பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sabdha kaandam 7000 6891-6900

6891.
அன்றான காலாங்கி நாதர்தாமும் அறிவுடைய சித்துமகா ரிஷியாரல்லோ
குன்றான பருவதத்தைத் தேடியேதான் குணமான காலாங்கி நாதர்தாமும்
சென்றாரே பரசுமகா ரிஷியார்பக்கல் செம்பவள ரிஷியாரும் அருகிற்சென்று
நின்றாரே நெடுநேரம் முடிகள்சாய்த்து நீதியுடன் காலாங்கி பணிந்திட்டாரே
6892.
பணிந்திட்ட காலாங்கி நாதருக்கு பட்சமுடன் பரசுமகா ரிஷியார்தாமும்
துணிந்திட்ட காலாங்கி நாதருக்கு துப்புரவாய் உபதேசங் கோடிவண்ணம்
அணிபெறவே வையகத்து மகிமையெல்லாம் வப்பனே உபதேசஞ் செய்தாரல்லோ
கணிதமுடன் காலாங்கி நாதர்தாமும் கருத்துடனே மலையைவிட்டு யேகினாரே
6893.
ஏகவே காலாங்கி நாதர்தாமும் எழிலான சீனபதி தன்னிற்சென்று
பாகமுடன் லோகவதி சயங்களெல்லாம் பாலித்தார் சீனபதிப் பெண்களுக்கு
ஆகம சாஸ்திர புராணங்களெல்லாம் அங்ஙனவே போதித்து வினயங்கூறி
போகரென்ற எந்தனுயும் சீஷனாக்கி பொங்கமுடன் நெடுங்காலம் இருந்திட்டாரே
6894.
இருந்தாரே இன்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி எந்தன்மாரா
பொருந்தவே சீனபதி விட்டுநீங்கி பொங்கமுடன் காலாங்கி நாதர்தாமும்
திருந்தவே திரேதாயி னுகத்திலப்பா தீர்க்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
அருந்தவசி யாயிருந்த ராமர்தன்னை அங்ஙனவே கண்டுமல்லோ மதித்திட்டாரே
6895.
மதித்தாரே ராமரிஷி முனியார்தம்மை மார்க்கமுடன் காலாங்கி நாதர்தேவர்
துதிப்புடனே ராமரிஷி யென்றுமேதான் துப்புரவாய் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
விதிப்படியே பட்டாபி ஷேகமென்று விருப்பமுடன் தன்மனதில் உவந்துகொண்டு
நதிக்கரையைத் தான்தேடி தீர்த்தங்கொண்டு நமஸ்கார துதிகள் மிகசெய்திட்டாரே
6896.
செய்ததொரு காலாங்கி நாதர்தம்மை செங்கண்மால் ரிஷியாரும் மனங்களித்து
துய்யதொரு துலபமாம் மலைதன்னை துப்புரவாய் கையேந்தி முடிகள்சாய்ந்து
வெய்யபுகழ் உபதேசம் எந்தனுக்கு விருப்பமுடன் செய்யவென்று வினவிக்கேட்க
கைதவமாய் உபதேச உண்மைதன்னை கர்த்தாவும் எந்தனுக்கு கூறிட்டாரே
6897.
கூறியே உபதேச உண்மைதன்னை குணமான காலாங்கி நாதருக்கு
தேறியதோர் கிரேதாயி னுகத்தில்தானும் தேற்றமுடன் தானடைந்த மகிமையெல்லாம்
ஆறிடவே காலாங்கி நாதருக்கு அங்ஙனவே உபதேசஞ் செய்தாரல்லோ
பீறியே காலாங்கி நாதர்தாமும் மிக்கவே சீனபதி சென்றிட்டாரே
6898.
சென்றுமே சிலகாலம் அங்கிருந்து செம்மலுடன் கிரேதாயி னுகத்தில்தானும்
குன்றுமலை வணாந்திரங்கள் குகைகள்தேடி கூறான சித்துமுனி யனைத்துங்கண்டு
தென்றிசையில் கும்பமுனி மலையுங்கண்டு தேற்றமுடன் காலாங்கி மலையைக்காண
வென்றிடவே பிரளயங்கள் வந்தபோது மேன்மையுடன் மலைதனிலே இருந்திட்டாரே
6899.
இருந்தாரே இன்னமொரு இணக்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி புனிதவானே
திருந்தவே திரேதாயி னுகத்திலப்பா தீர்க்கமுடன் காலாங்கி நாதர்தாமும் 
அருந்தவசி பலராம ரென்னுஞ்சித்து வம்மலையில் நெடுங்காலந் தவசிருக்க
குருந்தமெனும் மரக்கலப்பை தோளிலேந்தி குணமான ரிஷியாரின் தவங்கண்டாரே
6900.
தவமான ரிஷியாருங் கிரியைதன்னில் சட்டமுடன் நெடுங்காலந் தவசுகொண்டு
சவம்போலே மூச்சடங்கி ரூபத்தோடும் சட்டமுடன் தவசிருக்கும் வண்மைதன்னை
பவமகற்று காலாங்கி நாதர்தாமும் பண்புடனே முடிசாய்ந்து தலைகுனிந்து
நவகோடி யஞ்சலிகள் மிகவுஞ்செய்து நாதாந்த சித்துருவே கெதியென்றாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக