பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6151-6160

6151.
பூசவே மயினமதை செம்புதன்னில் புகழாக வேபித்து காய்ந்தபின்பு
வாசமுடன் கரியோட்டி லிட்டுமைந்தா வளமையுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
பாசமது தானகல ஆவியில்வைத்து பட்சமுடன் கோழியென்ற புடத்தைப்போடு
கோசமென்ற பீஜமது சேர்ந்ததாலே கொற்றவனே செம்பதுவும் வர்ணமாச்சே
6152.
ஆச்சப்பா செம்பதுவும் வர்ணமீறி வப்பனே மாற்றதுவும் ஐம்பதாகும்
மாச்சலென்ற களிம்பதுவும் விட்டகன்று மகத்தான செம்பதுவும் பழுப்புமீறி
காச்சலுடன் திரைசுவடு களிம்போடூரல் கசடகற்றி சவளையுடன் அழுகன்மாறி
ஆச்சரிய மானதொரு வூட்டங்காய்ப்பு வப்பனே கரகரப்புட னயப்புதானே
6153.
தானான பிறவியென்ற தங்கம்போலே தண்மையுள்ள குற்றமது நீங்கியேதான்
கோனான குருதங்கம் பிறவித்தங்கம் குவலயத்தில் நாதாக்கள் செய்யும்தங்கம்
மானான மகமேருவான தங்கம் மகத்தான மூலியுட காரசாரம்
தேனான பரிசமது பட்டபோது தெளிவான வுறுதியென்ற தங்கந்தானே
6154.
தங்கமாம் அதிதனிலே நூற்றுக்கொன்று தாக்கடா சோடசமுங் காணும்காணும்
வங்கமாம் படுபாவி யானவங்கம் வளமான வரணமதைக் கொள்ளாதப்பா
புங்கமாம் அஷ்டசித்தி யிதற்குள்ளாகும் புகழான தங்கமது பிறவித்தங்கம்
பங்கமது வாராது நாதத்தங்கம் பாருலகில் மாண்பருக்கு கிட்டாதன்றே
6155.
அன்றான விதியாளி வருவானானால் அவனுக்கே கிட்டுமது மற்றோர்க்கில்லை
குன்றான மலைநாடு தேசந்தன்னில் கொற்றவருஞ் சிவயோகி மாண்பருண்டு
தென்றிசையில் அகஸ்தியனார் மலையிலப்பா தீரமுடன் சென்றுவந்தோர் கோடியுண்டு
வென்றிடவே யவர்களிலுங் கருமியுண்டு வேதாந்த சிவயோகி தானுமுண்டே
6156.
உண்டான மனோலயத்தை யறிந்துகொண்டு வுத்தமனே நூல்பார்த்த வாதியுண்டு
கண்டாலும் விள்ளாத காணியாளர் கசடகற்றி மனம்பொருந்தி கருத்திலுன்னி
அண்டர்முனி தேவாதி ரிஷிகட்கொப்பாய் வப்பனே முற்பவத்தை யகற்றிவாழும்
சண்டமெனும் மாருதம்போல் பாசம்விட்டு சட்டமுடன் வாழுகின்ற யோகியாமே
6157.
யோகியாந் தத்துவத்தில் மிகுந்தவானாய் யோகமெனும் பதிதனக் குகந்தசீஷன்
போகமது தானகற்றி பொதிந்துவாழும் பொங்கமுடன் ஞானமென்ற மாண்பர்கண்டு
ரோகமது இல்லாத புண்ணியவானாய் நொடிக்குள்ளே பகுத்தறிவு கொண்டதீரன்
காகமது நேராத சீஷன்கண்டு சட்டமுடன் உபதேசஞ் செய்குவீரே
6158.
செய்யவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி வதிதவானே
துய்யதமிழ் பாண்டியனுக் கொப்பதான துரைராஜ சுந்தரனே புகலக்கேளும்
வையகங்கள் தான்புகழும் வனாந்திரத்தில் வண்மையுள்ள சிவந்தகொடி வேலியப்பா
மெய்யான மலைதனிலே மெத்தவுண்டு மேதினியுளோர் காண்பதுவு மரிதுமாமே
6159.
பாரேதான் மலைதனிலே சுற்றும்போது பாங்கான பாறையின்தன் வெப்புதன்னில்
நேரேதான் விளைந்திருக்கும் சிவந்தமூலி நெடிதான கொடிவேலி யென்னலாகும்
சீரேதான் கொடிவேலி தனையெடுத்து சிறப்புடனே சூதமதை யெடுத்துமைந்தா
வீரேதான் வீரமது களஞ்சிகூட்டி நீதியுடன் மத்தித்து ரவியிற்போடே
6160.
போடவே சீலையது வலுவாய்ச்செய்து பொங்கமுடன் கனயெருவிற் புடத்தைப்போடு
நீடவே புடமாறி எடுத்துப்பாரு நிலையான செம்பதுவும் என்னசொல்வேன்
கூடவே செம்புதனைப் பதனம்பண்ணு கொற்றவனே கலசகுண்டலத் துக்காகும்
ஆடவே மாற்றதுவும் இருபத்தைந்து வப்பனே குங்குமப்பூ நிறமுமாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக