பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5901-5910

5901.
அறையலாம் இன்னமொரு மார்க்கம்பாரு வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நிறையனே வேதமென்ற வியாசர்தானும் நேர்மையுடன் தான்பிறந்த சேதிவண்ணம்
மறைபோன்ற வாணியாந் திங்களப்பா மகத்தான கேட்டையது ரெண்டாங்கால்தான்
குறைபோன்ற நாளதனில் உதித்தபாலன் கொற்றவனார் வேதமென்ற வியாசர்தானே
5902.
தானான பராசரது மைந்தனப்பா தாக்கான வியாசனென்றே செப்பலாகும்
கோனான நூற்படியே யானுரைத்தேன் கொற்றவனார் மாண்பரிடம் அறியவேண்டி
பானான யின்னமொரு பதமுஞ்சொல்வேன் பாரினிலே மாண்பர்களுந் தெரியவேண்டி
மானான புலிப்பாணி யுந்தமக்கு மார்க்கமுடன் முறைபாடு சொல்லலாச்சே
5903.
சொல்லவென்றால் தேறையர் மார்க்கஞ்சொல்வேன் சுந்தரனே பங்குனியாந் திங்களப்பா
வெல்லவே மூலமது ரெண்டாங்காலாம் மேன்மையுடன் அவதாரஞ் செய்தாரப்பா
புல்லவே தேரையர் முனிவர்தானும் புகழான பிரம்மகுலந் தன்னிலப்பா
வெல்லவே வானரிஷி தன்தனக்கு சிறப்புடனே பெற்றெடுத்த பாலனானே
5904.
பாலனாந் தேரையர் முனிவர்தானும் பண்பான வகஸ்தியருக் குகந்தசீஷன்
சீலமுடன் ஞானோப தேசம்பெற்று சிறப்புடனே மலைதனிலே இருந்தசித்து
கோலமுடன் யேமமென்ற வித்தைதன்னை குவலயத்தில் மாண்பர்களுக் காகவேண்டி
காலமுடன் அகஸ்தியராங் குருபாதத்தை தண்மையுடன் எதிர்த்ததொரு சீஷனாச்சே
5905.
சீஷனா மின்னமொரு மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மன்னவா கேள்
தோஷமது வாராமல் யாக்கோபென்னும் துப்புரவாய் ஞானமென்ற சித்துதானும்
வேஷமது தான்மாற்றி நபிநாயகத்தை விருப்பமுடன் கண்டுவந்த யோகசித்து
பாஷமுடன் தான்பிறந்த நேர்மைக்கேளும் பாரினிலே பங்குனி மாதந்தானே
5906.
மாதமாம் பங்குனியாந் திங்களப்பா மகத்தான பூராடம் நாலாங்கால்தான்
தோதமுடன் பக்கிரியாக் கோபுதானும் தொல்லுலகை தான்மறந்து பிறந்தசித்து
சாதகங்கள் பொய்யாது விதியுந்தப்பா தாரணியில் நெடுங்கால மிருந்தசித்து
கோதமென்னும் புலஸ்தியனார் தானுமப்பா கொற்றவனார் ஈன்றெடுத்த புனிதனாமே
5907.
புனிதமாம் மகமது மார்க்கந்தன்னில் புகழான கன்னியவள் பெற்றபாலன்
சனியுடனே ரேவதியுங் கூடச்சேர்ந்து சட்டமுடன் வந்துதித்த யாக்கோபப்பா
மனிதனெனும் ஜென்மமது பெற்றுமல்லோ மகத்மான மகமது மார்க்கஞ்சென்று
தனியான மக்கமென்ற தேசந்தன்னில் சட்டமுடன் போனதொரு சித்துமாமே
5908.
சட்டமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு சங்கரனே புத்தியுள்ள மணியேபாரு
திட்டமுடன் கொங்கணனார் பிறந்தநேர்மை தீர்க்கமுடன் யானுரைப்பேன் சுகந்தமாரா
வட்டமுடன் சித்திரையாந் திங்களப்பா வளமான உத்திராட முதல்கால்தன்னில்
அட்டதிசை தான்புகழப் பிறந்தபாலன் வன்பான கொங்கணவர் என்னலாமே
5909.
என்னவே யவர்பிறந்த நேர்மையப்பா எழிலான சங்கர குலத்துதித்த
பன்னவே கானீனன் பெற்றபாலன் காசினியில் வந்துதித்த திருவுமாகும்
பொன்னரங்கம் பூண்டதொரு புனிதவானாம் புகழான தேவதா சித்துமாகும்
நன்னவனுக் கொப்பான கொங்கணவர்தானுங் காசினியில் வந்துதித்த திருவுமாச்சே
5910.
ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
மூச்சடங்கிப் போனதொரு மாயாசித்து முனையான தட்சணா மூர்த்தியாகும்
பாச்சலுடன் தட்சணப் பதியில்தானும் பாங்குடனே பள்ளிகொண்ட சித்துவாகும்
ஆச்சரிய மானதொரு மாயாசித்து அவர்பிறந்த வண்மைதனைப் புகலுவேனே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5911-5920

5911.
புகலுவேன் ஆவணியாந் திங்கள்தானும் பூரணமாந் திருவோண முதற்காலப்பா
நிகலவே தட்சணா மூர்த்திநாயன் நீதியுடன் தான்பிறந்த நாளுமாச்சு
அகலவே கொல்லிமலை நாதன்பேரன் வன்பான வைஷ்ணகுல சம்பிரதாயன்
சகலமு மறிந்ததொரு ஞானசித்து தாரணியில் வந்துதித்த சித்துமாச்சே
5912.
சித்தான குலசம்பிர தாயபூபன் சிறப்பான தட்சணா மூர்த்திநாயன்
முத்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மூதுலகைக் கடந்ததொரு புனிதனாகும்
புத்தியுள்ள கோரக்கர் பிறந்தநேர்மை பண்பான கார்த்திகையா மென்னலாகும்
சித்திபெற அயலிடமாம் இரண்டாங்கால்தான் சிறப்பான நாளென்றே சொல்லலாமே
5913.
சொல்லவே கோரக்கர் பிறந்தநேர்மை சந்திரனார் வசிஷ்டமகா ரிஷியாருக்கு
புல்லவே கானகுற ஜாதியப்பா புகழான கன்னியவள் பெற்றபிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும் வேதாந்த கோரக்கர் சித்துதாமும்
நல்லதொரு பிரகாச மானசித்து நாதாந்த சித்தொளிவும் என்னலாமே
5914.
என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி மன்னாபாரு
துன்னவே கௌபால சித்துதாமும் சுடரொளியாம் பிரகாச மானஜோதி
மின்னவே வைகாசி மாதமப்பா மிக்கான சதயமது ரெண்டாங்கால்தான்
நன்னயமாய் அவர்பிறந்த நாளேயாகும் நலமான கௌபால சித்துபாரே
5915.
பாரேதான் தேவதா தச்சனப்பா பாங்கான ஜெகத்குரு கம்மாளன்தான்
நேரேதான் தவத்துதி சித்துவென்றும் நெடிதான கௌபால ரிஷிதானென்றும்
தீரேதான் வயிரக்கல் கண்டெடுத்து தீர்க்கமுடன் பொன்னுரைத்த சித்துவென்றும்
சீரேதான் பலநூல் காப்பியங்கள்கண்டு செப்பினேன் கௌபால சித்துகாணே
5916.
காணவே யின்னமொரு புதுமைசொல்வேன் காசினியில் நாதாக்கள் கூறவில்லை
தோணவே ஜோதியென்ற முனிவர்தானும் துப்புரவாய் தானுதித்த வண்மைபராய்
பூணவே புரட்டாசி மாதமப்பா புகழான பூரட்டாதி யென்னலாகும்
மாணவே நாலாங்கால் தன்னிலப்பா மகத்தான ஜோதிமுனி வுதித்தவாறே
5917.
வாரான பிரம்மரிஷி மைந்தனப்பா மகத்தான சூரியகுலந் தனிலுதித்த
தூரான பெண்மாது வரவர்ஜாதி துகளான ஜோதிமாமுனிவர் தானாகும்
வேரான மலைகுகைகள் குண்ணுதேடி விளக்கமற கல்லதனை யாராய்ந்தேதான்
கூறான வயிரக்கல் கண்டெடுத்த கொற்றவனார் ஜோதிமா முனிதானாச்சே
5918.
ஆச்சப்பா யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி வண்ணலேகேள்
மூச்சடங்கி சென்றதொரு மாடர்தானும் முனையுடனே தான்பிறந்த வண்மைகேளிர்
மாச்சலென்ற மார்கழியாந் திங்களப்பா மகத்தான உத்திரட்டாதி தானும்
வீச்சுடனே நாலாங்கால் என்னலாகும் விரைவான நாள்தனிலே பிறந்தார்தாமே
5919.
பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே
5920.
சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5921-5930

5921.
தானான ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே
5922.
பாரேதான் இன்னமொரு வதிதஞ்சொல்வேன் பாலகனே சிறுபாலா பகரக்கேளும்
கூரேதான் சொன்னார்கள் இதிகாசங்கள் வப்பனே யார்தானுஞ் சொல்லவில்லை
நேரேதான் யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் நெடிதான வரரிஷியா மென்றசித்து
சீரேதான் அவர்பிறந்த வண்மையப்பா சிறப்புடைய சித்திரையாந் திங்கள்தானே
5923.
சித்திரையாம் அசுவினி மூன்றாங்காலாம் சிறப்பான நாள்தனிலே பிறந்தாரென்றும்
பத்தியுடன் அவருடைய மார்க்கஞ்சொல்வேன் பண்பான திரணாக்கிய முனிவர்பேரன்
முத்திவழி செல்லுகின்ற சித்துவாகும் முனையான வரரிஷியா மென்றும்பேரு
சத்தியங்கள் தவறாத விசுவயோகி தாரணியில் வரரிஷியா மென்னலாமே
5924.
என்னவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான எந்தனது புத்திவானே
துன்னவே வால்மீகர் பிறந்தநேர்மை துப்புரவாய் அவருடைய வண்மைசொல்வேன்
மன்னவனுக் கொப்பான வால்மீகர்தானும் மகத்தான லோகமதில் பெரியசித்து
சொன்னதொரு புரட்டாசி திங்களப்பா சொற்பெரிய அனுஷமது நாலாங்காலே
5925.
காலான வால்மீகர் வேடனப்பா கன்னியாள் பெற்றதொரு குறத்திமைந்தன்
கோலான மராமரா உபதேசங்கள் கொற்றவனார் பெற்றதொரு சித்துமாச்சு
பாலான மாண்பருக்கு ஞானகாண்டம் பகுத்தறிய வால்மீகர் சரிதையப்பா
மாலான வவர்பெருமை யாருக்குண்டு மகத்தான ரிஷிகளுக் கில்லைதானே
5926.
இல்லையே இன்னமொரு சரிதைசொல்வேன் எழிலான எந்தனது புத்திமாரா
தொல்லுலகிற் கீர்த்திபெற்ற மாதுசித்து துப்புரவாய் ஊர்வசியாள் என்னுமாது 
எல்லவருந் தான்புகழ வைகாசிதன்னில் எழிலான பூரமென்ற நாலாங்காலாம்
வல்லமையாய் வந்துதித்த தேவமாது வையகத்தில் ஊர்வசியாள் என்றமாதே
5927.
மாதான ஊர்வசியாள் மார்க்கந்தானும் மகத்தான கானகத்து ரிஷிதானப்பா
தீதான பிரிங்கிமகா ரிஷியின்பேத்தி தீர்க்கமுடன் கானீனன் பெற்றமாது
ஆதான சாத்திரத்தில் சித்துநூலில் அறிவுடைய ஊர்வசியாள் மாதுதானும்
கோதானந் தான்கொடுத்து பிறந்தமாது குவலயத்தில் ஊர்வசியாஞ் சித்துகாணே
5928.
காணவே இன்னமொரு கவிதைசொல்வேன் கண்ணான கண்மணியே கழரக்கேண்மோ
பூணவே புலிப்பாணி மைந்தாபாரு புகழான எந்தனிரு மணியே கேளும்
வேணவே இன்னம்வெகு வனேகசித்து வேடமது பூண்டுமல்லோ இருந்தாரப்பா
மாணமருங் கல்வியுள்ள சித்துகன்னி மகத்தான சித்துகளைக் கூறலாச்சே
5929.
கூறவென்றால் கமலமுனி பிறந்தநேர்மை கூறுவேன் வைகாசி திங்களப்பா
மாறலுடன் பூசமது ரெண்டாங்காலாம் மகத்தான கமலமுனி பிறந்தநாள்தான்
சீறலது வாராத தேவசித்து தெளிவுடைய வையகத்துக் குகந்தசித்து
ஆறவே யொருவரால் கூறப்போமோ வப்பனே ஞானவொளி சித்துபாரே
5930.
பாரேதான் சித்தொளியின் மகிமைபாரு பாங்கான காலாங்கி பாட்டன்வர்க்கம்
நேரேதான் வம்மிஷத்திற் பிறந்தசித்து நெடிதான சின்மயா னந்தசித்து
வேரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வெளியரங்க மானதொரு மாராகேண்மோ
சீரேதான் அறிவான அனந்தசித்தர் தீர்க்கமுடன் பிறந்ததொரு நேர்மைகாணே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5931-5940

5931.
காணவே மாசியென்ற திங்களப்பா கருவான ரேவதியாம் மூன்றாம்பாதம்
பூணவே யவர்பிறந்த நாளதாகும் புகழான மார்க்கமது யாதென்றாக்கால்
வேணதொரு டமரகனார் மைந்தரப்பா வேதாந்த அறிவான அனந்தராகும்
தோணவே பிரதிலோம னென்றேசொல்வார் தொல்லுலகில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
5932.
உண்டான இன்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே நாதாந்தமணியே கேண்மோ
தொண்டனெனும் சித்துமுனி ரிஷிகளுக்கு தோற்றமுள்ள வகப்பேயர் சித்துவாகும்
கண்டவர்கள் விடுவார்கள் சித்துதம்மை காசினியில் உபதேசம் பெற்றசித்து
அண்டமெனும் வையகத்தில் பிறந்தநேர்மை வப்பனே யானுரைப்பேன் சொல்வேன்பாரே
5933.
ஆச்சப்பா கன்னியவள் பெற்றபிள்ளை யவதார புருஷனென்றே செப்பலாகும்
மூச்சடங்கி வெகுகால மிருந்தசித்து முனையான வகப்பேயர் சித்துவாகும்
மாச்சலுடன் இன்னமொரு மார்க்கங்கேளு மகத்தான குதம்பையென்ற சித்துதாமும்
ஏச்சலது வாராமல் தான்பிறந்த எழிலான சித்தினிட மார்க்கங்கேளே
5934.
கேளேதான் ஆடியாந் திங்களப்பா கெவனமுடன் விசாகமென்ற மூன்றாங்காலில்
நானப்பா தான்பிறந்த குதம்பைசித்து நலமுடனே திரிகால பூசைசெய்து
வேளப்பா யாகமது முடித்துமல்லோ வேள்வியுடன் பாலாமிர்தம் உண்டசித்து
ஆளப்பா பெரியோர்கள் நேசம்பெற்று வப்பனே மரப்பொந்தில் இருந்தசித்தே
5935.
சித்தான மாதவமாங் குலத்துதித்த சிறப்பான குதம்பையென்ற சித்துவப்பா 
முத்தான பாலமுர்தம் உண்டுமல்லோ மூதுலகைத் தான்பழித்த சித்துவாகும்
பத்தியுடன் வையகத்தில் நெடுங்காலந்தான் பான்மையுடன் வீற்றிருந்த பரமசித்து
சுத்தியுள்ள திருவாத்தி மரத்தின்கீழே சுந்தரம் போலிருந்ததொரு மாயாசித்தே
5936.
மாயான சித்தல்லோ மகிமைபாரு மகத்தான புலிப்பாணி மைந்தாகேளு
தாயான பாம்பாட்டி சித்தரப்பா தாரணியில் நெடுங்கால மிருந்தசித்து
காயான முப்பழமும் பாலுங்கொண்டு கலியுகத்தில் நெடுநாளாய் இருந்தசித்து
சேயான பாம்பாட்டி சித்துதாமும் சீருலகில் பிறந்ததொரு சித்துதானே
5937.
தானான பாம்பாட்டி பிறந்தமாதம் தாக்கான கார்த்திகையாந் திங்களப்பா
கோனான மிருகசீரிடந் தானாகும் கொற்றவனே மூன்றாங்கால் என்னலாகும்
தேனான அவர்பிறந்த நாள்தானப்பா தேசத்தில் சித்தர்முனி கண்டதுண்டோ
மானான பதினெண்பேர் நூலைப்பார்த்து மார்க்கமுடன் தானறிந்து சொல்லிட்டேனே
5938.
சொல்லவென்றால் பாம்பாட்டி மர்மந்தானும் தோற்றமுடன் ஜோகியென்ற வம்மிஷந்தான்
புல்லவே மசானகுறி யோகியப்பா புகழ்பெரிய குருடனார் பெற்றபிள்ளை
வெல்லவே மாலைசுற்றித் தான்பிறந்த வேதாந்தப் பாம்பாட்டி யென்னலாகும்
நல்லதொரு சித்துமுனி உபதேசங்கள் நலம்பெற்ற பாம்பாட் டியாமே
5939.
பாம்பான இன்னமொரு மார்க்கங்கேளு பண்பான புலிப்பாணி நேசபாசா
தீம்பில்லா காலகண்ட ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் பிறந்ததொரு திண்ணம்பாரு
தாம்புகழுஞ் சித்திரையாந் திங்களப்பா தாக்கான உத்திராடம் இரண்டாம்பாதம்
மாம்புலமாம் வட்டாரந் தன்னிலப்பா மகத்தான சிவவேடம் பூண்டசித்தே
5940.
பூண்டதொரு காலகண்ட ரிஷியார்தாமும் புகழான பேரண்ட முனிதான்சித்து
ஆண்டகையார் சித்துமுனி மைந்தனுக்கு வன்பான பேரனது பேரனப்பா
தாண்டகையாங் காலகண்ட சித்துவாகும் தரணிபதி சிவயோக சித்துவாகும்
வேண்டியதோர் கருமான மறிந்தசித்து வேதாந்த காலகண்டர் என்னலாமே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5941-5950

5941.
என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி கண்ணேகேளும்
பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்
துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாய்ப் பிறந்ததொரு நேர்மையப்பா
சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் முதற்பூசங் கால்தானொன்றே
5942.
ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் வடிவேலர் பிறந்தாரென்று
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் குவலயத்தில் சொல்லொண்ணாது
தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்
பன்றிபெருச் சாளியின்மேல் சாரியேகும் பண்பான விநாயகருக்கு தம்பியாமே
5943.
தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி வடிவேலர் சித்துதன்னை
வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி வடிவேல ரென்றேசொல்வார்
கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான கோடிபொருள் ஈவாரப்பா
தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான வடிவேலர் தண்மைபாரே
5944.
பாரேதான் இன்னமொரு பதமுஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேபாரு
சீரான யூகிமுனி பிறந்தவண்ணம் சிறப்புடனே சொல்லுகிறேன் திறமைமெத்த
நேரான வாவணியாந் திங்களப்பா நெடிதான பூசமது மூன்றாங்காலாம்
கூரான நாளதனில் பிறந்தசித்து குறிப்பான யூகியென்ற முனிவர்தானே
5945.
தானான யூகிமுனி மார்க்கமென்றால் தகமையுள்ள தன்வந்திரிக் குற்றபேரன்
கோனான சிங்களவ குலத்துதித்த கொம்பனையாள் கானீனன் பெற்றபிள்ளை
தேனான திரவிடத்திற் சொன்னார்போல தீர்க்கமுடன் வடமொழியில் சொல்லலாச்சு
மானான மாண்பருக் குபயோகத்தால் மாட்சியுடன் சொன்னதொரு நீதியாமே
5946.
நீதியா மின்னமொரு மர்மஞ்சொல்வேன் நிஷ்களங்க மானபுலிப் பாணியப்பா
தீதிலா ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்புடனே பிறந்ததொரு நேர்மைசொல்வேன்
கோதிலா வற்பசி மாதமப்பா குறிப்பான புனர்பூசம் மூன்றாங்கால்தான்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாரினிலே யவதரித்த சித்துமாமே
5947.
சித்தான ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்பான பரத்துவமாம் ரிஷியின்பேரன்
முத்தான வனுலோமன் பெற்றபிள்ளை மூதுலகில் கீர்த்தியுடன் இருந்தசித்து
சத்தான யூகியென்ற சாத்திரந்தான் சாங்கமுடன் பன்னீராயிரந் தானாகும்
சுத்தமுள்ள ரிஷிதேவர் சொன்னதில்லை சுந்தரனார் இதிகாசங் கூறினாரே
5948.
கூறினார் இன்னமொரு குறிப்பைக்கேளு கூரான புலிப்பாணி மைந்தாபாரு
மீறியதோர் திரணாக்கிய முனிவரப்பா மிக்கான பிறந்ததொரு வண்மைசொல்வேன்
ஆறுபுடை திங்களாம் புரட்டாசியப்பா வப்பனே திருவாரிரை ரெண்டாம்பாதம்
வீறுபுகழ் சாத்திரத்தை மனதிலுன்னி விருப்பமுடன் பாடிவைத்தார் நூலிதாமே
5949.
நூலான மார்க்கமது யாதென்றாக்கால் நுணுக்கமுடன் ஜெமதக்னி பெற்றபாலன்
கோலான குறத்தியிட சற்புத்திரந்தான் குறிப்பான பிரதிலோமன் என்னலாகும்
பாலான மார்க்கமது யாதென்றாக்கால் பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
காலான புலிப்பாணி மைந்தாபாரு கசடற்ற புத்திரனே புகல்வேன்பாரே
5950.
புகலுவேன் கண்டீசர் பிறந்தநேர்மை புகழான வைகாசி மாதமாகும் 
நிகலுவேன் பூரமென்ற மூன்றாங்கால்தான் நீதியுடன் பிறந்த நாளேயாகும்
சகலமு மறிந்ததொரு சித்துதாமும் சதாகாலம் வையகத்தி லிருந்தசித்து
அகலவே புலஸ்தியருக் குற்றபேரன் அன்பான வேடருட ஜாதிதானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5951-5960

5951.
சாதியாங் கானீனன் பெற்றபிள்ளை சாங்கமுடன் நெடுங்கால மிருந்தசித்து
ஜோதிமணி சுந்தரம்போல் குகைதானுல்லே சுட்டெரிக்கும் நிலாப்போலே இருக்குஞ்சித்து
நீதிமனு முறைதவறா யிருந்தசித்து கடலாழி யுலகுபதி யாண்டசித்து
தீதிலா சங்கமென்ற புலவருக்கு தீர்க்கமுடன் உபதேசஞ் செய்தசித்தே
5952.
செய்யவே யின்னமொரு மார்க்கம்பாரு செம்பவல கனிவாயா துய்யபாலா
உய்யவே திருமூல ரென்றசித்து வுலகமதில் தான்பிறந்த சேதிவண்ணம்
பையவே புரட்டாசி திங்களப்பா பாலகனார் வந்துதித்த மாதமாகும்
வெய்யவே அவிட்டமென்ற மூன்றாங்கால்தான் மேதினியில் வந்துதித்த சித்துமாச்சே
5953.
ஆச்சப்பா திருமூலவர்க் கத்தோர்கள் அவனியிலே சொல்லுதற்கு நாவுமில்லை
மூச்சடங்கிப் போனதொரு பாண்டியர்கள்தாமும் முனையான சங்கமதில் வாதுசெய்தோன்
பாச்சலுடன் சேரனுக்கு பெற்றபாலன் பாரினிலே யனுலோமன் யென்னலாகும்
வீச்சலுடன் இதிகாச புராணமெல்லாம் விருப்பமுடன் பாடிவைத்த சித்துகாணே
5954.
காணவே யின்னமொரு கருமானங்கேள் கருவான புலிப்பாணி மைந்தாபாரு
தோணவே எழுகடலுஞ் சுற்றிவந்தேன் தோறாமல் தட்சண மாண்பர்தம்மை
பூணவே நெடுங்கால மிருந்துமல்லோ பொங்கமுடன் அதிசயங்கள் மிகவுங்கண்டேன்
வேணதொரு தேவாதி தேவரல்லோ விருப்பமுடன் அனேகவித கோயிலுண்டே
5955.
உண்டான வையகத்து மாண்பர்தம்மில் வுத்தமனே சன்னதங்கள் மெத்தவுண்டு
கண்டாலும் மாண்பர்களைப் பார்த்தபோது கருவான தெய்வங்கள் உச்சாடத்தால்
செண்டான முறைமைகொண்டு வுறவுபேசி செம்மலுடன் அருகிருந்து சிலதுமாண்பர்
திண்மையுடன் குறிசொல்ல வந்தோனுக்கு தீர்க்கமுடன் தானுரைப்பார் வதீதந்தானே
5956.
அதிதமாஞ் சமுசாரி செய்யும்வித்தை வன்போடு வாயிரம்பேர் குறிகேட்டாலும்
கதிதமுடன் தேவதைகள் வசியத்தாலே கதிரான சுகசேதி சொல்வோன்போல
மதிபோன்ற தேவதா கிருபையாலும் மகத்தான உண்மைவழி கூறினார்போல்
சதியுடனே சன்னதங்கள் மிகவுமாகி சட்டமுடன் கூறலுற்றார் மாண்பர்க்காமே
5957.
மாண்பான குறிசொல்லும் மார்க்கங்கேளும் மகத்தான பத்துபேர் ரெண்டுபேர்கள்
ஆண்பிள்ளைத் தன்னோடும் பாலரோடும் வழகான மாதர்களின் கூட்டத்தோடும்
வீண்பேச்சி வார்த்தைகளும் மிகவாய்ப்பேசி விருப்பமுடன் யாதொன்றும் தெரியாப்போலும்
நாண்போடு தூதுரைக்கும் மாண்பர்தாமும் நலமான மாந்தருடன் பேசுவாரே
5958.
பேசியே மாண்பரோடு வுறவுபேசி பேரான குறிகேட்க வந்தோர்தம்மை
காசினியில் வந்ததொரு மாண்பர்நாங்கள் கருவாகக் குறி சொல்லும் மாண்டிதன்னை
பாசிபடா குறியுரைப்பா ரென்றுசொல்லி பட்சமுடன் வெகுதூரங் கேட்டுவந்தோம்
மாசியென்னும் பதிதனிலே குறிகள்கேட்டோம் மகத்தான குறியதுவுஞ் சொல்லலாச்சே
5959.
சொல்லவென்றால் குறியதுவும் என்னசொல்வோம் சோடசத்தில் ஒன்றேனும் பொய்யேயில்லை
வெள்ளவே குறிகேட்டார் மெய்யைப்போல மேன்மையுடன் கூடிவரு மாண்பரொடு
புல்லவே வுறவுகொண்டு நயங்கள்பேசி புகழான எதிரியின் வார்த்தைதன்னை
மெல்லவே யவருரைக்கும் வார்த்தைதன்னை மேன்மையுடன் உபாயத்தால் அறிவார்தானே
5960.
தானாக எதிர்மாண்பர் கூறும்வார்த்தை தண்மையுடன் உபாயமதாய்த் தானறிந்து
கோனான குறியுரைக்கும் சங்கன்தானும் கொப்பெனவே யடையாள ரூபத்தோடும்
மானாக எதிரியின்தன் வார்த்தையெல்லாம் மார்க்கமுடன் தானுரைத்து ஆளைக்காட்டி
பானாக பதிமேடை மறைந்துகொண்டு பாங்குடனே குறிசொல்வோர் பின்நிற்பாரே