பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

bogar போகர்-சப்த காண்டம் 7000 6961-6970

6961.
தானான இன்னமொரு தண்மைசொல்வேன் தாக்கான புலிப்பாணி தயவுள்ளானே
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான பார்லோக மிடங்கொள்ளாது பாலகனே சொல்வதற்கு நாளுமில்லை
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் கோடிமுறை சொல்வேன்பாரே
6962.
பாரேதான் கலியுகம் பிறக்கலாச்சு பாலகனே சத்தியமும் விழலாய்ப்போச்சு
ஆரேதான் உனக்கு மதிசொல்வார் அப்பனே யுபதேசம் பெற்றமட்டும்
பேரிருக்க வூரிருக்க பிதாவிருக்க பேரான மகுத்துவத்தை வெளியிடாதே
சீரழிந்த மாண்பரெல்லாஞ் ஜெனிப்பாரப்பா ஜெகதலத்தில் கருமியென்ற கோடிபேரே
6963.
கோடியாம் நல்லவர்போ லிருப்பாரப்பா கொற்றவனே யுந்தனுக்கு யுபதேசித்த
தேடியதோர் பொருளப்பா சத்தகாண்டம் தெளிவான யேழாயிரங் காவியத்தை
பாடியே யுந்தனுக்கு தத்தமாக பட்சமுடன் யான்கொடுத்த பெருநூலப்பா
வாடியே மயங்காதே மனம்விடாதே மதிகெட்டு நில்லாதே நூல்கொடாதே
6964.
கொடுத்தாலும் விதியாளி பார்த்தறிந்து கொற்றவனே கொடுத்தாலும் புண்ணியமெய்தும்
கெடுத்ததொரு குடிகெடுக்கும் பாவிகட்கும் கெடியான சண்டாள மாண்பருக்கும்
அடுத்துறவு நயம்பேசி புரணிகூறும் வனியாயக் காரருக்கும் வறிவிலார்க்கும்
தொடுத்ததொரு பெருநூலாஞ் சத்தகாண்டம் துப்புரவாய்க் கொடுத்தாலே பாவமாமே
6965.
பாவமாம் நூலதனைப் பதனம்பண்ணு பாலகனே சமாதிமுகம் வைத்துப்போற்று
ஆவலுடன் விதியாளி வந்துகேட்டால் வப்பனே நீகொடுத்து மதிகள்கூறு
சாவதுவும் தலைமேலே இருக்குமப்பா சாங்கமுடன் நூல்கொடுத்தால் மெத்தநன்று
போவதுமெய் இருப்பதுபொய் என்றவாக்கியம் பொங்கமுடன் வேதமது நுணுக்கமாமே
6966.
வேதங்கள் நுணுக்கறிந்து யீயாவிட்டால் வெகுபாவம் வெகுசாபம் நரகமெய்தும்
நீதமுடன் பரிசுத்த வாளருக்கு நீதியுடன் கொடுப்பதுவே கர்மமாகும்
தோதமுடன் விதியாளி வந்துகேட்டால் தோறாமல் சமாதிமுகம் இருந்தநூலை
ஆதவமாம் அருளினது விசுவாசத்தால் வப்பனே நூல்கொடுத்து மதிகள்கூறே
6967.
கூறவென்றால் புலிப்பாணி குணமுள்ளானே கொற்றவனே கலியுகமும் பிறந்துபோச்சு
மாறலுடன் வையகத்தில் வெகுபாடப்பா மாண்பர்களும் வெகுகேடு படுவாரப்பா
சீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிதமார்க்கம்
மீறவே தானடக்குங் கலியுகத்தில் மிக்கான வுண்மையது வறிந்துகொள்ளே
6968.
கொள்ளப்பா யொருவரையும் நம்பவேண்டாம் கொற்றவனே கலியுகத்தில் அனியாயங்கள்
தள்ளவே போகாது தரணிமீதில் சட்டமுடன் அனேகவித தெய்வமென்பார்
விள்ளவே விசுவாசம் பாவமுண்டு வித்தகனே யனேகவித சாத்திரங்கள்
உள்ளபடி கூறுவார் மாந்தரப்பா வுத்தமனே மயங்காதே புத்திவானே
6969.
புத்தியாய் கலியுகத்தில் சிலதுகாலம் புகழுடனே தாமிருந்து சமாதிகொள்வாய்
சத்தியத்தைத் தவறாதே தம்பிரானே சதகோடி சூரியன்போல் ஞானங்கொள்ளு
வித்தகனே விற்பனனே விண்ணுள்ளானே விட்டகுறை நேருமட்டும் வையகத்தில்
புத்தியாய் நெடுங்காலந் தாமிருந்து புண்ணியனே சமாதிமுகம் புரிவீர்தானே
6970.
தானான புலிப்பாணி தகமையோனே தாக்கான என்தேவர் சொன்னநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே கொற்றவனே சமாதிமுகஞ் செல்வேனப்பா
மானான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் மகதேவர் காலாங்கி கிருபையாலும்
பானான பாரிலுள்ளோர் புண்ணியத்தால் பாலகனே சமாதிமுகஞ் செல்வேன்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக