பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6191-6200

6191.
சித்தான சித்துமுனி நாதர்தாமும் சிறப்பான ரிஷிதேவர் சொன்னமார்க்கம்
முத்தான வேதையிது யின்னஞ்சொல்வேன் முனையான மார்க்கமது போலொண்ணாது
பத்தியுடன் சிவராஜ யோகிமாண்பர் பாலகனே செய்யும்வகை யனேகமுண்டு
சுத்தியுள்ள செம்பதுவும் துலந்தானொன்று துறையான லிங்கமது துலந்தான் ரெண்டே
6192.
துலமான செம்பதனில் லிங்கம்ரெண்டு தூக்கான லிங்கமதைக் கிராசமீவாய்
நலமான யிருண்ட செம்புகட்டிப்போகும் நாற்றமுள்ள வூரலது யேகிப்போகும்
நலமான வூரலது யேகியல்லோ சாங்கமுடன் திரைசகடும் அற்றுப்போகும்
குலமான தங்கமதைச் சரியாய்ச்சேர்த்து குகைதனிலே தானுருக்கி யெடுத்திடாயே
6193.
எடுத்துமே மதிதனிலே பத்துக்கொன்று எழிலான தங்கமதை தாக்குதாக்கு
கொடுத்திடவே மாற்றதுவும் ஆறதாகும் கொப்பெனவே தங்கமது யெட்டிலொன்று
அடுத்துமே தான்கொடுத்து வுருக்கிக்கொண்டு வப்பனே வாரடித்துப் புடந்தான்போடு
கொடுத்ததொரு மாற்றதுவும் என்னசொல்வேன் தோறாமல் வயததுவும் ஏழதாமே
6194.
ஏழான பொன்னதுவும் பசுமைமெத்த யெளிதான யேற்றமொன்று யின்னஞ்சொல்வேன்
தாழான மட்டமது மாற்றுகாணும் தண்மையுள்ள பசுமையது என்னசொல்வேன்
காழான துருசினுட செந்தூரத்தால் கருவான மாற்றதுவும் அதிகங்காணும்
சூழான சூதவித்தை யேமவித்தை சுந்தரனே சொல்லவுந்தான் நாவொண்ணாதே
6195.
ஒண்ணாது இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ புலிப்பாணி யுகந்தபாலா
கண்ணான லிங்கமது களஞ்சியொன்று கருவான நாகமது களஞ்சியொன்று
மண்ணான வாயுவென்ற பிரிதிவிதானும் மகத்தான வங்கமது களஞ்சியொன்று
திண்ணமாம் லோகமதை யொன்றாய்க்கூட்டி தீரமுடன் மூசைதனில் உருக்கிடாயே
6196.
உருக்கியே கண்விட்டு ஆடும்போது வுத்தமனே லிங்கமென்ற களஞ்சிதன்னை
பெருக்கியே வுருக்குமுகந் தன்னிலப்பா பேரான லிங்கம் குருவொன்றீய
வருக்கமுடன் மூசைதனை யாற்றிப்பாரு வளமான களங்கமது யென்னசொல்வேன்
சுருக்கமுள்ள சிமிட்டுவித்தை வேதைதானும் துப்புரவாய் மூசைதனை யுடைத்துப்பாரே
6197.
உடைத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் வுத்தமனே லோகமென்ற களங்குலிங்கம்
தடையறவே மதியதுவும் ஏழதாகும் தாக்கான ரவியதுவும் மூன்றதாகும்
கடையான களங்கமது வொன்றதாகும் களங்கமற தானுருக்கி குருவொன்றீய
மடைபோன்ற களங்கமதைத் தானெடுத்து மகத்தான வோட்டில்வைத்து வூதிப்போடே
6198.
போடேதான் கரியோட்டி லூதும்போது பொங்கமுடன் வெள்ளியது சவளைபோலாம்
நாடேநீ செம்பகல வூதிப்போடு நலமான பசும்பொன்னு யென்னசொல்வேன்
தேடேநீ புடமதனில் தாக்கிப்பாரு தெளிவான தங்கமது ஜோதிமெத்த 
ஆடேநீ ஜீவனத்தை செய்துகொண்டு வப்பனே தவநிலையை சாதிப்பாயே
6199.
சாதிப்பா யின்னமொரு கற்பஞ்சொல்வேன் சற்பாத்ர முள்ளதொரு மைந்தாகேளு
வேதினிலே ஏரிதன்னில் வளருகின்ற மேன்மையுள்ள நத்தையது ஒன்றுவீதம் 
ஆதியென்ற முப்பதுவும் கூடச்சேர்த்து வப்பனே மண்டலந்தான் கொண்டாயானால்
நீதியுடன் காயமது கற்பமீறி நீணிலத்தில் வெகுகால மிருக்கலாமே
6200.
இருக்கவென்றால் கோடிவரை யிருக்கலாமே யெழிலான காலாங்கி யுண்டகற்பம்
திருக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலெண்ணி
வருத்தமுடன் நத்தையின்தன் கற்பந்தன்னை வாகுடனே கொண்டவர்க்கு காயசித்தி
பெருக்கமுடன் முப்பூவின் வலுமையாலே பேரான நத்தையது கற்பமாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக