பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5971-5980

5971.
மடையான மாண்பர்களும் பலநூல்கற்று மகத்தான மாயாவின் வலையிற்சிக்கி
இடைநடுவில் வையகத்து வாழ்க்கைதன்னை யெழிலாகத் தன்மனதில் பாராமற்றான்
கடைபோன்ற ஞானவழி கோடிசித்தர் கருவான சாத்திரங்கள் செய்திருக்க
திடமுறவே சற்றேனும் மனதுறாமல் தீர்க்கமுடன் பலநூலும் பார்த்தார்தானே
5972.
தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமிருக்குங் காலந்தன்னில்
பானான வையகத்து மாண்பரெல்லாம் பதிகெட்டு மதிகெட்டு குறிகள்கேட்டு
தேனான மனோன்மணியை மறந்துமல்லோ தீர்க்கமுடன் மூடவழி சென்றார்பாரே
5973.
பாரேதான் குறியுரைக்குஞ் ஜங்கன்தானும் பாங்கான பதிமேடை தனிலிருந்து
நேரேதான் மாண்பர்களின் கூட்டந்தன்னை நேர்மையுடன் தானோக்கி பார்த்துமேதான்
சீரேதான் சத்தகன்னி வந்தேனப்பா சிறப்புடனே சன்னதங்கள் மிகவுண்டாச்சி
கூரேதான் வாடைகொண்டு வீசுதையா கொற்றவரே குறிகேட்டால் கூறுவேனே
5974.
கூறுவேன் விளையாடி சன்னதங்கள் கொப்பெனவே ஓங்கார சத்தத்தோடு
மாறுபடா திருமேனி மங்கையப்பா மகத்தான பச்சைரிஷி வனத்திற்றானும்
ஆறுண்டு குளமுண்டு மடுவுமுண்டு அங்கிருக்கும் வனத்துகன்னி யானுமல்லோ
வீறுடனே வெகுநாளாய் யுந்தன்வாசல் விருப்பமுடன் விளையாட வந்தேன்பாரே
5975.
வந்தேனென்று சொல்லுகையில் ஜங்கன்தானும் வகையறிய முழுமூடர் மாண்பர்தம்மில்
சிந்தனையா யதிலொருவர் தானெழுந்து சிறப்புடனே குறிகேட்க வந்துநின்று
பந்துமுலை ஸ்தனத்தாலே பச்சைகன்னி பட்சமுடன் எந்தனுக்கு குறிகள்கூறும்
தந்தையார் வைத்ததோர் நிதிகள்கோடி தாரணியில் மெத்தவுண்டு சொல்லொண்ணாதே
5976.
உண்டான திரவியங்கள் மெத்தவுண்டு ஓகோகோ நாதாக்கள் கொடுத்தபாக்கியம்
தண்மையுடன் தேவதா ஸ்தலங்கள்யாவும் தகமையுடன் தருமமது செய்தேன்யானும்
வண்மையுடன் யாகமது செய்துமல்லோ மகத்தான காணிக்கை யாவுந்தந்தேன்
உண்மையாய்க் கொடுத்தநிதி கோடியுண்டு வுத்தமனே மைந்தனிலை என்றார்தாமே
5977.
என்றுமே மாண்மர்களில் ஒருவனப்பா எழிலான ஜங்கன்தனைக் கண்டுமல்லோ
குன்றான மலைநாடு குகைகள்தன்னில் கொம்பனையே வந்ததொரு கன்னிதாயே
சென்றுமே தம்பதிக்கு வந்தேனம்மா செம்மலுடன் எந்தனுக்கு மைந்தன்வேண்டும்
இன்றுமே குறியுரைத்து எந்தனுக்கு எழிலுடனே ஏகவென்று தொழுதிட்டாரே
5978.
தொழுதாரே சமுசாரி யானமாண்பர் துப்புறவாய் பாதகாணிக் கையிலிட்டு
அழிதாரே தேவியுடன் தானுமல்லோ அங்ஙனவே இருபேரும் சாஷ்டாங்கிட்டு
முழுவதிலும் எங்களைநீர் பாதுகாத்து மொய்குழலே எந்தனுக்கு மைந்தனீந்து
மழுவுடனே கற்பூர தீபாராத்தி மகிழ்ச்சியுடன் தருவேனென்று பணிந்திட்டாரே
5979.
பணியவே சத்தகன்னி ஜங்கன்தானும் பட்சமுடன் மனதுவந்து மனங்களித்து
மணியான மைந்தனல்லோ வுனக்குண்டாகும் மகப்பேறு மெத்தவுண்டு யுந்தனுக்கு
கணிதமுடன் குறியுரைத்தேன் மைந்தாபாலா கட்டழகி யுன்தேவி இன்றுமட்டும்
துணிவுடனே இருபத்தோர் வாரமப்பா துப்புரவாய் பூசைமுகம் வரச்சொல்வீரே
5980.
சொல்லவே சத்தகன்னி ஜங்கன்தானும் சுத்தமுடன் சமுசாரி மாண்பன்கேட்டு
வெல்லவே தன்தேவி தனையழைத்து விருப்பமுடன் இன்றுமுதல் நீயுமேதான்
புல்லவே சத்தகன்னி ஜங்கன்தானும் புகழாக வாக்குரைத்த தன்மைபோலே
நல்லதோர் இருபத்தோர் வாரமட்டும் நலமுடனே பதிமுகத்தில் செல்வீர்தாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக