பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6001-6010

6001.
தானான பிரகாசமான நந்தி தண்மையுள்ள மனோன்மணியாள் பாதம்போற்றி
கோனான வேல்முருகன் தாள்பணிந்தேன் கொற்றவனே அரிஅயனும் பதந்தான்போற்றி
மானான வகஸ்தியனார் பாதம்போற்றி மகத்தான கமலமுனி தாள்பணிந்தேன்
தேனான சதாசிவத்தி னடிபணிந்தேன் தேற்றமுடன் காலாங்கி பாதங்காப்பே
6002.
காப்பான பதினெண்பேர் முனிவர்தானும் பலப்பலவாய்ப் பாடிவைத்தார் நூல்கள்பேதம்
மூப்பான நூல்களுமே அனேகஞ்சொன்னார் முனையான சித்துமகா ரிஷியார்தாமும்
வாப்பான பெருநூலில் அனந்தஞ்சொன்னார் வளமையுடன் இந்நூல்போல் ஆருஞ்சொல்லார் 
தாப்பான நூலிதுதான் சத்தகாண்டம் தண்மையுடன் பாடிவைத்தார் ஏழாயிரந்தானே
6003.
தானான சத்தகாண்ட மேழாயிரத்தில் தண்மையுள்ள காண்டமிது ஏழாங்காண்டம்
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கூறினேன் வையகத்து வதிசயங்கேள்
தேனான மணிபோல் ஏழாயிரத்தில் தேற்றமுடன் சொல்லிவைத்தேன் ஏழாங்காண்டம்
மானான கடைக்காண்டம் நீதிமார்க்கம் மன்னவனே யுந்தமக்காய் ஓதினேனே
6004.
ஓதினேன் சீனபதி மாண்பருக்கு வுத்தமனே காண்ட மேழாயிரந்தான்
நீதியுடன் சன்மார்க்க நிலையுஞ்சொன்னேன் நிஷ்களங்கமான தொருவழியுஞ் சொன்னேன்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்கள் பாருலகில் செய்ததொரு நூலையெல்லாம்
ஆதியந்த முடியுடனே பொருளாராய்ந்து வப்பனே சின்மயத்தின் வழிசொன்னேனே
6005.
சொன்னதொரு பொருள்களெல்லாம் இதிலடக்கம் சுந்தரனே போகரே ழாயிரந்தான்
மன்னவர்கள் வையகத்து வாழ்க்கையெல்லாம் மார்க்கமுடன் அதிலடக்கஞ் சொல்லொண்ணாது
தென்னவர்கள் தேவாதி முனிவர்தாமும் தேற்றமுடன் செய்ததொரு நூல்கள்யானும்
பன்னவே திரட்டியல்லோ பெருநூலாக பாரினிலே வினோதவகை சொல்லிட்டேனே
6006.
இட்டேனே இதிகாசப் பொருள்களெல்லாம் எழிலான போகரே ழாயிரத்தில்
சட்டமுடன் பாடியல்லோ நுணுக்கமாக சாங்கமுடன் செய்துவைத்த பெருநூலப்பா
நட்டமது வாராது இந்நூலப்பா நலமான வேதையிது கோடிக்கோடும்
திட்டமுடன் நாதாக்கள் சொன்னதில்லை தீர்க்கமுடன் சத்தகாண்டம் பண்புதானே
6007.
பண்பான வறுவகை காண்டத்துள்ளே பலகோடி வேதைமுகம் அனந்தஞ்சொன்னேன்
நண்பான நாதாக்கள் நீதிமார்க்கம் நலமுடனே யாரேனுஞ் சொன்னதில்லை
திண்பான நீதிவழிக் குறியசித்தை தீர்க்கமுடன் பாடிவைத்தேன் இந்நூலுக்குள்
வன்பான பெருநூல்தான் குருநூலாகும் வண்மையுடன் பாடிவைத்தேன் காண்டமாமே
6008.
காண்மாஞ் சத்தகாண்ட மேழாயிரந்தான் காவியங்கள் போலவொரு நூலுமில்லை
பாண்டவாள் வையகத்து மாண்பரெல்லாம் பாங்குடனே சித்துவகை முனிவர்வாழ்க்கை
தாண்டவம்போல் குருநூலே ழாயிரத்தில் சாற்றினேன் அறுகாண்டந் தன்னிற்குள்ளே
பூண்டதொரு லோகவதி சயங்களெல்லாம் புகட்டினேன் காலாங்கி கடாட்சந்தானே
6009.
தானான சத்தகாண்டந் தன்னைப்போலே சாற்றினார் அகஸ்தியனார் முனிவர்தானும்
கோனான பன்னீராயிரந் தானப்பா கொற்றவனே புலஸ்தியருக் குபதேசித்தார்
பானான பனிரெண்டு காண்டஞ்சொன்னார் பாலகனே வாயிரத்துக் கொருகாண்டந்தான்
தேனான மனோன்மணியாள் கிருபையாலே தேற்றமுடன் பாடிவைத்த நூல்தான்பாரே
6010.
பாரேதான் ஏழுலட்சங் காப்புதன்னை பாலகனே பாடிவைத்தார் அனந்தமாக
நேரேதான் இந்நூலே ழாயிரந்தான் நேர்மையுள்ள காண்டமது தன்னைப்போலும்
சீரேதான் அகஸ்தியனார் உண்டுசெய்த சிறப்பான பன்னீராயிரத்தைப் போலும்
ஆரோதான் சொன்னதுண்டோ நூலையப்பா வப்பனே யானுமல்லோ வுரைத்திட்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக