிநாடு
தாடாண்மை கொண்டதொரு தேசமப்பா தாரணியில் பூவழலை யெடுக்கும்நாடே
6223.
எடுப்பதற்கு இந்நாடு சிந்துதேசம் எழிலான தேசமெல்லாம் பின்னாடாகும்
கொடுப்பதற்கு சிவயோகி மாண்பருக்கு கோடான கோடிமுறை யிதிலொப்பாகும்
தடுப்பதற்கு யிப்பூமி விட்டாலப்பா தாக்கான பூமிவள தமக்குமில்லை
உடுக்கையென்ற பிரகக்கல் தானுமப்பா வுத்தமனே எடுக்கும் வகை செப்பினேனே
6224.
செப்பினேன் வழலையது யெடுப்பதற்கும் செயலான காடியது முடிப்பதற்கும்
ஒப்பான முப்பூவின் மார்க்கந்தன்னை ஒழுங்குடனே முடிப்பதற்கு வழிதான்சொன்னேன்
தப்பிதங்கள் இல்லாமல் குருமுடித்தல் தண்மையுள்ள முப்பூவும் முடியும்பாரே
6225.
பாரேதான் பூநீறு சுத்திசெய்து பாகமுட னெடுப்பதற்கு வகையைக்கேளும்
நேரேதான் பூநீரு படிதானப்பா நிலையான முன்சொன்ன காடிதானும்
சீரேதான் பூநீரில் விட்டுமைந்தா சிறப்புடனே கலக்கியதை தெளுநிறுத்து
கூரேதான் ரவிதனிலே காயவைத்து கொப்பெனவே யுப்பதனை யெடுத்திடாயே
6226.
எடுத்துமே யிப்படியே பத்துமுறை கலக்கி யெளிதான ரவிதனிலே காயவைத்து
தொடுத்ததொரு வுப்பதனைப் பதனம்பண்ணு தோறாமல் பத்துமுறை செய்தவுப்பை
கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில் கவனமுடன் பதனமாய்ச் செய்துகொண்டு
நடுத்தெருவாங் கருமியென்ற மாண்பருக்கு நவிலாதே நவின்றிட்டால் சாபமாமே
6227.
சாபமா மின்னமொரு மார்க்கங்கேளு தப்பாது காலாங்கி வாக்குதானும்
பாபமது நேராது புண்யவானே பாருலகில் சித்துமுனி சொல்லார்தாமும்
கோபமது கொண்டல்லோ முனிவர்தாமும் கூறாரே சிவமுப்பு சூட்சந்தன்னை
தாபமுடன் மனோன்மணியாள் கடாட்சத்தாலே சாங்கமுடன் அடியேனும் நவின்றிட்டேனே
6228.
இட்டதொரு பிரம்மக்கல் தனையெடுத்து எழிலான கருப்பதனை நீக்கிமைந்தா
தொட்டளவு குருசொல் வாக்குபோல துறைமுகமுங் கண்டறிந்து பளிங்குக்கல்லாம்
சட்டமுடன் கல்லதனை யிடித்துமைந்தா சாங்கமுடன் பச்சையென்ற பூநீர்தன்னை
திட்டமுடன் கல்லுக்கு ரெண்டேயாகும் தீரமுடன் தான்கலந்து பாண்டம்வையே
6229.
பாண்டமது தனிலமைத்து பாகங்கேளிர் பாங்காக முன்னரைத்த காடிநீரை
வேண்டியே பூநீறுக் கரைதானப்பா விருப்பமுடன் பாண்டமதிலூட்டு மைந்தா
தூண்டியதோர் கருமான மிரண்டும்வேக துப்புரவாய்க் காடியென்ற நீரினாலே
மாண்டிடவே தானெரிப்பாய் காடிநீர்தான் மார்க்கமுடன் கண்டமட்டும் எரித்திடாயே
6230.
எரித்துமே பச்சையென்ற காடிநீரால் ஏற்றமுடன் தானலம்பி ரவியிற்போடு
மரித்துமே பிரம்மமென்ற கல்தானப்பா மகத்தான எண்ணையது கக்கிப்போச்சு
குரித்தபொருள் பிரமமென்ற சுன்னக்கல்தான் கூரான தேகமது வதிகங்கொண்டு
தெரிந்துமே பொடிப்பொடியாம் தகடுபோலாம் வெளிவான சுன்னத்துக் கிடந்தானாச்சே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6231-6240

6231.
ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு வப்பனே காலாங்கி சொன்னநீதி
காச்சலென்ற சுன்னமதைத் தானெடுத்து கருவான கல்வமதி லிட்டுமைந்தா
மாச்சலென்ற சிற்றண்டங் கருதானப்பா மகத்தான பிரமக்கல் சுன்னந்தன்னை 
வீச்சுடனே தானரைப்பாய் மடியுமட்டும் வீறான சுன்னமதை பில்லைசெய்யே
6232.
செய்யவே சிறுபில்லை காசதாக செம்மலுடன் ரவியுலர்த்தி சொல்வேன்பாரீர்
துய்யதொரு பில்லைமுகந் தானுலர்ந்து துப்புரவாய் மூசையிட்டு சீலைசெய்து
வையகத்தே தானிருக்கும் கருமமான வளமான பாகமதை யறியாமற்றான்
கைபாகந் தவறாமல் மைந்தாநீயும் கருத்துடனே வுலையில்வைத்து வூதுவாயே
6233.
ஊதவே சுன்னமது வாகுமாகும் உத்தமனே மூசையது வழுகுமட்டும்
நீதமுடன் ஊதிடவே சுன்னமாகும் நிலையான சுன்னமது பிரம்மக்கல்லாம்
தோதமுடன் மூசைதனை யுடைத்துப்பாரு சுந்தரனே சுன்னமது பிரமக்கல்லாம்
சாதமது தான்கொடுக்கும் சுக்கான்கல்லாம் சட்டமுடன் நாதாக்கள் பெருமைபாரே
6234.
பாரேதான் சுன்னமென்ற பிரமக்கல்லை பாங்குடனே பீங்கானிற் பதனம்பண்ணு
நேரேதான் சரக்குக்குக் கேறலாச்சு நெடிதான பிரமக்கல் லென்றசுன்னம்
ஆரோதான் முடிப்பார்க ளப்பாகேளு ஆதியென்ற சுன்னமதை முடியாரப்பா
சீரேதான் சாத்திரத்தின் உளவாராய்ந்து சிறப்புடனே பார்த்துவைத்த சுண்ணமாமே
6235.
சுண்ணமா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் சுந்தரனே ரகுபாலா புண்யவானே
வண்ணமுடன் கல்லுப்பு பெரிதாய்க்கொண்டு வளமுடனே படியதுவும் தானெடுத்து
திண்ணமுடன் பாண்டமதில் இட்டுமைந்தா தீர்க்கமுடன் முன்சொன்ன காடிநீரை
நண்ணமுடன் மறுபாண்டந் தன்னிலப்பா நலமுடனே ஜலமதனை படிதான்வாரே
6236.
வார்க்கையிலே முன்சொன்ன காடிநீர்தான் வளமான பாண்டமதில் இட்டுமைந்தா
தீர்க்கமுடன் தான்கலக்க தெளுவிறுத்து தீரமுடன் பாண்டமதை யடுப்பிலேற்றி
ஏர்க்கவே யுப்பதுவும் பூர்க்குமட்டும் எழிலான வுப்பதனைக் காய்ச்சியல்லோ
சேர்க்கவே மறுபடியுங் காடிவிட்டு சிறப்புடனே கலக்கியதை யெடுத்திடாயே
6237.
எடுத்திடவே யிப்படியே பத்துமுறைக்காச்சு எழிலான கல்லுப்பும் குருவுப்பாகும்
கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில் கிருபையுடன் பதனமது மிகவாய்ச்செய்து
தொடுப்பதற்கு முன்போலே வுப்பைநன்றாய் சுத்தமுடன் சேர்க்கும்வகை விபரங்கேளு
அடுத்துமே முன்சொன்ன கைபாகந்தான் அப்பனே முறைபாடு கூறுவேனே
6238.
கூறவே முப்பென்ற மார்க்கந்தன்னை குவலயத்தில் மாண்பர்களுந் தெளிவதாக
ஆறவே முன்சொன்ன வழலைமார்க்கம் வப்பனே பலமதுவும் எடுத்துக்கொண்டு
மாறவே பிரமமென்ற முப்புதன்னை மார்க்கமுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
தேறவே கல்லுப்புச் சுன்னந்தன்னை தேற்றமுடன் பலமதுவும் ஒன்றாய்க்கூட்டே
6239.
கூட்டியே மூன்றையுந்தான் ஒன்றாய்க்கூட்டி குறிப்புடனே வீரமுடன் புழுகுதானும்
தேட்டமுடன் வார்கனது ரெண்டேயாகும் தெளிவுடனே முன்சொன்ன காடிதன்னை
வாட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே காயவைத்து நிஷ்களங்க மானதொரு வகலில்வையே
6240.
அகலான பாண்டமது தன்னில்வைத்து வப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
பகலான ரவிதனிலே காயப்போடு பாங்குடனே காய்ந்தபின்பு செப்பக்கேளு
நிகலவே கோழியென்ற புடந்தான்போடு நிஷ்களங்க மாகவல்லோ நீறிப்போகும்
புகலவே பற்பமதை பதனம்பண்ணு புகழான மனோன்மணிக்கு பூசைசெய்யே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6241-6250

6241.
பூசையாம் மனோன்மணியாள் ஆராதாரம் பொங்கமுடன் தான்செய்து எடுத்துமைந்தா
ஆசையது கொள்ளாது வருண்மைந்தாகேள் வப்பனே சீசாவிற் பதனம்பண்ணு
காசுபணம் தேடுதற்கு உரிமைகேளு கனமான பாஷாணம் பலந்தானொன்று
மாசுபடா முப்பூவும் பலந்தான்காலாய் மார்க்கமுடன் கல்வமதில் போட்டிடாயே
6242.
போட்டவுடன் சரக்கதுவும் ஒன்றாய்க்கூட்டி பொங்கமுடன் முன்னுரைத்த காடிநீரால்
வாட்டமுடன் தானரைப்பாய் சாமமப்பா வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே காய்ந்தபின்பு நீதியுடன் முன்சொன்ன மார்க்கம்போலே
தேட்டமுடன் புடமதுவுங் கோழிபார் தெளிவுடனே போடுவதும் முறைதான்கேளே
6243.
முறையான புடமதுவும் ஆறிப்பின்பு முனையான பற்பமதை யெடுத்துமைந்தா
நிறைபோடு வணுவளவுங் குறையுமில்லை நீட்டமுடன் பற்பமது பாரமெத்த
குறையாது பாஷாணமென்ன சொல்வேன் குவலயத்தில் சித்துமுனி கூறாவண்ணம்
அறைந்தேனே உலகுபதி மாண்பருக்கு வப்பனே சிவயோக தலத்தில்நில்லே
6244.
நிற்கையிலே மனோன்மணியாள் மனதுவந்து நிஷ்களங்க மாகவல்லோ வுனக்குமைந்தா
சொற்பமென்ற வாதமது பலிக்கும்பாரு சுந்தரனே வுன்னைப்போல சித்துமுண்டோ
அற்பமென்று நினையாதே துய்யபாலா வருண்மைந்தா முப்பாலே யெல்லாஞ்சித்தி
விற்பனர்கள் கொண்டாடும் இந்தவேதை மேதினியில் சமுசாரிக்கானவாறே
6245.
வாரான பற்பமது போக்குசொல்வேன் வளமான வெள்ளீயந் தன்னைத்தானும்
கூரான சேரதுதான் ஒன்றேயாகும் குறிப்புடனே தானுருக்கி செப்பக்கேளும்
நீரான பாஷாண பற்பந்தன்னை நீமகனே வராகனிடை காலதாக
சேரோடும் வெள்ளீயம் உருக்கியல்லோ செம்மலுடன் பற்பமதைத் தாக்கிடாயே
6246.
தாக்குவாய் வெள்ளீயம் பற்பத்தாலே தண்மையுள்ள நீரதுவும் உரிந்துகொள்ளும்
வாக்குடனே காலாங்கி மொழிபொய்யாது வளமையுடன் போகரே ழாயிரந்தான்
நோக்கமுடன் நீர்வடிந்து வெள்ளிதன்னை நுணுக்கமுடன் வருமைவருங் காலந்தன்னில்
ஏக்கமது கொள்ளாமல் வெள்ளிதன்னை யெளிதாக சமுசாரி யுண்ணலாமே
6247.
உண்ணவென்றால் சாபமது யாதுமில்லை வுத்தமனே சரக்குவறு பத்துநான்கும்
திண்ணமுடன் இம்முறைபோல் செய்வாயப்பா தீரமுடன் சரக்குவறு பத்துநான்கும்
வண்ணமுடன் நிற்றுதற்கு பிசகோயில்லை வளமான முப்பூவின் சுன்னமப்பா
சுன்னமுடன் முப்பூவின் காரத்தாலே நலமான சரக்கெல்லாம் நீறிப்போமே
6248.
நீறுமே சூதமென்ற சரக்குதானும் நீதியுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
வீறுடனே முப்பூவைச் சரியாய்க்கூட்டி வீரமுடன் முன்சொன்ன காடிதன்னால்
மாறுதலும் நேராமல் பற்பந்தன்னை மார்க்கமுடன் தானரைப்பாய் சூதங்கூட்டி
நூலுடனே கலசமென்ற பாண்டந்தன்னில் துப்புரவாய் சில்லிட்டுச் சீலைசெய்யே
6249.
சீலையது எழுசீலை வலுவாய்ச்செய்து சிறப்புடனே ரவிதனிலே காயவைத்து
வாலையென்ற எந்திரமாம் புவனவாலை வளமான வாலுகையாம் அடுப்புதன்னில்
காலையது ஜாமமது நாலதாக கருவான சூதமதை எரிப்பாய்நீயும்
மாலையது சூதமதை எடுத்துப்பார்க்க மகத்தான கடுங்கார சுன்னமாச்சே
6250.
சுன்னமென்றால் சுன்னமது என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செய்யும்வேதை
வின்னமது வாராது யிந்தப்போக்கு விருப்பமுடன் செய்வதற்கு மனதுவந்து
அன்னமெனுங் காடியென்ற பழச்சாரப்பா ஆகாகா சித்துமுனி மறைத்தாரங்கே
சொன்னமது முப்பூவால் கைக்குள்ளாச்சு சோறாமல் செய்பவர்க்கு சித்தியாமே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6251-6260

6251.
சித்தியாம் பஞ்சபூத சரக்கைத்தானும் சிறப்புடனே தானெடுத்து செப்பக்கேளீர்
வெத்தியுடன் முப்பூவை சரக்குபாதி வேகமுடன் காடியின்தன் பழச்சாற்றாலே
சுத்தியுடன் தானரைத்து பில்லைசெய்து துப்புரவாய் ரவிதனிலே காயப்போடு
சுத்தியுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து சாங்கமுடன் புடமதுவுங் கோழிதானே
6252.
தானான கோழியது புடமதாக தண்மையுடன் ஆறினபின் னெடுத்துப்பாரு
கோனான குருசொன்ன வாக்குபோலே கொற்றவனே பற்பமது தவளம்போலாம்
மானான பற்பமதை எடுத்துமைந்தா மகத்தான சீசாவில் பதனம்பண்ணு
பானான ரவிமதியில் தாக்கவல்லோ பாண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்த்தானே
6253.
பண்பான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்னு பாங்குடனே பற்பமதை யொன்றுதாக்க
நண்பான மாற்றதுவும் ஏழதாகும் நலமான புடமதுவுக் கேகாவர்ணம்
திண்பான பட்டசெம்பு ஆறுவெள்ளி தீர்க்கமுடன் தான்கொடுக்க மாற்றெட்டாகும்
உண்மையுடன் தங்கமது நாலுக்கொன்று வுத்தமனே சேர்க்க நலமாகும்பாரே
6254.
பாரேதான் அவமதுவும் ஒன்பதாகும் பாங்கான புடத்தங்கம் பிறவித்தங்கம்
சீரேதான் பஞ்சமுகங் கருத்துக்காணும் சிறப்புடனே மறைத்துவைத்தார் சித்துதாமும்
நேரேதான் சரக்கு வறுபத்துநான்கு நேர்மையுடன் முன்சொன்ன முப்பூவாலே
வீரேதான் சுன்னமென்ற முப்பூவாலே விண்ணுலகும் மண்ணுலகும் காணலாமே
6255.
காணலாம் முப்பூவால் அனந்தம்போக்கு காசினியில் நாதாக்கள் ஆடுங்கூத்து
பூணவே சிவயோகி சித்தருக்கு புகட்டவில்லை இந்தவழி முப்பூ மார்க்கம்
தோணவே கைமுறையாய் எடுத்துபாகம் துப்புரவாய் வையகத்து மாண்பருக்கு
வேணதொரு கருவிகர ணாதியந்தம் விருப்பமுடன் பாடிவைத்த நுண்மைதானே
6256.
பாடினேன் முப்பூவின் வழலைமார்க்கம் பாருலகில் சகலசித்து மாடும்பாரு
நீடியதோர் முப்பூவைக் குன்றிவீதம் நீதியுடன் மண்டலந்தான் கொண்டாயானால் 
வாடியதோர் திருமேனி சடலந்தானும் வண்மையுடன் காயாதி கற்பத்தாலே
கூடியதோர் தேகமது சட்டைதள்ளும் குணமான முப்பூவின் காட்சிகேளே
6257.
காட்சியாம் முப்பூவைக் கொண்டபேர்க்கு காசினியில் நரைதிரையும் இல்லையப்பா
மாட்சியுடன் நெடுங்கால மிருக்கலாகும் மகத்தான வாசியது மேல்நோக்காது
நீட்சியுடன் பதாம்புயத்தை நண்ணலாகும் நிஷ்களங்க மானதொரு சித்தனாவான்
மீட்சிபெற வையகத்தில் மாண்பரெல்லாம் மேன்மையுடன் எந்நாளும் துதிப்பார்பாரே
6258.
துதிக்கையிலே சித்துமுனி ரிஷியார்தாமும் துரைராஜ சிவயோகி இவரேயென்பார்
மதிக்கவே எல்லவர்க்கு போகவானாய் மகத்தான காயாதி கற்பத்தாலே 
விதித்ததொரு வயததுவும் மேலதாகி மேதினியில் வெகுகால மிருப்பாயப்பா
ததியான முப்பூவின் கைபாகந்தான் சாற்றவில்லை வெகுகோடி ரிஷிகள்பாரே
6259.
கோடியாங் காலாங்கி கிருபையாலே கூறினேன் போகரே ழாயிரந்தான்
தேடியே பார்த்தாலும் கிட்டாதப்பா தேசத்தில் விட்டகுறை இருந்தால்கிட்டும்
வாடியே யலையாதே மன்னாகேளு மகத்தான போகரே ழாயிரந்தான்
பாடியதோர் போகரே ழாயிரத்தில் பாங்கான கடைக்காண்டம் முப்பூபாரே
6260.
பாரேதான் போகரே ழாயிரத்தில் பட்சமுடன் காண்டமது ஏழுதன்னில் 
நேரேதான் கடைக்காண்டம் ஏழிலப்பா நெடிதான முப்பூவாம் சூட்சுமப்பூ
சீரேதான் வையகத்து மாண்பருக்கு சிறப்புடனே பாடிவைத்தேன் சூட்சமாக
ஆரோதான் கருவாளி செய்வானப்பா வப்பனே யண்டபிண்ட மறிவான்கேளே