பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5811-5820

5811.
உண்மையாங் குளிகையது தானுமில்லை வுத்தமனே நரைதிரையும் யாதொன்றில்லை
வண்மையாம் பிணியென்ற ரோகமில்லை வகுப்பான காயாதி தானுமில்லை
தண்மையுடன் வையகத்து மாண்பரெல்லாம் தப்பாமல் சிவயோகி என்பார்பாரு
திண்மையுடன் கோரக்கர் மூலிதம்மை தீர்க்கமுடன் எப்போதும் தின்பார்தானே
5812.
திண்பாரே கோரக்கர் மூலியாலே தீர்க்கமுடன் கோரக்கர் சித்துமாச்சு
வன்பாக சமுசார வாழ்க்கையில்லை வளமான பொருளின்மேல் ஆசையில்லை
என்னேரந் திரிகால பூசையோடும் எழிலான காவிக ஷாயத்தோடும்
சொன்னபடி மனோன்மணியாள் பிரணவத்தை தொல்லுலகில் யெப்போதும் சொல்வார்தானே
5813.
சொல்வாரே யின்னமொரு மார்க்கங்கேளு தூய்தான நற்பாலா தீரவானே
புல்லவே கௌபால சித்துதானும் புகழான வையகத்தில் இருந்தசித்து 
வல்லதொரு பொன்னுக்கு வாணிமாற்று வகுப்புடனே கண்டறிந்த ஞானசித்து
சல்லியமாம் வித்தைதனில் தேர்ந்தசித்து சட்டமுடன் வுரைகல்லுக் குரியசித்தே
5814.
உரையான பொன்னுரைக்கும் கல்லைத்தானும் வுத்தமனே மலைதனிலே கண்டுதேடி
திரையோடும் புரையகற்றி வயிரக்கல்லை திட்டமுடன் ஆராய்ந்த ஞானசித்து
வரையான சித்துக்கு வயதேதென்றால் வளமுடனே கூறுகிறேன் இன்னங்கேளு
கரைகண்ட சித்தல்லோ கெவனசித்து கௌபால சித்தென்று பேருண்டாச்சே
5815.
பேரான சித்துக்கு வயதேதென்றால் பெருமையுடன் கூறுகிறேன் கொற்றவர்கேள்
நேரான வயததுவும் இருநாற்றைந்து நெடிதான காடுமலை திரிந்தசித்து
ஊரோடுங் கூடியல்லோ உறவுபேசி வுகமையுடன் சாத்திரத்தை யறிந்தசித்து
சீரான கௌபால சித்தருக்கு சிறப்புடனே ஞானமென்ற தேசந்தானே
5816.
தேசமாம் உபதேசம் பெற்றுக்கொண்டு தேற்றமுடன் காயாதி கற்பங்கொண்டு
வாசமது மலைதனிலே இருந்துகொண்டு வகுப்பான சித்தரது வுளவாராய்ந்து
நேசமுடன் சமாதிக்கு ஏகவெண்ணி நெடுங்காலஞ் சீஷவர்க்க மாண்பரோடும்
பாசமொடு தனக்குகந்த சீஷனைத்தான் பட்சமுடன் கண்டறிந்து வுரைத்தார்தாமே
5817.
உரைத்தாரே சீஷவர்க்க சேதிதன்னை வுத்தமனே சமாதிக்குப் போரேனப்பா
வரையான சமாதிமுகஞ் சென்றபோது வளமுடனே எந்தனுக்கு வயிரக்கல்லால்
குறையாமல் சமாதிதனை மூடியல்லோ கொற்றவனே கருவயிரக் கல்லில்தானும்
மறைவாகக் கைநாட்டுச் சித்திரந்தான் மன்னவனே எழுத்துரையு மென்பார்தானே
5818.
என்றவுடன் கௌபால சித்துதாமும் எளிதான வயிரக்கல் மேலேயப்பா
வென்றிடவே எழுத்துமுகம் மாறியல்லோ மேதினியில் எல்லவர்க்கும் அறிவதற்கு
குன்றான கல்லின்மேல் எழுத்துவூன்றி கொற்றவனே கௌபாலர் சமாதியென்று
நன்றாக வரைதீட்டி சீஷர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் செய்தார்பாரே
5819.
செய்யவே பதினான்கு வருஷமட்டும் செப்பரிய சமாதிமுகந் தனிலிருந்து 
பையவே வையகத்தில் வந்தசித்து பாங்குடனே ஏமமென்ற சித்துவாகும்
துய்யதமிழ் பண்டிதர்கள் போற்றுஞ்சித்து துறையான ஏமமாற் றறிந்தசித்து
வையகத்தில் சித்துமுனி ரிஷிகள்தேவர் வளமுடனே எவரறிந்தார் ஆணிதானே
5820.
ஆணியா மின்னமொரு வதிதஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நீணிலத்தில் ஜோதிமா முனிவர்தாமும் நீதியுடன் வெகுகால மிருந்தசித்து
வாணிபங்கள் செய்வதற்கு ஏமமாற்றை வளமுடனே கண்டறிந்த சித்துதாமும்
காணிகளும் பூமிவள மெல்லாங்கண்டு கருவயிரக் கல்லெடுத்த சித்துதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக