பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5871-5880

5871.
வேதமா மின்னமொரு மார்க்கங்கேளு வெளியான புலிப்பாணி மைந்தாபாரு
போதமாம் ரோமரிஷி பிறந்தநேர்மை புகலுகிறேன் மாணாக்கள் அறியவென்று
நீதமுடன் ஆணியாந் திங்களப்பா நிஷ்களங்கமான கார்த்திகை தானாகும்
வீதமுடன் பயனறிய மூன்றாங்காலாம் விற்பரனார் பிறந்ததொரு நாளுமாச்சே
5872.
ஆச்சப்பா செம்படவன் தன்னையப்பா வப்பனே மாதுருவுங் குறத்தியாகும்
பாச்சலுடன் பலநூலுங் கண்டாராய்ந்து பாடிவைத்த மரபதுவும் மெய்யேயாகும்
மாச்சலுடன் இருகுலத்தார் பெற்றமைந்தன் மகத்தான ரோமரிஷி யென்னலாகும்
மூச்சடங்கி சென்றதொரு கானீனப்பா மூதுலகில் சென்றதொரு சித்துமாச்சே
5873.
சித்தான மார்க்கமது இன்னஞ்சொல்வேன் சீர்பாலா எந்தனிரு கண்ணேகேளும்
பத்தியுள்ள மச்சமுனி பிறந்தநேர்மை பாங்குடனே யாடியாந் திங்களப்பா 
சத்தியுடன் ரோகனியாம் முதற்காலப்பா சாங்கமுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
புத்தியுள்ள ஆதுலமாங் குலத்துதித்த புகழான கன்னியுட மைந்தனாமே
5874.
ஆமேதான் மச்சமுனி அடவுசொன்னேன் வன்பான புலிப்பாணி மைந்தாகேளு
நாமேதான் சொன்னபடி சட்டநாதர் நன்மையுடன் பிறந்ததொரு நேர்மைதானும்
போமேதான் ஆவணியாந் திங்களப்பா பொங்கமுடன் மிருகசீ ரிடமுமாகும்
வேமேதான் விட்டகுறை மூன்றாங்காலாம் விருப்பமுடன் அவதரித்த பாலனாமே
5875.
பாலனாஞ் சிங்களவ தேவதாசி பட்சமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டமுனி என்றுசொல்லி சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு
கோலமுடன் யின்னமொரு மார்க்கம்பாரு கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
தாலமுடன் இடைக்காடர் பிறந்தநேர்மை சட்டமுடன் சொல்லுகிறேன் தண்மைபாரே
5876.
தண்மையாம் புரட்டாசி மாதமப்பா தாழ்வாக இரணியனைக் கொன்றமாதம்
வண்மையாந் திருவாதிரை ரெண்டாங்காலாம் வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன்தான்
பெண்மையாக கானகுறை சாதியப்பா பேரான கானீனன் பெற்றபிள்ளை
திண்மையாம் இடைக்காடர் தானுமாகும் தீர்க்கமுடன் பூவுலகில் இருந்தசித்தே
5877.
சித்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் திரளான நவகோடி ரிஷிகள்தன்னில்
புத்தியுள்ள தன்வந்திரி பகவான்தானும் பூபால ரானதொரு மாயாசித்து
சத்தியுள்ள மகாவிஷ்ணு வென்றேசொல்வார் தாரிணியில் மானிடமாஞ் சித்துவாகும்
முத்திபெற வைப்பசியாந் திங்களப்பா முனையான புனர்பூசம் நாலாங்காலே
5878.
காலான தன்வந்திரி பிறந்தநேர்மை காசினியில் இவர்நூலில் சொன்னவாறு
நூலான பலநூலிற் கண்டாராய்ந்து நுட்பமுடன் பாடிவைத்தேன் குருநூலாகும்
பாலான யிருப்பிரப் பாளரப்பா பாங்கான அனுலோமன் பெற்றபிள்ளை
சாலான சாத்திரங்கள் யாவுங்கூறும் சகலவித பண்டிதருங் காணார்தாமே
5879.
கண்டேனே நிர்வாண பாஷையப்பா காசினியில் சமஸ்கிருத பாஷையாலும்
விண்டதொரு இத்தாலி பாளபந்து விருப்பமுடன் பாகவத பாஷையாலும்
கொண்டேனே மனத்துறுதி யடியேன்தானும் கொற்றவனே குவலயத்தில் கண்டாராய்ந்து
விண்டுமே யானுரைத்தேன் விஷ்ணுகாதை விளம்பிட்டேன் சத்தகாண்டம் உண்மைதானே
5880.
தானான யின்னமொரு மார்க்கம்பாரு தயவான புலிப்பாணி மகனேகேளு
கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் தானுரைத்த வுளவுகண்டேன்
பானான மூலத்தின் ஈசரப்பா பண்புடனே பிறந்ததொரு நேர்மைதானும்
மானான கார்த்திகையாந் திங்களப்பா மகத்தான பூசமது மூன்றாங்காலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக