பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6081-6090

6081.
கண்டாரே புகையிலையின் வாசந்தன்னை பாங்கான பனையளவு சித்துதானும் 
கொண்டதொரு புகையிலையின் எண்ணமப்பா கொற்றவனே மயக்கமது மிகவுண்டாகி
எண்ணமுடன் புகையிலையின் கற்கந்தன்னை ஏற்றமுடன் புகைபிடிக்க மனதயர்ந்து
வண்ணமுடன் மலையைவிட்டுக் கீழிறங்கி வளமுடனே வருவதற்கு எண்ணினாரே
6082.
எண்ணியே சித்துமுனி ரிஷியார்தாமும் எழிலான கிரியைவிட்டு இறங்கும்போது
நிண்ணதொரு பனமரம்போல் தோற்றமாச்சு நிஷ்களங்க மாகவல்லோ இறங்கும்போது
தண்ணமுடன் மேற்பதியை விட்டுமல்லோ தாழவே படிபடியாய் இறங்கும்போது
புண்ணியனார் சித்துமுனி ரிஷியார்தாமும் புகழுடனே இறங்கிவரக் குறைவானாரே
6083.
குறைவான ரோமமென்ற கரடிபோலும் கொற்றவனே சித்துமுனி ரூபங்கண்டார்
திரையான பொதிமாட்டுக் காரரெல்லாம் தீர்க்கமுடன் சித்துமுனி இறங்கும்நேர்மை
மறைவாக வான்ரூபங் குறைந்துகாணும் மகத்தான ரோமமது தெரியவில்லை
முறையான மகுத்துவத்தை எண்ணாமற்றான் மூர்க்கமுடன் சித்துதமை வசனிப்பாரே
6084.
வசனிக்கப் பொதிமாட்டுக் காரரரெல்லாம் வளமையுடன் ஒருவருக்கொ ருவமைகூறி
நிசமுடைய பனையளவு சித்துபோலும் நீதியுடன் சித்துதம்மை மதியாமற்றான்
புசமுடைய தேவாதி சித்துதம்மை புகழான மகுத்துவங்கள் எண்ணாமற்றான்
கசம்போன்ற ஆயிரம்பேர் மாண்பரெல்லாம் கட்டாக ஒருவருக்கோர் பேசுவாரே
6085.
பேசுவார் மலையைவிட்டு இறங்குஞ்சித்தை பேரான மகுத்துவங்கள் அறியாமற்றான்
காசுபண மில்லாத சித்துவென்றும் கருவான சதுரகிரி யிருக்குமாண்பன்
வீசுபுகழ் மகுத்துவங்கள் இல்லாரென்றும் வீரமுடன் ஒருவருக் கோருகந்துபேசி
ஆசுகவி போலாக வார்த்தைகூறி வப்பனே சம்வாதம் செய்வார்தானே
6086.
தானான பொதிமாட்டுக் காரரெல்லாம் தகமையுடன் ஒருவருக்கோர் வாதுகூறி
கோனான குருவென்று மதியாமற்றான் கொற்றவனே கும்பலது மிகவுங்கூடி
கோனான புகையிலையின் பொதிகைதன்னை தேற்றமுடன் தானிறக்கி யமுதுகொள்ள
மானான சாவடியாங் கிரியோரந்தான் மகத்தான அமுதுகொள்ள நண்ணுவாரே
6087.
நண்ணியே யேகாந்த கூட்டந்தன்னில் நலமுடனே தானிருக்கும் வேளையப்பா
திண்ணமுடன் கிரிதனிலே இருந்தசித்து தீர்க்கமுடன் மாண்பருட கூட்டந்தன்னில்
தண்மையாய் பொதிமாட்டுக் காரர்தன்னை தகமையுடன் சித்துமுனி யருகிற்சென்று
உண்ணவே புகையிலையின் கற்பமப்பா வுத்தமனே எனக்கருளு மென்றிட்டாரே
6088.
என்றுமே ஏதுரைத்தார் முனிவர்தாமும் யெழிலான மாண்பர்களின் முகத்தைநோக்கி
குன்றுமேல் சித்துமுனி யொருவருண்டு குவலயத்தில் ஒருநாளும் வருவதில்லை
இன்றுமுதல் காற்றினது வாடையாலே எழிலான புகையிலையின் வாசமப்பா
வென்றிடவே யவர்தமக்குக் காணலாச்சு விட்டகுறை இருந்ததினால் கிடைக்கலாச்சே
6089.
ஆச்சப்பா பொதிமாட்டுக் காரர்பாலா வப்பனே எந்தனுக்கு மனதுவந்து 
மூச்சடங்கித் தானிருக்கும் சித்துதானும் முனையான வனத்துரிஷி முனிவருக்கு
பாச்சலென்ற புகையிலையின் கற்பமப்பா பட்சமுடன் நீரவர்க்குத் தருவீரானால்
மாச்சலென்ற வினையகலு முந்தனுக்கு மகயோக புண்ணியமது கிட்டும்பாரே
6090.
பாரேதான் என்றலுமே யோகிதானும் பாங்குடனே சித்துமுனி நாதருக்கு
சீரேதான் புகையிலையின் கற்பந்தானும் சிறப்புடனே யாங்களது கொடுப்போமானால்
நேரேதான் உம்மாலே மகிமையென்ன நேர்மையுடன் எந்தமக்குக் கூறுமென்றார்
தீரேதான் சித்துமுனி ரிஷியார்தாமும் சிறப்புடனே மனதுவந்து கூறுவாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக