பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6091-6100

6091.
கூறுவார் வாய்திறந்து முனியார்தாமும் கொப்பெனவே பொதிமாட்டுக் காரரருக்கு
தேறுதலாய் வார்த்தையது கூறும்போது தேற்றமுடன் அதிலொருவன் தானெழுந்து
மாறுதலாய் சித்துமுனி தம்மைப்பார்த்து மகத்தான ரிஷியாரே பண்பாய்க்கேளும்
ஆறுபுடை சூழ்ந்திருக்கும் நதியோரத்தில் அசோகமென்ற விருட்சமது விழுகலாச்சே
6092.
விழுந்ததொரு அசோகமென்ற விருட்சந்தன்னை வீறுடனே நிமிரவது செய்வீரானால்
பழுதுபடா திருமேனி யுந்தனுக்கு பட்சமுடன் கெற்பமது தருவோம்நாதா
வழுதுணையாங் கற்பமது கொண்டபோது மகத்தான சித்துமுனி யெங்களுக்கு
முழுதுமே புகையிலையின் கற்பந்தன்னை முளையாக யாங்கொடுப்போங் காணீர்தானே
6093.
காணவே மாண்பரெல்லாங் கூறும்போது கருவான சித்துமுனி ரிஷியார்தாமும் 
தோணவே யவர்களுக்கு பிரம்மைதோன்ற துப்புரவாய் சித்துமுனி நாதரல்லோ
வேணதொரு காயாதி கொண்டசித்து வேகமுடன் அசோகமென்ற விருட்சந்தன்னை
பூணவே தானோக்கிப் பார்த்துமல்லோ புகழான விருட்சமதை நிறுத்தினாரே
6094.
நிமிர்த்தவே வருட்சமது தானெழுந்து நீதியுடன் இலையூன்றி நிற்கும்போது
சமர்த்துள்ள சித்துமுனி தம்மைக்கண்டு தாரணியில் மகிமை பெரிதுமல்ல
கமர்போன்ற கானகத்தில் இருக்குங்கல்லாம் கடிதான மலைகல்லைத் தன்னைத்தானும்
சுமர்ந்துமே எந்தனிடங் கொண்டுவந்து சுந்தரரே கொடுத்தாலே நம்புவோமே
6095.
நம்புவோ மென்றல்லோ மாண்பரெல்லாம் நயமுடனே வார்த்தையது மனதுவந்து
வம்புடனே சித்துமுனி தன்னைக்கண்டு வளமுடனே வார்த்தையது கூறும்போது
தெம்புடனே குண்ணுமலைத் தன்னைத்தூக்கி தீரமுடன் பொதிமாட்டுக் காரர்முன்னே
கும்பல்தனில் முண்ணதனை யெடுத்துமல்லோ கொப்பெனவே கொண்டல்லோ போட்டிட்டாரே
6096.
போட்டாரே சித்துமுனி ரிஷியார்தாமும் பொங்கமுடன் கொண்டுவந்து மாண்பர்முன்னே
நீட்டமுடன் முண்ணதனைக் கொண்டுவந்த நிலையான வித்தையது மகிமையல்லோ
வாட்டமுடன் இன்னமொரு மார்க்கஞ்செய்தால் மகத்தான மகிமையென்று நம்பியல்லோ
கூட்டமுடன் உந்தமக்கு பணிகள்செய்து கொப்பெனவே சீஷர்களா யிருப்போம்தானே
6097.
தானான வார்த்தையது கேட்டபோது தண்மையுடன் சிவஞான சித்துதாமும்
கோனான பொதிமாட்டுக் காரர்தம்மை கொப்பெனவே மகிமையது யென்னவேண்டும்
தேனான மகிமையது வேண்டுமானால் தேற்றமுடன் சித்தொளிவுஞ் செய்யக்கூடும்
மானான மகதேவர் கடாட்சத்தாலே மார்க்கமுடன் மகிமையது வதிதமுண்டே
6098.
தருவேனென்று சித்துமுனி கூறும்போது தகமையுள்ள பொதிமாட்டுக் காரர்தாமும்
குருவான சித்துமுனி ரிஷியாரேகேள் கொற்றவரே எங்களுக்கு இன்றுதானும்
பருமழையு மின்னலிடி காந்தல்தாமும் பட்சமுடன் வரவழைப்பீர் ஆனாலல்லோ
திருவான குருவென்று வும்மைத்தானும் தீரமுடன் எந்நாளும் வந்திப்போமே
6099.
வந்திப்போம் உம்மையொரு குருவாயெண்ணி மகத்தான நாதாக்கள் நீர்தானென்றும்
சிந்திப்போம் சதாகால மர்ச்சித்தேதான் சீருடனே சின்மயத்தை மனதிலுன்னி 
எந்நாளுங் கிரிவாழும் பதாம்புயத்தை எழிலான மெய்க்குரு வென்றெண்ணி
பந்நியே கிரிதனிலே மாண்பரெல்லாம் பாங்குடனே சதாநித்தம் அர்ச்சிப்போமே
6100.
போமேதான் வார்த்தையது கூறும்போது பொங்கமுடன் வனத்துமகா ரிஷியார்தாமும்
தாமேதான் சொன்னபடி வனத்தில்தானும் தகமையுடன் மண்காற்று மழையுமாக
ஆமேதான் மின்னலிடி ஜோதிபோலும் அவனியெலாந் தத்தளிக்க மிகவேசெய்தார்
வேமேதான் பொதிமாட்டுக் காரரெல்லாம் விருப்பமுடன் கண்டல்லோ பிர்மித்தாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக