பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6491-6500

6491.
பண்பான வேதையிது தாம்பிரவேதை பாலகனே யாருந்தான் விள்ளாரப்பா
நண்பான சாத்திரத்தில் சொல்லிருந்தும் நலமான மனோன்மணித்தாய் மறைத்தபாவம் 
உண்மையாய் உளவறிந்து கண்மலரோ பொன்மலரோ நீயெனக்கு கருகாதே
உண்மையாய் யொருவருக்கும் காட்டொண்ணாதே
6492.
காட்டினால் லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும் கனமோசங் கனலோகம் கருவாய்ப்போகும்
நீட்டமுடன் சிவயோகி மாண்பரப்பா நீணிலத்தில் செய்துமல்லோ கண்டாராய்வார்
வாட்டமுடன் முறைபாடு கைபாடாக வளமையுடன் செய்தவர்க்கு எல்லாஞ்சித்தி
தாட்டிகமாய்ப் புத்திவான் அறிவானப்பா சண்டாள கருமிகளு மறியார்பாரே
6493.
பாரேதான் இன்னமொரு போக்குசொல்வேன் பண்பான பரிகார மானபேர்க்கு
நேரேதான் புலிப்பாணி மன்னாகேளு நேர்மையுடன் உந்தமக்கு உபதேசிப்பேன்
சீரேதான் பெரும்பாடியாம் லவணந்தன்னை சிறப்புடனே தானெடுத்து மனதுவந்து
நீரேதான் சொன்னமுறை வழிபாடாக நிமலனே கைபாகஞ் செய்திடாயே
6494.
செய்யவென்றால் உப்பதனை சேசைவாங்கி செப்பவென்றால் வன்னியது பட்டையப்பா
கொய்யவே தானிடித்து மாவதாக்கி சுகம்பெறவே யுப்புக்கு கீழ்மேலிட்டு
துய்யநல்ல வுப்பதனை நடுவேவைத்து துரைராஜ சுந்தரனே செப்பக்கேளு
வெய்யதமிழ்ப் பண்டிதங்கள் பலிப்பதற்கு வேதாந்தத் தாயாரை வேண்டிக்கொள்ளே
6495.
கொள்ளவே யுப்பதனை சீலைசெய்து கொப்பெனவே ரவிதனிலே காயவைத்து
மெள்ளவே கோழியென்ற புடத்தைப்போடு மேன்மையுள்ள வுப்பதுவுங் கட்டிப்போகும்
கள்ளமது வாறாது வுப்புக்கப்பா காசினியில் கருவாளி யறிவான்பாரு
உள்ளபடி யானுரைத்தேன் யுந்தமக்கு வுத்தமனே கைபாகஞ் செய்வாய்காணே
6496.
காணவென்றால் வுப்பதனை யெடுத்துமைந்தா கலங்காமல் பூநீரை சுத்திசெய்து
தோணவே நாலுக்கோர் இடைதான்சேர்த்து தோறாமல் தானரைப்பாய் கல்வமிட்டு
வேணபடி வன்னியின்தன் பட்டைசாற்றால் வேகமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பூணவே பில்லையது லகுவாய்ச்செய்து புண்ணியனே கோழியென்ற புடத்தைப்போடே
6497.
புடமான புடமதுவும் ஆறிப்பாரு புகழான வுப்பினிட கட்டியல்லோ 
நீடேதான் நிஷ்களங்க மானவுப்பு நீடாழி யுலகுபதி யார்தான்கண்டார் 
கோடான கோடிமனு சித்தருண்டு கொற்றவர்கள் கட்டுமல்லோ மறைத்தேவைத்தார்
பாடான பாடதுவும் யார்தான்செய்வார் பாலகனே விதியாளி செய்வான்தானே
6498.
விதியான கட்டென்ற உப்பைத்தானும் விமலனே செந்தூரஞ் செப்பக்கேளு
மதிபோன்ற வுப்பதுவுங் கசிவுநீங்கி மகத்தான தவளம்போல் உருகியல்லோ
துதியான வுருக்கினம்போல் குடோரியாக துப்புரவாய் இருக்குமந்த வுப்புதன்னை
பதியான வன்னமென்ற பேதிதன்னை பாலகனே நாலுக்கோர் அளவுசேரே
6499.
சேர்த்துமே கல்வத்தில் பழச்சார்விட்டு செம்மையுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பார்த்துமே பில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து
ஆர்த்துமே சில்லிட்டுச் சீலைசெய்து வப்பனே யேழுசீலை வலுவாய்ச்செய்து
பூர்க்கவே செந்தூரம் லபிப்பதற்கு புகழான வடுப்பில்வைத்து எரித்திடாயே
6500.
எரிப்பதற்கு வயணமது சொல்வேனப்பா எழிலான தளவாயாம் பாண்டந்தன்னில்
திரியான மணலதனைக் கொட்டிமைந்தா தீர்க்கமுடன் கல்லதனை மேலேவைத்து
சொரியான கருமணலை யின்னுமல்லோ சோராமல் பாண்டமதில் மணலைக்கொட்டி
சரியாக மேற்பாண்டந் தன்னைமூடி சட்டமுடன் தானெரிப்பாய் சாமம்நாலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக