பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5861-5870

5861.
காணவே சமாதிமுகம் பத்துரெண்டு கருவாக ஒன்றுடனே தானுங்கூட்டி
பூணவே பூமிதனில் இருந்தசித்து பொங்கமுடன் ஞானமென்ற கிரியாசித்து
நீணவே நாலுயுக வதிசயங்கள் நீடாழி யுலகுபதி யறிந்தசித்து
சீனமது இல்லாமல் நெடுங்காலந்தான் சீவனோ டிருந்ததொரு சித்துமாச்சே
5862.
ஆச்சப்பா யின்னமொரு முறைமைசொல்வேன் வப்பனே செங்கனிவாய்க் கொண்டபாலா
ஏச்சலது வாராமல் இருந்தசித்து எழிலான திருமூல ரென்னலாகும்
பாச்சலென்ற வயததுவும் ஏதென்றாக்கால் பாரினிலே வாயிரத்து சொச்சமாகும்
மூச்சடங்கி சமாதிமுகந் தன்னிலப்பா மூதுலகில் நெடுங்கால மிருந்தசித்தே
5863.
நெடுங்காலம் சமாதிமுகந் தன்னில்தானும் நேர்மையுடன் அறுபது வருஷமாண்டு
கடுந்தவசி யாயிருந்த சித்துதாமும் கண்டுகொள்ளா வதிசயங்கள் மெத்தவுண்டு
படுந்துயரந் தானறியா மாண்பர்க்கப்பா பாரினிலே நிதிகொடுத்து வதிதஞ்செய்தார்
கடுவாதி தமைக்கண்டு நிர்த்தஞ்சொல்லி துப்புரவாய் விதியுரைத்து வழிசொல்வாரே
5864.
வழியான முறைபாடு தாமுரைத்து வண்மையுடன் உபதேசங் கூறியல்லோ
பழியான வார்த்தைக்கு ஆளாகாமல் பாருலகில் சித்துவிளை யாடச்சொல்லி
முழியான வார்த்தையது வுபதேசங்கள் மூர்க்கமின்றி தானுரைக்கும் ஞானசித்து
சுழியான வாசிநிலை தனிலிருந்து சுத்தமுடன் வையகத்தில் இருந்தார்தாமே
5865.
இருந்தாரே இன்னமொரு மார்க்கங்கேளு எழிலான பதினெண்பேர் முனிவர்தானும்
பிறந்ததொரு வளப்பங்கள் யாவுங்கண்டு பேரின்ப நிலைதனிலே மனதிலுன்னி
சிறந்ததொரு நட்சத்திர யோகங்கண்டு சீரான அபிதங்கள் தான்வகுத்து
துறந்துமே நவகோடி ரிஷிகள்தானும் துப்புறவாய் நாற்பத்தி எண்பேர்தாமே
5866.
பேரான யிவர்களது பிறப்புதானும் பேரின்ப நட்சத்திர கால்தான்கூட்டி
சீரான சீனபதி மாண்பருக்கு தீர்க்கமுடன் உபதேசஞ் செய்தநூலாம்
கூரான வையகத்து மாண்பரெல்லாம் குறிப்புடனே தானறிய மனதுவந்து
வீரான போகரே ழாயிரத்தை விருப்பமுடன் உபதேசஞ் செய்திட்டேனே
5867.
செய்தேனே புலிப்பாணி மைந்தாகேளு செங்கமல கரத்தானே யின்னஞ்சொல்வேன்
மெய்யான வேதமிது சத்தகாண்டம் மேதினியில் சகலகலைக் கியானமெல்லாம்
பையவே வடநூலைத் தானாராய்ந்து பாடினேன் காண்டமது ஏழாயிரந்தான்
துய்யதமிழ் பரிபாஷைத் தன்னைநீக்கி துப்புறவாய் ஓதிவைத்தேன் காண்டந்தானே
5868.
காண்டமே ழாயிரம் பெருநூலப்பா கருவிகர ணாதிமுதல் இதிலடக்கம்
பூண்டமன துறுதியினால் இந்தநூலைப் புகட்டினேன் காலாங்கி கடாட்சத்தாலே
வேண்டியதோர் சீனபதி கருமானங்கள் வேற்றுருவ மில்லாமல் கூறினேன்யான்
ஆண்டகையாம் எந்தன்குரு நாதன்தன்னால் அப்பனே பாடிவைத்த நூலிதாமே
5869.
நூலான நூலிதுதான் நுணுக்கமெத்த நுட்பமுடன் காலாங்கி பிறந்தவண்ணம்
பாலான சித்திரையாம் மாதமப்பா பாங்கான வசுவினியாம் நாலாங்காலாம்
சேலான ஜெகத்குரு மைந்தனப்பா செயலான பாக்கியமும் பெற்றமைந்தன்
காலான காலாங்கி நாதரப்பா காசினியில் வந்துதித்த வுருவுமாச்சே
5870.
உருவான மார்க்கமது இன்னஞ்சொல்வேன் உத்தமனே போகரது பிறப்புநேர்மை
உருவான மாதமது வைகாசியப்பா கருத்தான பரணியது ரெண்டாங்காலாம்
குருவான பஞ்சணத்தில் ஒருவனப்பா கொற்றவனே விசுவகர்மன் மைந்தனாகும்
திருவான போகரிஷி என்றுமல்லோ செப்பினார் பலநூல்கள் வேதமாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக