பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6801-6810

6801.
கூறுவீர் இதிகாச புத்திசொல்லி குவலயத்தில் ஆள்கண்டு பதமுங்கண்டு
தேறியதோர் சிறுபால ரானாலுந்தான் தேற்றமுடன் புத்திமதி மிகவுரைத்து 
மீறியே கட்டளைக்கு மஞ்சிடாமல் மிக்கமனது வந்துமல்லோ மதிகங்கூறி
ஆறியே சினமதுவும் மிகவகற்றி வப்பனே நூல்கொடுத்து பதனஞ்சொல்லே
6802.
சொல்லவே புலிப்பாணிக் குண்மைகூறி சோறாமல் மனத்திடமும் நன்றாய்சொல்லி
வெல்லவே வரவுக்குத் தக்கதாக வேதாந்த சின்மயத்தை யோதச்சொல்லி
புல்லவே சாத்திரத்துக் குறுதிசொல்லி புகழான சத்தியங்கள் வாங்கியேதான்
நல்லதொரு சாத்திரத்தைத் தந்தீரானால் நலமாக இருக்குமென்று நவின்றிட்டாரே
6803.
நவின்றதொரு வாக்கதுவும் பிசகாமற்றான் நாதாக்கள் சொல்லதற்கு இடையூறின்றி
குவின்றிடவே புலிப்பாணி புனிதவானே குவலயத்தில் பத்தியுண்டாய் மாண்பர்கண்டு
தவின்றிடவே விதியாளி குணமுங்கண்டு தக்கபடி நூலீய்ந்தால் தருமமாகும்
புவின்றிடவே யுந்தனது மனதுபோலே பூதலத்தில் நடப்பதுவுங் கடாட்சந்தானே
6804.
தானான காலாங்கி நீதிபோலே சட்டமுடன் போகரே ழாயிரத்தை 
கோனான வையகத்தில் யானும்பாடி கொற்றவனே யுந்தனுக்கு உபதேசித்தேன்
தேனான சாத்திரத்தை பாதுகாத்து தேசத்தில் கொடுப்பதுவும் உந்தன்பாரம்
பானான கருமிகட்கு கொடுப்பாயானால் பாலகனே பாவம்வந்து எய்தும்பாரே
6805.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி பளிங்குள்ளானே
நேரேதான் அவரவர்கள் மகிமைதன்னை நேர்மையுடன் சொல்லுகிறேன் உண்மையாக
சீரேதான் சித்தரெல்லாம் ஒன்றாய்க்கூடி சிறப்புடனே காலாங்கி நாதர்தம்மை
வீரேதான் சீனபதி தன்னிலேகி விருப்பமுடன் மனதுவந்து வந்திட்டாரே
6806.
வந்தாரே காயாதி கொண்டசித்து வளம்பெரிய சீனபதி மார்க்கந்தன்னை
அந்தமுடன் காலாங்கி சமாதிபக்கல் வற்புதமாய் வெகுகோடி நாதர்தாமும்
சொந்தமுடன் எனதையர் காலாங்கிநாதர் சுடரொளியைக் காணவென்று மனங்களித்து
விந்தையாய் உபதேசம் பெறவேநண்ணி விருப்பமுடன் சமாதியிடம் வந்தார்தானே
6807.
தானான நெடுங்காலஞ் சமாதிருந்த தண்மையுள்ள நாதாக்கள் ரிஷிகள்தாமும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் முன்பாக வினயங்கூறி
தேனான மகத்துவங்கள் இதிகாசங்கள் தேற்றமுடன் செய்தல்லோ மேவல்செய்தார்
பானான பரஞ்சுடராம் எந்தன்நாதா பட்சமுடன் அதிசயத்தை கண்டிட்டேனே
6808.
கண்டாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கனகரதி பூஷணமே கல்விவானே
அண்டமதில் ஆகாயந் தன்னிலல்லோ மகாபூதா னந்தநாதர்
உண்டைவில்லு கவுண்டேகும் ஆகாயத்தில் வுத்தமனே யந்தமட்டுஞ் சொல்வேனென்று
கண்டிதமாய்க் காலாங்கி வாக்குந்தந்து கனமுடனே வாசியோகம் நடத்தினாரே
6809.
வாசியைத் தானடத்தி பூதநாதர் வளமான கேசரத்தினம் பரத்தில்
மாசியெனும் மண்டலத்தில் யேகியல்லோ மன்னவனார் மண்டலந்தான் அங்கிருந்து
காசிபதி கடலோரந் தன்னிற்சென்று கனமான சீனபதி யருகில்வந்து
தேசியெனும் வாசியைத்தான் நடத்தியல்லோ தேற்றமுடன் சீனபதி இறங்கினாரே
6810.
இறங்கினார் நாற்பதுநாள் மண்டலந்தான் யெழிலான வாகாசந் தனிலிருந்து 
சிறந்ததொரு வாசியைத்தான் நடத்தியல்லோ சிறப்புடனே வையகத்தோர் காணவென்று
பறந்துமே வையகத்தில் இறங்கியேதான் பாங்கான காலாங்கி சமாதிமுன்னே
இறந்ததொரு சவம்போலே விழுந்தாரல்லோ எழிலாக பூதநாத சித்துதானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6811-6820

6811.
சித்தான சித்துமுனி நாதர்தாமும் சிறப்பான காலாங்கி தம்மிடத்தில்
பத்தியுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து பான்மையுடன் சிரங்குனிந்து கரங்குவித்து
முத்திபெற எந்தனுக்கு உபதேசங்கள் முனிவரே செய்யவென்று வடிபணிந்து
சத்தியமாய் எந்தனைத்தான் ஆதரிக்க சட்டமுடன் கடாட்சமது வருள்செய்வீரே
6812.
அருளான வருளதுவும் பெற்றுமல்லோ வன்புடனே பூதாநாத னந்தசித்து
இருளான இருளகற்றி மையம்பூண்டு எழிலான சீனபதி விட்டுமல்லோ
குருவான டமரகனா ரந்தனாரை குறிப்புடனே காண்பதற்கு மனதிலெண்ணி
திருவான ஜோதிமயந் தன்னைக்காண தீர்க்கமுடன் தென்பொதிகை வந்திட்டாரே
6813.
வந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமான புலிப்பாணி யறிவுள்ளானே
இந்தமா னிலத்தில் வெகுவதிசயங்கள் எழிலான சித்துமுனி கோடாகோடி 
சுந்தரனார் காலாங்கி நாதர்பக்கல் துப்புரவாய் வந்தவர்கள் லக்கோயில்லை
விந்தைகளும் மிகச்செய்தார் ரிஷியார்தாமும் விண்ணுலகு கருவூரார் சித்துபாரே
6814.
பாரப்பா புலிப்பாணி பண்புள்ளானே பாலகனே எந்தனிரு மணியேகேண்மோ
ஆரப்பா வாகாய மண்டபத்தில் வப்பனே நட்சத்திர வளவுமட்டும்
நேரப்பா வாசியைத்தான் நடத்தியல்லோ நேர்மையுடன் ஆகாயஞ் சென்றாரில்லை
கூரப்பா கருவூரான் என்றசித்து கொற்றவனே வாகாயஞ் சென்றார்காணே
6815.
காணவே கருவூரார் என்றசித்து காசினியில் மகிமைவெகு கண்டசித்து
தோணவே நடேசரைத்தா னுண்டுசெய்த தோறாத கருவூரார் என்றசித்து
மானமருங் கல்வியுள்ள சித்தரெல்லாம் மானிலத்தில் மதிப்பதற்குக் கீர்த்திகொண்ட
ஆணவமாங் காமியத்தை விட்டொழித்த வப்பனே கருவூரார் என்றசித்தே
6816.
சித்தான சித்துமுனி கருவூரார்தான் சிறப்பான காலாங்கி நாதர்முன்னே
சுத்தமுடன் காலாங்கி நாதர்தம்மை சுந்தரனார் சீனபதி சமாதிதன்னில்
வித்தகனார் பார்த்திருக்க மகிமைபூண்டு விண்ணுலகம் ஆகாயஞ் செல்வேனென்று
புத்தியுடன் நட்சத்திர வளவுமட்டும் பரஞ்சுடரே செல்வேனென்று யேகினாரே
6817.
ஏகவே வாசியோகஞ் செய்துகொண்டு எழிலான நட்சத்திர மண்டலத்தில்
போகவே மனவுறுதி கொண்டுமல்லோ பொங்கமுடன் மூன்றுமண்ட லந்தானப்பா
சாகாமல் ஆகாய மண்டலத்தில் சட்டமுடன் மூன்றுமண்ட லமிருந்து
வேகமுடன் வாசியோகஞ் செய்துகொண்டு வேட்கையுடன் பூமிதனில் இறங்கிட்டாரே
6818.
இட்டாரே கருவூரார் என்றசித்து எழிலான வையகத்தின் மகிமைகோடி
சட்டமுடன் செய்தல்லோ யாகம்பூண்டு சதுராக நெடுங்காலந் தாமிருந்தார்
திட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தீர்க்கமுடன் கருவூரார் தன்தனக்கு
வாட்டமுடன் முதலியதோர் மகிமையெல்லாம் வளமுடனே உபதேசஞ் செய்தார்பாரே
6819.
பாரப்பா புலிப்பாணி பளிங்குள்ளானே பகருகிறேன் சித்தருட மகிமைதன்னை
ஊரப்பா சீனபதி தேசந்தன்னில் வுத்தமனார் காலாங்கி நாதர்தம்மை
சேரப்பா சமாதியிடம் சென்றுமல்லோ செம்மலுடன் காலாங்கி தம்மைக்காண
ஆரப்பா வென்றல்லோ காலாங்கிநாதர் வப்பனே மனதுவந்து கூறென்றாரே
6820.
கூறென்று சொல்லுகையில் சித்தரான குணமான சுந்தரா னந்தமூர்த்தி
தேறலுடன் யாரென்று வினவிக்கேட்க தெளிவான காலாங்கி நாதர்தாமும்
மாறலது வாராமல் சித்துதாமும் மகத்தான காலாங்கி நாதருக்கு
ஆறலுடன் அஞ்சலித்து மனதுவந்து வப்பனே சுந்தரனார் என்றிட்டாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6821-6830

6821.
என்றாரே சுந்தரா னந்தமூர்த்தி எழிலான காலாங்கி நாதருக்கு
வென்றிடவே என்தேவா லோகநாதா விருப்பமுடன் தங்களிடம் மனங்களித்து
சென்றுநான் வந்தேனே சீனதேசம் செம்மலுடன் அடியேனைப் பாதுகாத்து
குன்றான வுபதேசம் எந்தனுக்கு கொப்பெனவே கூறுமென்று பணிந்திட்டாரே
6822.
பணிந்துமே சுந்தரா னந்தர்தாமும் பட்சசுடன் காலாங்கி நாதருக்கு
துணிந்துமே எந்தனது மகிமைதன்னை துப்புரவாய் காட்டுகிறேன் குருவேந்தாகேள்
கணிதமுடன் மேகமண்ட லத்தில்யானும் கர்த்தாவே வாசியோகஞ் செய்துகொண்டு
பணிவுடனே வாகாசஞ் சென்றுமல்லோ பாங்குடனே மேகத்தோ டேகுவேனே
6823.
ஏகுவேன் மேகத்தோ டிணக்கமாகி எழிலான திருப்பாலின் கடலின்மேலே
போகுவேன் மேகங்கள் ஜலந்திரட்டி பொங்கமுடன் தானிறங்குங் காலந்தன்னில்
தாகுடனே மேகமது வாகாசத்தில் தகமையுடன் செல்லுமது பக்கமெல்லாம்
வாகுடனே யாகாசந் திரிந்துயானும் வளமுடனே நெடுங்காலம் இருப்பேன்தானே
6824.
தானான பூமிசஞ் சாரமில்லை தண்மையுடன் மேகத்தில் மேகமாக
கோனான மண்டலத்தில் நெடுங்காலந்தான் கொற்றவரே வாசியோகஞ் செய்துகொண்டு
தேனான மனோன்மணியை துதித்துமல்லோ தேற்றமுடன் நெடுங்காலந் தானிருந்தேன்
பானான பரஞ்சுடரே சொரூபானந்தா பரம்பொருளே வுபதேசம் பகருவீரே
6825.
பகரவென்று சுந்தரா னந்தர்கேட்ட பாருலகில் இதிகாச மகிமைகண்டு
நிகரமுடன் இவர்தமக்கு உபதேசங்கள் நீதியுடன் கூர்வதற்கு மனங்களித்து
உகரமென்ற வட்சரத்தை யுபதேசித்து வுத்தமனார் சுந்தரா னந்தருக்கு
ககரமுடன் யரகமுதல் வுயிர்களெல்லாம் கருவான வட்சரத்தை யோதினாரே
6826.
ஓதவே யஞ்சலிகள் மிகவும்பெற்று வுத்தமனார் சீனபதி கண்டுமல்லோ
நீதமுடன் விடையதுவும் பெற்றுமல்லோ நிலையான தம்பதிக்கு யேகினார்காண்
சேதமது வாராமல் சித்துதானும் ஜெகதலத்தில் நெடுங்கால மிருந்தாரல்லோ
தோதமுள்ள சித்தாதி சித்தரெல்லாம் தோறாமல் என்குருவைக் கண்டிட்டாரே
6827.
கண்டாரே யின்னமொரு கருமானங்கேள் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
அண்டரண்ட தேசமெல்லாஞ் சுற்றிவந்தேன் வப்பனே பாஷாண விளைவுகண்டேன்
துண்டரிக மானதொரு விளைவுமார்க்கம் துப்புரவாய் யான்கண்டு விடமுங்கண்டேன்
சண்டமா ருதம்போலே விளைவுகண்டேன் தண்மையுள்ள பாஷாண விளைவுகேளே
6828.
கேளப்பா கருமாவின் விளைவுமார்க்கம் கெடியான டில்லிக்கு மேற்கேயப்பா
ஆளப்பா பூமியெல்லாம் சுருமாவாகும் வப்பனே நீலாஞ்சனக் கல்லுதானும்
கேளப்பா வாராது அஞ்சனங்கள் கொற்றவனே சுருமாவின் கீழ்மட்டந்தான்
கீளப்பா வஞ்சனமாம் பாறையல்லோ கெடியான கல்லினுட பூமியாமே
6829.
பூமியாம் டில்லிக்கு கிழக்கேயப்பா புகழான கெந்தகத்தின் பூமியாகும்
சாமியது கிருபையினால் விளையுங்கெந்தம் சதுரான சித்தர்களுக் குகந்தகெந்தி
வாமிசிவ காமியம்மாள் வீற்றிருக்கும் வளமான சிவப்பு கெந்தி யங்கேயுண்டு
நாமிகவே குளிகைகொண்டு சென்றேனப்பா நலமான டில்லிக்குக் கிழக்கேதானே
6830.
கிழக்கான பூமியப்பா நெடுந்தூரந்தான் கிளையான யாறுண்டு சுனைதானுண்டு
பழக்கமதாய் மாண்பர்களும் போனதில்லை பாங்கான குறும்பருட நாடேயாகும்
அழகான பூமியது சொல்லவொண்ணாது வப்பனே கெந்தகந்தான் விளையும்நாடு
தழலான செடிமரங்கள் பூண்டுமில்லை தாரணியைக் குளிகைகொண்டு கண்டிட்டேனே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6831-6840

6831.
இட்டதொரு கிழக்குக்கு தெற்கேயப்பா எழிலான திருச்சங்கு மைந்தனல்லோ
சட்டமுடன் ஆண்டிருந்த ராஜ்ஜியத்தின் சதுரான மேற்புறத்தின் ஓடையப்பா
வட்டமுள்ள பூமியது நெடுந்தூரந்தான் வளமான தாளகத்தின் பூமியாகும்
திட்டமுடன் பூமியெல்லாந் தாளகந்தான் திரமான நடுமையேறி தாரமாமே
6832.
அரிதான வரிதார மென்னசொல்வேன் வப்பனே வதின்கீழே மனோசிலையுமாகும்
சரிதான விளைவல்லோ பூமியெல்லாம் சாங்கமுடன் தாளகத்தின் பூமியாகும்
பரியான தங்கமது விளையும்நாடு பாருலகில் நாதாக்கள் கண்டதுண்டு
திரிலோகந் தான்மதிக்கும் தங்கமப்பா தீர்க்கமுடன் விளைகின்ற நாடுதானே
6833.
நாடான நாடதுதான் சொல்வேனப்பா நலமான புலிப்பாணி நன்புள்ளானே
காடான காடெல்லாம் யான்திரிந்து கனமான குளிகையது கொண்டுமல்லோ
மேடான பூமியது திரிந்துமேதான் மேன்மையுள்ள கற்பரிபாஷாணங் கண்டேன்
தாடாண்மை யுள்ளதொரு பாஷாணந்தான் தாரணியில் தங்கமிகச் செய்யலாமே
6834.
செய்யவே கற்பரிபாஷாணந் தன்னால் செயலான நவலோகம் வெல்லலாகும்
துய்யதொரு நவலோகம் நீறிப்போகும் துப்புரவாய் லோகங்கள் சத்துருவேயாகும்
வெய்யவே நடுமையந் தன்னிலப்பா வேட்கமெனும் அவுல்பாஷாணந் தானாகும்
பையவே யதின்கீழே தானிருக்கும் பாங்கான ஜலபாஷாணந் தான்பாரே
6835.
பாரப்பா யின்னமொரு பரிகாரந்தான் பாலகனே ஸ்தூலமது வுறுதிசெய்ய
ஆரப்பா மணலிரும்பு கொண்டுவந்து வப்பனே வுருக்கியல்லோ தகடடித்து
சீரப்பா முன்சொன்ன பாஷாணத்தை சிறப்புடனே நிம்பழத்தின் சாற்றினாலே
ஊரப்பா மூன்றுவகை பாஷாணந்தான் வுத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே
6836.
நாலான சாமமது தானரைத்து நலமான இரும்பதனை தகடதாக்கி
பாலான சரக்கெல்லாம் மேலேபூசி பட்சமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் கோழியென்ற புடந்தான்போடு
சூலான வயமதுவும் களங்கமாகி துப்புரவாய்த் தானிருக்கும் வயந்தான்காணே
6837.
காணவே யவரெலாந் தானெடுத்து கருவாகப் புடமதுவாய்ச் சேர்த்துக்கொண்டு
தோணவே கடைசரக்கு செப்பக்கேளிர் தோறாமல் கெவுரியென்ற வீரந்தானும்
மாணவே கெந்தகமும் லிங்கந்தானும் மகத்தான சிங்கியுடன் பூரமாகும்
நீணவே வகைவகைக்குப் பலந்தான்காலாய் நிஷ்களங்க மாகவல்லோ பழச்சார்தானே
6838.
தானான சாரதுவும் பிழிந்துகொண்டு தண்மையுள்ள வயப்பொடியாங் களங்குதன்னில்
தேனான செம்பழத்தின் சாற்றினாலே தெளிவுறவே தானரைப்பாய் நாலுசாமம்
பானான வில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து
மானான வோட்டிலிட்டுச் சீலைசெய்து மகத்தான மண்மறைவிற் புடத்தைப்போடே
6839.
போடேதான் இப்படியே புடந்தான்போடு பொங்கமுடன் தானரைத்து வில்லைதட்டி
நீடேதான் முன்னுரைத்த பாகம்போலே நீதியுடன் வில்லைதட்டிக் காயவைத்து
கூடேதான் சில்லிட்டுச் சீலைசெய்து கொற்றவனே கோழியென்ற புடந்தான்போடு
போடேதான் மண்மறைவிற் பத்துமுறைபோடு பொலிவான வயமதுவும் சிவக்கும்பாரே
6840.
சிவக்குமே அயமதுவும் பாஷாணத்தால் சிறப்புடைய குற்றமது பதினொன்றும்போம்
தவப்பலனைக் கொண்டவர்க்கு சித்தியாகும் தகமையுள்ள மணலிரும்பு செந்தூரந்தான்
தவப்பனைக் கொண்டோர்கள் காணமாட்டார் வப்பனே புத்தியுள்ள புனிதவானே
பவக்கடலை விட்டகற்றி பாலாநீயும் பாருலகில் இருப்பதுவே புண்ணியமாமே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6841-6850

6841.
புண்ணியனா யிருக்கவென்றால் பூபாலாகேள் புகழான செந்தூர முண்பதற்கு
திண்ணமுடன் தேனதனில் மண்டலந்தான் தீரமுடன் தானிருந்த தேகங்கற்றூண்
வண்ணமுடன் வாசியது மேல்நோக்காது வளமான செந்தூரந் தானுமல்லோ
நண்ணமுடன் சட்டையது தள்ளும்பாரு நாதாந்த சித்தர்கள்தான் ஆடுங்கூத்தே
6842.
கூத்தான செந்தூரம் மண்டலந்தான் குறிப்புடனே கொண்டவர்க்குப் பலனைக்கேளு
நீத்தமுடன் நெடுங்கால மிருக்கலாகும் நெடியான ரோகமது கடலேபோகும்
சாத்தகி யாழ்வார்தானுங் கொண்டகற்பம் தாரணியில் வெகுகால மிருந்தாரல்லோ
பூத்தமலர் முகசுகுண மாதர்தம்மை புகழாக வாயிரம்பேர் கூடலாமே
6843.
கூடலாங் கிருஷ்ணாவ தாரனல்லோ கொற்றவனார் சிலகாலம் உண்டகற்பம்
ஆடலாம் தேசவிளை யாட்டையெல்லாம் வப்பனே வயமென்ற செந்தூரத்தால்
ஓடலாம் வெகுதூரம் நடக்கலாகும் வுத்தமனே நடந்தாலும் யிளைப்போயில்லை
தேடலாம் வெகுகோடி திரவியங்கள் தேடினால் பலனொன்று மில்லைதானே
6844.
இல்லையே செந்தூரம் வேதைகாண எழிலான வெள்ளியது களஞ்சிநூறு
தொல்லையெனும் பிறவியது மாற்றம்போல தோறாமல் வர்ணமது சொல்லப்போமோ
கொல்லனது வுலையில் வுருக்கியல்லோ கொற்றவனே செந்தூரங் களஞ்சிதாக்கு
வல்லதொரு வெள்ளியது பழுப்புமாகி மகத்தான யேமமது சொல்லொண்ணாதே
6845.
ஒண்ணாத தங்கமது மாற்றுசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்து
தண்ணமுடன் மாற்றதுவோ லக்கோயில்லை தாடாண்மை கொண்டடொரு வுறத்ததங்கம்
பண்ணுதற்கு விட்டகுறை யில்லாவிட்டால் பலிக்குமோ பாராளும் மாண்பருக்கு
நண்ணமுடன் மனதுவந்து இந்தபாகம் எழிலாக செய்பவர்க்கு பலிக்குந்தானே
6846.
பலிக்குமே இத்தங்கம் பிறவித்தங்கம் பாரிலுள்ள சிவயோகிக் கானதங்கம்
ஒலிக்குமே ஜெகஜோதியான தங்கம் வுத்தமனே கருமிகட்கு வாய்க்காதப்பா
நலியாளர் தங்களுக்கு இந்ததங்கம் நாதியற்ற பேர்களுக்கு நவிலவேண்டும்
பலியாது கருமிகளாய் இருப்பாரானால் பாருலகில் கருமிகட்கு வாய்க்காதன்றே
6847.
அன்றான யின்னமொரு போக்குசொல்வேன் வப்பனே புலிப்பாணி யன்புள்ளானே
குன்றான செந்தூர மென்னசொல்வேன் குறிப்பான வயமதுவும் பலந்தான்பத்து
வென்றிடவே நிம்பழத்தின் சாற்றினாலே விருப்பமுடன் சுத்தியது செய்துமல்லோ
நன்றாகக் கல்வமதி லிட்டுமைந்தா நலமுடனே தானரைக்க மருந்தைக்கேளே
6848.
கேளப்பா முருங்கைவேர் பட்டைதன்னை கிருபையுடன் தானிடித்து சார்பிழிந்து
பாளப்பா போகாமல் பத்துசாமம் பாங்குடனே தானரைப்பாய் சுன்னநீரும்
ஆளப்பா பலமதுவும் ஒன்றேயாகும் அப்பனே தான்போட்டு வரைத்துமல்லோ
சூளப்பா வில்லையது லகுவாய்ச்செய்து சுந்தரனே ரவிதனிலே காயப்போடே
6849.
காய்ந்தபின்பு பில்லையதை எடுத்துமைந்தா கருவாக வோட்டிலிட்டுச் சீலைசெய்து
வாய்ந்ததொரு புடமதுவும் கெஜமேயாகும் வளமுடனே போட்டபின்பு எடுத்துப்பாரு
தீய்ந்துமே போகாமல் செந்தூரந்தான் தீர்க்கமுடன் அருணனது நிறம்போலாகும்
மாய்ந்துமே அயமதுவும் மடிந்துமல்லோ மகத்தான செந்தூரஞ் சொல்லொண்ணாதே
6850.
சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துப்புரவாய் நாதாக்கள் மறைத்தசித்து
வெல்லவே யிவ்வேதை யார்தான்செய்வார் விதியாளி செய்வாரே மற்றோர்காணார்
புல்லவே செந்தூர மகிமைதன்னை பூதலத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
அல்லவென்றால் செந்தூரம் கோடிபாகம் வப்பனே கண்டதுண்டு மெத்தகாணே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6851-6860

6851.
காணவே செந்தூரம் மண்டலந்தான் கருவாகக் கொண்டவர்க்குப் பலனைக்கேளு
தோணவே தேனதனில் கொண்டாலல்லோ தோறாமல் தேகமது இருக்கும்பாரு
வேணதொரு ரோகமெல்லாம் நீங்கியல்லோ விரைக்குமே நரம்பதுவும் துடிப்புமெத்த
பாணமெனும் மன்மதனார் வேகந்தன்னை பாலிக்கும் வயத்தினுட வீரங்காணே
6852.
வீரமாம் வாசியது மேலோடாது வீறான நரம்புகளும் முருக்குமேறி
சாரமுடன் தேகமது வலுவுமெத்த சட்டையது மூன்றுவிசை தள்ளும்பாரு
கோரமென்ற தேகமது வழகுமீறி கொற்றவனே நெடுங்கால மிருக்கலாகும்
பாரமென்ற வயமதுவும் சொல்லப்போமோ பாராளுஞ் சித்தர்முனி வேதையாச்சே
6853.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்த புலிப்பாணி புண்ணியவானே
பாதையாம் மதிதனிலே பத்துக்கொன்று பட்சமுடன் தானுருக்கி குருவொன்றீய
சோதனைக்கு இடையாது வுறத்ததங்கம் சோராமல் லிங்கமிட்டு வூதிப்போடு
வேதைமுறை சொன்னவழி தப்பாதப்பா வேதாந்த சித்தினுட வுண்மைபாரே
6854.
உண்மையாம் இன்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி புனிதவானே
திண்ணமுடன் அயமதுவும் பலந்தான்பத்து திறமான நிம்பழத்தின் சாற்றினாலே
வண்ணமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வாகுடனே கழுவியல்லோ வயமெடுத்து
கண்ணமுடன் கல்வமதில் இட்டுமைந்தா தகமையுடன் பழமதுதான் செப்பக்கேளே
6855.
செப்பவென்றால் கருநாகப் பழரசத்தால் செம்மலுடன் தானரைப்பாய் நாலுசாமம்
ஒப்பமுடன் முப்பூவுங் களஞ்சிசேர்த்து வுத்தமனே தானரைத்து பில்லைதட்டி
தப்பிதங்கள் வாராமல் ரவியில்வைத்து சட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
மெய்ப்புடனே கோழியென்ற புடந்தான்போடு மேலான செந்தூர மாகுந்தானே
6856.
தானான செந்தூரந் தனையெடுத்து தண்மையுடன் முன்போல கல்வமிட்டு
தேனான கருநாக பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பானான பில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிமுகத்தில் காயப்போடு
மானான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் முன்போல புடத்தைப்போடே
6857.
போடேதான் பத்துமுறை இப்படியேபோடு பொங்கமுடன் அயமதுவும் செந்தூரந்தான்
நாடேதான் முறைபோலே செய்வாயானால் நலமான செந்தூரம் வேதையாகும்
கூடேதான் ஆவின்பால் வெண்ணைதன்னில் குணமுடனே நெல்லிடைதான் கொண்டாயானால்
தேடேதான் காலாங்கி கடாட்சத்தாலே தெளிவாக தேகமது மின்னும்பாரே
6858.
பாரேதான் மண்டலந்தான் கொண்டபோது பாங்கான தேகமது சட்டைதள்ளும்
நேரேதான் தேகமது வண்டுபோலாம் நெடிதான வாசியது மேல்நோக்காது
கூரேதான் தேகமது கற்றூணாகும் கொற்றவனே யமனுக்கு நாளுமில்லை
வேரேதான் கற்பமது வேண்டுமோதான் வித்தகனே வயத்தினுட மகிமைகாணே
6859.
காணவே யின்னமொரு மகிமைசொல்வேன் கருவான புலிப்பாணி கணிதவானே
தோணவே வெள்ளியது களஞ்சிபத்து தோறாமல் தானுருக்கி மருந்தொன்றீய
மாணவே வெள்ளியது பழுக்கும்பாரு மகத்தான மாற்றதுவும் என்னசொல்வேன்
வேணபடி வங்கமதை கொடுத்தேயூது வேட்கையுடன் வர்ணமது யேகாதன்றே
6860.
ஏகாது உப்புக்குங் காவிக்குந்தான் எழிலான செந்தூர மென்னசொல்வேன்
போகாது புடத்துக்கு வுறுதிதங்கம் பொங்கமுடன் நாதாக்கள் உரைத்ததில்லை
சாகாமல் இருந்திடலாம் செந்தூரத்தால் சதாகாலங் கற்பமது வுண்டுபாரு
வேகாது தேகமது தீயிற்பட்டால் வெந்தாலும் மேனியது வினைகொள்ளாதே