பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6011-6020

6011.
உரைத்தேனே வெகுநூல்கள் அனந்தங்கோடி வுத்தமனே இந்நூலுக் கொப்பதாமே
கரைத்ததொரு பொருள்களெல்லாம் இதிலடக்கம் காசினியில் கண்டவர்கள் விடுவாரோசொல்
நரைதிரையும் வருவதில்லை இந்நூல்கண்டால் நாதாக்கள் தான்முதலோர் நாணுவார்கள்
சுரையடர்ந்த கரைபோலே யெண்ணவேண்டாம் சுந்தரனே குருநூலாம் மெய்நூலாமே
6012.
நூலான நூலுக்குள் மார்க்கஞ்சொன்னேன் நுட்பமுடன் மார்க்கமது என்னவென்றால்
பாலான சித்தருக்கு நீதிசொன்னேன் பாங்குடனே யனீதவழி விதியுஞ்சொன்னேன்
சேலான சன்மார்க்கந் துன்மார்க்கந்தான் செப்பினேன் கடைக்காண்ட மேழினுள்ளே
மாலான மகுத்துவங்கள் சொல்லொண்ணாது மகத்தான நீதிவழி பாடுகாணே
6013.
காணவே சத்தகாண்ட மேழினுள்ளே கருவான கடைக்காண்டம் தன்னுக்குள்ளே
பூணவே சிடிகையென்ற நுணுக்கமப்பா புகட்டினேன் புலிப்பாணி மைந்தாகேளு
ஆணவங்கள் தானொடுங்கி மைந்தாநீயும் வப்பனே சித்தாதி முனிவர்க்கெல்லாம்
நாணலுடன் முடிவணங்கி கரங்குவித்து நற்பாத கமலமதை வணங்குவாயே
6014.
வணங்கியே நூலதனைப் பதனம்பண்ணு வகையில்லா கசடருக்கு யீயவேண்டாம்
சுணங்கமெனுங் கழுதையப்பா மாண்பர்தாமும் சுந்தரனே வெகுபேர்கள் இருப்பாருண்டு
கணமுடைய ராட்சதர்கள் தன்னைப்போல கருமிகளும் மெத்தவுண்டு யீயவேண்டாம்
மனங்கமழும் புண்ணியர்கள் தன்னைத்தேடி மகத்தான நூல்கொடுத்தால் புனிதமாமே
6015.
புனிதமாங் கருமிகட்குக் கொடுத்தாயானால் பூபாலகன் மணியே பாபமெய்தும்
கனிவுடைய புண்ணியர்கள் வெகுபேருண்டு காசினியில் உன்னைவந்து நூல்கேட்டாலே
இனிதான வார்த்தையது மிகவுங்கூறி எழிலான நூலுக்குச் சாபந்தீர்ந்து
தனியாகத் தானழைத்து உபதேசித்து தாரணியில் பிழைக்கும்வகை சொல்லுவீரே
6016.
சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை துரைராஜ காலாங்கி நாதர்தம்மை
புல்லவே யவர்தமது பதாம்புயத்தை போற்றியே எந்நாளும் மனதுவந்து 
அல்லது விட்டகற்றி யன்புகூர்ந்து வப்பனே சதாநித்தம் மனதிலுன்னி
வெல்லவே யுபதேச மோதியல்லோ விருப்பமுடன் நூல்கொடுத்தால் புண்ணியமாமே
6017.
புண்ணியமாம் இன்னமொரு மார்க்கங்கேளு புகழான புலிப்பாணி மைந்தாபாரு
மண்ணிலே வெகுகோடி சித்துதாமும் மகத்துவங்கள் கொண்டதொரு புனிதவான்கள்
நண்ணியதோர் நூல்களெல்லாம் மிகவுங்கூறி நலமுடனே மறைத்துவைத்தார் அனேகங்கோடி
உண்மையாய் நூலதனைப் பாடியல்லோ வுத்தமனே மறைத்ததினால் ஒன்றுங்காணே
6018.
ஒன்றான சித்துமுனி ரிஷியைப்போலும் ஓகோகோ நாதாக்கள் தன்னைப்போலும்
குன்றான நூலதனை மிகவும்பாடி குகைதனிலே மறைத்துவைத்தார் கோடிமாண்பர்
வென்றிடவே வகஸ்தியரும் மிகவாய்ப்பாடி வெட்டவெளி குகைதனிலே மறைத்துவைத்தார்
தென்றிசையில் சித்தர்களுந் தாமுமல்லோ தெளியாமல் மலைமீதில் ஒளித்தார்தானே
6019.
தானான சாத்திரத்தைப் பாடியல்லோ தண்மையுடன் குகைதனிலே வைத்தாரப்பா
கோனான கும்பமுனி ரிஷியார்தாமும் கூட்டமிட்டு சாத்திரத்தை மறைத்துவைத்தார்
மானான காலாங்கி நாதர்தாமும் மார்க்கமுடன் நூலதனைப் பாடியல்லோ
தேனான சீஷவர்க்க மாண்பருக்கு தேற்றமுடன் நூல்கொடுத்தார் திண்ணமாமே
6020.
திண்ணமா மின்னமொரு மார்க்கம்பாரு தீர்க்கமுடன் புலிப்பாணி மைந்தாகேளு
வண்ணமா மேருவுக்கு வடபாகத்தில் மகத்தான கடலோரங் காட்டகத்தில்
நண்ணவே சிங்கமதை யானுங்கண்டேன் நாதாக்கள் சித்துமுனி யங்குமுண்டு
திண்ணமுடன் குளிகையது கொண்டுமல்லோ தீர்க்கமுடன் வனத்தில் இறங்கினேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக