பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5831-5840

5831.
ஆச்சப்பா புலிப்பாணி மைந்தாகேளு வன்புடனே சொல்லுகிறேன் வதீதமெத்த
மாச்சலென்ற வாரிஷியாஞ் சித்துதம்மை வளமுடனே சொல்லுகிறேன் வண்மைபாரு
பாச்சலென்ற வயததுவும் எழுநூற்றுச்சொச்சம் பாருலகில் நெடுங்கால மிருந்தசித்து
மூச்சடங்கி சிவயோக மானசித்து மூதுலகில் இவர்போலுங் காணார்தாமே
5832.
காணாரே தவசியென்ற வரரிஷியார்தானும் கருவாக காளிங்க மடுவுதன்னில்
வேணபடி தவயோகஞ் செய்யவென்று விட்டகுறை தனையகற்றி மடுவிற்சென்று
தோணவே பனிரெண்டு வாண்டுமட்டும் தொல்லுலகில் ஜலஸ்தம்ப சமாதியாகி
மாண்பரும் வையகத்தோர் காணவென்று மார்க்கமுடன் வந்ததோர் சித்துதானே
5833.
தானென்ற சித்ததுவும் ஜலரூபசித்து தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
வானென்ற தேவாதி ரிஷிகள்தம்மால் வரத்தினால் பேருபெற்ற சித்தேயாகும்
கோனென்ற வரரிஷியார் என்றுசொல்லிக் கொற்றவர்க்குக் குவலயத்தில் பேருண்டாச்சு
மானென்ற சித்தர்களும் வணங்கியல்லோ மகத்தான ரிஷியாரைப் போற்றுவாரே
5834.
போற்றுவார் பூதலத்தார் எல்லாருந்தான் பொங்கமுடன் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
தேற்றமுடன் வால்மீகர் என்றசித்து தெளிவான மார்க்கமது சொல்வேன்பாரீர்
மாற்றமயம் நீங்கியல்லோ வையகத்தில் வளமையுடன் வெகுகால மிருந்தசித்து
ஆற்றலுடன் வால்மீகர் ராமாயணத்தை அவனிதனில் மாந்தருக்கு செய்திட்டாரே
5835.
செய்ததொரு வால்மீகர் வயதேதென்றால் செப்பமுடன் எழுநூற்றுச் சொச்சமப்பா
துய்யதமிழ் பண்டிதனாங் கல்விவானாம் தூய்தான வகப்பேரு கொண்டசித்து
பையவே சமாதிமுகஞ் சென்றதில்லை பாங்குடனே காயாதி கொண்டுதானும்
வெய்யவே நெடுங்கால மிருந்தசித்து வேதாந்த வால்மீகர் தானுமாமே
5836.
தானான வையகத்து மாந்தர்க்கெல்லாம் தகமையுள்ள வால்மீகர் சரிகைதன்னை
கோனான குருவான வால்மீகர்தானும் குவலயத்தில் பேர்கொண்ட ஞானசித்து 
தேனான வைதீக சாத்திரங்கள் தெளிவுடனே கட்டிவைத்த ஞானசித்து
பானான பராசரிஷிக் கொப்பதான பாங்கான யடியென்று செப்பலாமே
5837.
செப்பலாம் இன்னமொரு மார்க்கங்கேளு செயலான புலிப்பாணி மைந்தாபாரு
ஒப்பமுடன் ஊர்வசியாள் வயதேதென்றால் வுத்தமனே நூற்றிரு பத்தேயாகும்
தப்பிதங்கள் நேராமல் தரணிமீதில் சாங்கமுடன் வீற்றிருந்த மாதுசித்து
இப்புவியில் ஊர்வசியாள் சுருக்கரத்னம் எழிலாகப் பாடிவைத்த மாதுதாமே
5838.
மாதான ஊர்வசியாள் காயகற்பம் மகத்தான வையகத்தில் உண்டுமல்லோ
தோதான காவியங்கள் என்றுகூறி தோறாமல் பாடிவைத்த மாதுசித்து
நீதான வியாசரிடம் உபதேசங்கள் நீதியுடன் பெற்றதொரு மாதுதானும்
கோதாவரி கரைதனிலே மடிந்தசித்து கொற்றவனே சமாதியது அங்கேவுண்டே
5839.
உண்டான சமாதியது மண்டபத்தில் ஓகோகோ நாதாக்கள் கண்டறிந்து
திண்பான வேதமாம் ஆயுர்வேதம் தீரமுடன் கண்டறிந்த மாதுசித்து
கண்டல்லோ ரிஷிமுனிவர் சித்துதானுங் காசினியில் பூசைமுதல் நைவேத்தியங்கள்
சண்டமா ருதம்போலே தானடித்து தாரணியில் கோடித்து வருகின்றாரே
5840.
வருகிறார் பூவாடை காரிசித்தை மார்க்கமா மின்னமொரு மகிமைகேளு
கருமமதை வையகத்தில் தானகற்றி காசினியில் நெடுங்கால மிருந்தசித்து
தருமமது தானறிந்த கமலசித்து தாரணியில் தானறிந்த கொடியசித்து
அருமையுடன் சீனபதி தேசந்தன்னில் வன்பாகச் சென்றதொரு சித்துபாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக