பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6111-6120

6111.
வந்ததொரு மாண்பரெல்லாஞ் சித்துதம்மை மகதேவர் முன்னிருந்த சித்தென்றெண்ணி
சொந்தமுடன் அவர்பாதம் முடிவணங்கி சுந்தரம்மா நெடுந்தூரம் சென்றோமையா
அந்தமுடன் சரமாரி பொழிந்துமல்லோ வையனே பிரளயங்கள் அதிகமாகி
விந்தையுடன் வந்ததொரு யிடையூர்தன்னால் விசனமுடன் மலையேறி வந்தோம்தாமே
6112.
வந்தோமே யென்றுசொல்லி மாண்பரெல்லாம் வளமுடனே சித்துவுக்குக் கூறும்போது
பந்தமுடன் மாண்பருக்கு சித்துதாமும் பட்சமுடன் கூறலுற்றார் நாதர்தம்மை
வந்தையது வுபதேசஞ் செய்வதற்கு வித்தகனார் குருமொழியின் வாக்கதாச்சு
சிந்தனையா யெல்லோரும் வந்திருந்து சிறப்புடனே சித்துமுனி கூறினாரே
6113.
கூறினார் சித்துமுனி மாண்பருக்கு குவலயத்தில் நீங்கள்செய்த அறத்தினாலே
மீறியதோர் வுங்களுக்கு உபதேசங்கள் மிக்கமனு நீதியுடன் குருவின்வாக்கு
தேறியே பலநூலும் ஞானம்தேர்ந்து தேற்றமுடன் உங்களுக்கு உபதேசங்கள்
சீறியே கோபமது வாராமற்றான் சிறப்புடனே வுபதேசஞ் செய்தார்பாரே
6114.
பாரேதான் உபதேசஞ் செய்தவண்ணம் பாருலகில் யாருக்கும் கிட்டாதன்று
நேரேதான் கிரியிலுள்ள வனப்பும்வாய்ந்து நேர்மையுடன் மனுநீதி கலைக்கியானம்
கூரேதான் வேதமுத லாறுசாத்திரம் குறிப்பான கலைக்கியானம் அறுபத்துநான்கு
தீரேதான் மாண்பருக்கு உபதேசித்தார் தீர்க்கமுடன் சித்துமுனி ரிஷியார்தாமே
6115.
தானான ரிஷியாரும் அன்புகூர்ந்து தகமையுடன் பொதிமாட்டுக் காரருக்கு
கோனான குருசொன்ன வாக்குபாதம் குவலயத்தில் யாதொன்றும் குறைவில்லாமல்
மானான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் மகத்தான காலாங்கி கிருபையாலும்
தேனான தேவர்முனி ரிஷியார்பாதம் தெளிவுடனே வாதமது போதிப்பாரே
6116.
போதிக்க வாதமது யாதென்றாக்கால் போக்கான மலைதோறும் குன்றுதோறும்
ஆதித்தன் சந்திரனார் காணாவண்ணம் அகஸ்தியனார் மலைமூலி யனைத்துங்காட்டி
வாதிகளு மறியாத மூலிவர்க்கம் வளமையுடன் கிரிமூலி பசிமூலியாவும்
வேதிக்கி மூலிகளும் அனைத்துங்காட்டி வேகமுடன் உபதேசஞ் செய்திட்டாரே
6117.
செய்துமே யேமமென்ற வித்தைதன்னை செப்பினார் பொதிமாட்டுக் காரருக்கு
கைதவமாம் மூலிகைக்குச் சாபஞ்சொல்லி கபடகற்றி வுளவுமுதல் யாவுங்காட்டி
வையகங்கள் தான்புகழ மாண்பருக்கு வண்மையுடன் ஏமமென்ற வித்தைதன்னை 
துய்யபுகழ் மாண்பருக்கு வுளவுமூலி செப்பினார் நாதரிஷி செப்பினாரே
6118.
செப்பவே யின்னமொரு மார்க்கங்கேளு செயலான புலிப்பாணி மைந்தாபாரு
ஒப்பமுடன் பொதிமாட்டுக் காரர்தாமும் ஓகோகோ நாதாக்கள் முனிவருக்கு
தப்பிதங்கள் நேராமல் புகையிலைகற்பஞ் சட்டமுடன் தான்கொடுத்த வுபசாரத்தால்
செப்பவே யேமமென்ற மூலிதன்னை செயலாகக் காண்பித்தார் கண்டிட்டேனே
6119.
கண்டேனே வனத்தினுட மூலியெல்லாம் கருவாகக் குளிகைகொண்டு கிரியைசுற்றி
விண்டதொரு மூலிகையின் வகுப்பையெல்லாம் விருப்பமுடன் உந்தமக்கு வுபதேசங்கள்
பண்டதுபோல் யான்வகுத்து சொல்வேனப்பா பட்சமுடன் மூலியது போக்குசொல்வேன்
சண்டமா ருதம்போல செய்வாய்நீயும் சாங்கமுடன் கருமிகட்குச் சொல்லொண்ணாதே
6120.
சொல்லவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு தூயதான வசளையென்ற மூலிமார்க்கம்
புல்லவே கறுவாளைக் கொண்டுவந்து புகழான முப்பூவுங் கூடச்சேர்த்து
கொல்லவே தாம்பரமாந் தகட்டின்மேலே கொப்பெனவே முப்பூவை மத்தித்தேதான் 
மெல்லவே தகட்டின்மேல் பூசியேதான் மேன்மையுடன் கோழியென்ற புடத்தைப்போடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக