பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6451-6460

6451.
நன்றான வார்த்தையது மிகவுங்கூறி நலம்பெறவே யவர்களுக்கு மதிகள்கூறி
குன்றான சாத்திரங்கள் கற்றநீங்கள் குவலயத்தில் வேதைமுகம் வேணதுண்டு
வென்றிடவே யுந்தமக்கு வேறுண்டோசொல் வேதாந்த சித்துமுனி யார்தானுண்டோ
சென்றவர்கள் மடிந்தவர்கள் கோடாகோடி ஜெகதலத்தில் உம்மைப்போல் சித்துகாணே
6452.
சித்தான நாதரையாம் கண்டதில்லை சிறப்புடைய நாதரவர் நீர்தானென்று
புத்தியுள்ள பூபால ரும்மைப்போல பூவுலகில் பெரியோரைக் கண்டதில்லை
சத்தியத்தில் மிகுந்ததொரு தருமவான்போல் சட்டமுடன் முகதாவில் வந்தீரென்று
புத்தியுடன் தந்திரமாய் வார்த்தைகூறி புனிதனே விட்டகற்றல் மெத்தநன்றே
6453.
நன்றான வார்த்தையது மிகவுங்கூறி நலமுடனே பொய்ப்புகட்டு யாவுங்கூறி
சென்றிடவே பின்தொடர்ந்து வழிதான்விட்டு ஜென்மமுள்ள ஜீவந்தா னுள்ளமட்டும்
வென்றிடவே யெப்போதும் மறக்கேனென்றும் வேதாந்த சித்தொளிவைப் பணிவேனென்றும்
குன்றியே முகம்வாடி மனதுவந்து குருபரனே தந்திரமாய்ப் பணிகுவாயே
6454.
பணியவே கருமியென்ற சீடருக்கு பாலமுர்தம் உண்டதொரு சந்தோஷம்போல்
கணிதமுடன் தமக்குகந்த சீடனென்று கருத்துடனே யுன்மீதிற் பட்சம்வைத்து
அணிபெறவே விழியில்லான் என்றுவந்து வப்பனே கடாட்சமது மிகப்புரிந்து
துணிவுடனே யுன்மீதிற் கிருபைவைத்து துப்புரவாய் பற்பமது கொள்ளார்தானே
6455.
தானான புலிப்பாணி மைந்தாகேளு தண்மையுள்ள நல்லோருந் தீங்கோருண்டு
கோனான குருக்கள் மார்யோகிமாண்பர் கொற்றவனே ஜெகதலத்தில் மெத்தவுண்டு
தேனான வார்த்தையது மிகவுஞ்சொல்வார் தெள்ளமுர்த மானதொரு நேசஞ்செய்வார்
பானான சீடன்மேல் பட்சம்வைத்து பகட்டுவார் மெய்பகட்டு வதிகம்பாரே
6456.
பாரப்பா லோகமென்ற மாரணத்தை பக்குவமாய் பகருகிறேன் மன்னாகேளு
ஆரப்பா லோகமாரணத்தைச் சொன்னார் வப்பனே சொன்னவர்கள் மறைத்துச்சொன்னார்
நேரப்பா யுந்தனுக்கு சிடிகைவேதை நேர்மையுடன் நானுரைப்பேன் நீதியாக
கூரப்பா செம்பதுவும் பத்தேயாகும் குறிப்பான வெள்ளியது ரெண்டுதானே
6457.
தானான நாகமது ஒன்றேயாகும் தாக்குடனே பதின்மூன்றும் ஒன்றாய்க்கூட்டி
தேனான செம்பதனை யூதிப்போடு தேற்றமுடன் சுத்தித்த செம்புதன்னை
மானான செம்புதனைப் பதனம்பண்ணு மகத்தான போகும்கை வரிசைகேளு
கோனான தங்கமது ஒன்றேயாகும் குறிப்பான வெள்ளியது ஒன்றுகாணே
6458.
காணவே நாகமது ஒன்றேயாகும் கனமான சூதமது ஒன்றேயாகும்
தோணவே முன்னுரைத்த செம்புதன்னில் தோறாமல் ஓரிடைத்தான் எடுத்துக்கொண்டு
பூணவே மூவகை ஜெயநீராலே புகழாகத் தானரைப்பாய் சாமமப்பா
மாணவே சரக்கெல்லா மறைத்தபின்பு மார்க்கமுடன் மாத்திரைகள் ஐந்துபாரே
6459.
செய்யவே வெள்ளிதனில் பத்துக்கொன்று செம்மலுடன் தானுருக்கி குருதானொன்று 
பையவே கண்விட்டு ஆடும்போது பாகமுடன் தானுருக்கி குருவொன்றீய 
துய்யதொரு வெள்ளியது மாற்றாறாகும் துப்புரவாய்ப் பசுமையது சொல்லப்போமோ
மெய்யான வித்தையது யேமவித்தை மேதினியில் செய்பவர்க ளில்லைதானே
6460.
இல்லையே பத்துக்கோர் தங்கஞ்சேர்த்து யெழிலான வாரடித்துப் புடத்தைப்போடு 
தொல்லையெனும் பிறவியது மாறாத்தங்கம் சயத்தங்கம் புடத்தங்கம் பசுமைத்தங்கம்
அல்லலது போக்கடிக்கும் அருமைத்தங்கம் ஆகாகா நாதாக்கள் மறைத்ததங்கம்
கல்லிலது விளைந்ததொரு தங்கந்தானும் கருவான தங்கமிதற் கொவ்வாதன்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக