பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6181-6190

6181.
காணவே ஆராதாரத்தைக் கண்டால் கனகமெனும் வாதமது கைக்குள்ளாச்சு
தோணவே லிங்கமது தன்னிலப்பா தோறாமல் எண்சாமம் சுருக்குத்தாக்கு
வேணவே ஜெயநீரில் நின்றபாகம் வேகமுடன் தூரதனில் நின்றசத்து
நீணவே சத்ததனை எடுத்துமைந்தா நிகட்சியுடன் லிங்கமதிற் கவசம்பூசே
6182.
பூசியே லிங்கமதிற் கவசம்போடு புகழான லிங்கமது புடம்தான்பத்து
மாசில்லா லிங்கமது மணல்தானப்பா மகத்தான புடமதுவும் பத்தேயாகும்
தேசியெனும் ஊசிநீர் ஆறாதாரம் தெளிவுடனே சுருக்கதனால் கட்டும்பாரு
ஊசியெனுங் காந்தமது லிங்கமப்பா வுத்தமனே வுருக்கதுபோ லிருக்கும்பாரே
6183.
உருக்கவே லிங்கமது எடுத்துமைந்தா வுத்தமனே மேற்போக்கு கூறக்கேளும்
பொருக்கமுடன் சாரமென்ற ஜெயநீர்தன்னால் பேரான தங்கமதை பத்துக்கொன்று
குருக்கியே தங்கமதை ஜெயநீராக்கி கூசாமல் லிங்கமதில் சுருக்குத்தாக்கு
நெருப்பினிலே வைத்தாலே சூடுதாக்கி நேரான ஜெயநீரை சுருக்குதாக்கே
6184.
தாக்கிடவே லிங்கமது யிறுகிமைந்தா தண்மையுடன் வெட்டருக்கு போலேகாணும்
நோக்கிடவே மேற்போக்கு புகலக்கேளும் நுட்பமுடன் தேனதனை சுருக்குதாக்கு
வாக்குடனே காலாங்கி நாதர்பாதம் வண்மையுடன் அவர்பாதம் வணங்கியல்லோ
தீக்குழியில் அயமதனால் கட்டிதன்னை தீர்க்கமுடன் தானெடுத்து செப்பக்கேளே
6185.
கேளேதான் லிங்கமதை இரும்பில்வைத்து கெடியான தேனதனை மனதுவந்து
பாளேதான் போகாமல் சுருக்குதாக்கு பட்சமுடன் லிங்கமது இருகிக்காணும்
சூளேதான் சுருக்கதுவும் அறுபத்துநான்கு சுயமான தேனதனால் வுருக்குதாக்கு
மீளேதான் லிங்கமது ஜெயக்கட்டாகும் மிக்கான கட்டதுவும் அரிதாம்பாரே
6186.
அரிதான கட்டதனை எடுத்துமைந்தா வப்பனே சிற்றணடத் தயிலம்வாங்கி
பொரியான வெங்காரம் பத்துக்கொன்று பொங்கமுடன் தயிலமதில் சேர்த்துமல்லோ
வரியான லிங்கமதை சுருக்குதாக்கு வண்மையுள்ள லிங்கமது யிளகிக்காட்டும்
பரியான தங்கமது ஜெயநீர்சேர்ந்து பாங்கான லிங்கமது மெழுகுமாச்சே
6187.
ஆச்சப்பா லிங்கமது மெழுகேயாகும் வப்பனே மெழுகதனைப் பதனம்பண்ணு
காச்சலென்ற லிங்கமது யிளகிக்காட்டும் கருவான லிங்கமது போக்குசொல்வேன்
மாச்சலது வாராமல் லிங்கந்தன்னை மயங்காமல் கருவங்கச் சுத்திசெய்து
பாச்சலுடன் வங்கமதை லிங்கந்தன்னை பட்சமுடன் தானுருக்கி யிடைதானீயே
6188.
இடையான இடையதுவும் என்னவென்றால் எழிலான சரியிடையே செப்பலாகும்
மடைபோன்ற வங்கமதை யுருக்கிமைந்தா மயங்காமல் வுருக்குமுகந் தன்னிலீய்ந்து
கடையான தங்கமதில் வங்கலிங்கம் கருவுடனே வுருகிநின்ற களங்குதன்னை
தடையறவே தங்கமதிற் கொடுத்துமைந்தா சட்டமுடன் தானுருக்கி யெடுத்துப்பாரே
6189.
எடுத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான களங்கமது யேமவித்தை
கொடுத்ததொரு களங்குதனை யெடுத்துபாலா தோறாமல் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று 
கொடுத்திடவே வுருக்குமுகந் தன்னிலீய்ந்து கொற்றவனே செம்பதனை யூதிப்போடு
விடுத்ததொரு மாற்றதுவும் என்னசொல்வேன் விட்டகுறை யிருந்தவர்க்கு லபிக்குந்தானே
6190.
தானான வெள்ளியது என்னசொல்வேன் தண்மையுள்ள மாற்றதுவும் ஆறதாகும்
மானான மட்டநிகர் நாலுக்கொன்று மகத்தான தங்கமது வொன்றுசேரு
தேனான தேவியுட கடாட்சத்தாலே தேற்றமுடன் மாற்றதுவும் எட்டதாகும்
கோனான புடத்துக்கு வுறுதிதங்கம் குவலயத்தில் ஆரறிவார் சித்தர்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக