பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6861-6870

6861.
கொள்ளவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி குணமுள்ளானே
வெள்ளமுர்த மானதொரு யெந்தன்சாமி தெளிவான காலாங்கி நாதர்தாமும்
உள்ளபடி திரேதாயி னுகத்திலப்பா வுத்தமனே தாமிருந்த வண்மையெல்லாம்
கள்ளமின்றி இகழாமல் யானுரைப்பேன் கைலாச புலிப்பாணி கருவாய்க்கேளே
6862.
கருவான திரேதாயி னுகத்திலப்பா காலாங்கி நாதருட வுண்மையெல்லாம்
திருவான குருமுனி சொன்னநீதி தீர்க்கமுடன் இருவரது சரித்திரங்கள்
குருவான என்தேவர் எந்தனுக்கு கூறியதோர் லோகவதி சயங்களெல்லாம்
கருவறிந்து வழியறிந்து உந்தமக்கு கழறுவேன் புலிப்பாணி கவிவல்லோனே
6863.
வல்லதொரு திரேதாயி னுகத்திலப்பா வளமான லட்சத்தி நாற்பத்தாண்டில்
புல்லான வுலகமது மகிமைசொல்வேன் புகழான பிரளயங்கள் நேர்ந்தபோது
கல்லான மலைகளுமே முழுகியல்லோ கடலேழுந் தான்கடந்து மலைமட்டந்தான்
வல்லமையாய் சத்தசமுத்தி ரங்களெல்லாம் வளமுடனே பொங்கியது நிற்கலாச்சே
6864.
நிற்கையிலே காலாங்கி நாதர்தாமும் நீடாழி யுலகமதைக் கண்டேயேங்கி
சொற்பமுடன் தன்மனதில் எண்ணியல்லோ தோறாமல் காலாங்கி கமலர்தாமும்
விற்பனர்கள் இருவருமாய் காலாங்கிகிரியில் வீற்றிருந்தார் மண்டலந்தான் நெடுநாளப்பா
அற்பமுடன் வையத்து மாண்பர்தம்மில் வனேகம்பேர் அம்மலையில் இருந்திட்டாரே
6865.
இருந்தாரே நெடுங்காலம் காலாங்கிநாதர் எழிலான மலைமீதில் என்னசொல்வேன்
பொருந்தவே காயாதி கற்பங்கொண்டு பொங்கமுடன் வுலகமதின் மகிமையெல்லாம்
திருந்தவே கண்ணினாற் கண்டுமல்லோ தீர்க்கமுடன் தன்மனதில் உள்ளடக்கி
அருந்தவத்தில் உதித்ததொரு ரிஷிகள்தேவர் வனேகரிட மகிமையெல்லாம் பார்த்திட்டாரே
6866.
பார்த்தாரே காலாங்கி மலையிலப்பா பாங்கான ரிஷியினுட மகிமைசொல்வேன்
தீர்த்தமென்ற கரையிலப்பா ரிஷியாருண்டு திரமான ரிஷியாரும் புலிரூபந்தான்
ஆர்க்கவே திருமுகத்தைக் கண்டாலல்லோ வப்பனே மானிடத்தின் சித்துபோலாம்
மூர்க்கமது வாராது முனிநாதர்க்கு முனையான வேங்கையுட சித்துதானே
6867.
சித்தான வேங்கையென்ற மனிதசித்து ஜெகதலத்தில் யாரேனுங் கண்டதில்லை
பத்தியுள்ள என்தேவர் காலாங்கிநாதர் பாங்கான திரேதாயி னுகத்திலப்பா
வெத்தியுடன் கண்டதொரு மகிமைதன்னை வேதாந்த சித்தெனக்கு வெளியிட்டார்காண்
எத்திசையும் சித்தர்முனி கண்டதில்லை யெழிலான வதிசயத்தின்கூறுதானே
6868.
கூறான கோடிவகை யதிசயங்கள் கொற்றவனே காலாங்கி மலையிலப்பா
நீறான மலைமுனியாந் தவசியப்பா நெடுங்காலந் தானிருக்குங் கொடியசித்து
வாறான மச்சமென்ற தேகமப்பா வளமான திருமுகந்தான் மனிதரூபம்
சேறாடும் சுனையோரம் மலையோரத்தில் செம்மலுடன் தவமிருப்பார் ரிஷியார்தானே
6869.
தானான வவர்பெருமை மெத்தவுண்டு தகமையுள்ள சித்தாதி கண்டதில்லை
கோனான என்தேவர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மகிமைகளுங் கோடாகோடி திரேதாயி னுகத்திலப்பா கண்டதுண்டு
மானான நெடுங்கால சித்துவென்று மகதேவர் சொல்லெனக்கு தெரியலாச்சே
6870.
ஆச்சப்பா இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி வரியவானே
மூச்சடங்கி நெடுங்கால மிருந்தசித்து முனையான காலாங்கி நாதரப்பா
பாச்சலுடன் பிரளயங்கள் வந்தபோது பாங்கான மலைமீதில் இருக்குங்காலம்
மாச்சலுடன் தவயோகி ரிஷியார்தம்மை மன்னவனே கண்டவதி சயத்தைக்கேளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக