பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

bogar போகர்-சப்த காண்டம் 7000 6971-6980

6971.
செல்கவென்றால் எந்தன்முறை பாடுபோலே ஜெகதலத்தில் சிலகாலம் நீரிருந்து 
புல்கவே வையகத்தைத் தான்மறந்து புகழான சமாதிமுகம் ஏவநன்று 
வில்கவே கலியுகத்தில் இருந்துமென்ன விட்டகுறை இருந்தாலும் என்னலாபம்
அல்லலது நெடுநாளு மிருந்தாலுந்தான் வப்பனே தேகமது மண்ணாய்போமே
6972.
மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில் அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
எண்ணமது கலியுகத்து மாண்பருக்கு எழிலான கோடிமுறை தத்துவங்கள்
கண்ணவிந்த மாண்பரப்பா கலியுகத்தார் காசினியை மறப்பதுவும் மெத்தநன்றே
6973.
நன்றான காசினியை மறந்துமல்லோ நான்போகுஞ் சமாதிமுகந் தன்னைப்போல
குன்றான கலியுகத்தில் நீயுமப்பா கொற்றவனே சமாதிமுகஞ் செல்கநன்று 
என்றைக்கும் வையகத்தின் வாழ்க்கையெல்லாம் எழிலுடனே மறப்பதுவும் மெத்தநன்று
தென்றிசையில் கும்பமுனி சமாதிபக்கல் தேற்றமுடன் சமாதிமுகங் கொள்வீர்தானே
6974.
தானான வகஸ்தியர்க்கு சரணஞ்சொன்னேன் தாக்கான வவர்பாதம் போற்றிபோற்றி
கோனான வரரிஷியார் தாள்பணிந்தேன் கொற்றவனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர் சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர் சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
6975.
தொழுதேனே ரோமரிஷி சரணஞ்சொன்னேன் தோறாமல் அவர்பாதம் பணிந்துபோற்றி
பழுதுபடா மச்சமுனி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர் சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர் சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
6976.
பணிந்தேனே தன்வந்திரி சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி
அணியான ராமருக்குச் சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி
துணிந்துமே கௌபாலர் தாள்பணிந்தேன் துப்புரவாய்ச் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
மணியான சுந்தரா னந்தருக்கு மகத்தான சரணங்கள் போற்றிதானே
6977.
போற்றியே தேறையர் சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
ஆற்றலுடன் பூதனா நந்தருக்கு வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி
மாற்றலுடன் புண்ணாக்கு ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
தேற்றமுடன் இடைக்காடர் சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே
6978.
தானான டமரகா னந்தருக்கு தண்மையுடன் மிகநோக்கி சரணஞ்சொன்னேன்
கோனான தட்சணா நாயருக்கு கோடிமுறை சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
பானான வகப்பேய் சித்தருக்கு பட்சமுடன் வெகுகோடி சரணஞ்சொன்னேன்
மானான யாக்கோபு பாதம்போற்றி மார்க்கமுடன் சரணங்கள் கூறினேனே
6979.
கூறினேன் குறும்பரென்ற சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன்
தேறியே யவர்பாதந் தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
மாறுபடா சோதியென்ற முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
ஆறுநதி தீர்த்தமது கொண்டுமல்லோ வவர்பாதம் அர்ச்சனைகள் செய்திட்டேனே
6980.
செய்தேனே யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி செல்லவானே
துய்யநல்ல வூர்வசியாள் சரணஞ்சொன்னேன் துப்புரவாய் என்மீதிற் கடாட்சம்வைத்து
வெய்யபுகழ் காலாங்கி கடாட்சத்தாலே விருப்பமுடன் என்மீதில் மனதுவந்து 
தையலெனும் வூர்வசியாள் கடாட்சத்தாலே சட்டமுடன் சத்தகாண்டம் பாடினேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக