பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5881-5890

5881.
மூன்றான பாதமது மூலத்தீசர் முனையாக பிறந்ததொரு நேர்மையப்பா
சான்றவரா மூலத்தி னீசரப்பா சட்டமுடன் வந்துதித்த நாளுமாகும்
ஈன்றதொரு ஜாதியிலே பள்ளஜாதி எழிலான கன்னிகையும் பெற்றபிள்ளை
மேன்மையுடன் தான்பிறந்தார் மூலத்தீசர் மேதினியில் ரிஷிதனக்குப் பிறந்தார்தாமே
5882.
பிறந்ததொரு யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பேரான புலிப்பாணி மைந்தாபாரு
சிறந்ததொரு அகத்தீசர் பிறந்தநேர்மை சிறப்பான தனுர்மாத மென்னலாகும் 
துறந்ததொரு ஆயில்யம் மூன்றாம்பாதம் துப்புறவாய் அவர்பிறந்த நாளுமாச்சு
கறந்ததொரு பால்பசுவும் கன்னுமாகி காசினியில் பிறந்ததொரு சித்துமாச்சே
5883.
ஆச்சப்பா அகத்தியரின் பிறப்புநேர்மை அவனிதனில் ஆராலும் முடியாதப்பா
மூச்சடங்கி மலையின் மேல்நின்றசித்து முனையான கமலமதில் பிறந்தசித்து
மாச்சலுடன் தேவரிஷி வரத்தினாலே மகாதேவர் வந்துதித்த குருவுமாகும்
ஏச்சலது வாராத கும்பயோனி எழிலான அகஸ்தியரென் றரையலாமே
5884.
அறையவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் வன்பான கண்மணியே சொல்லக்கேளிர்
நிறையவே சிவவாக்கியர் பிறந்தநேர்மை நீதியுடன் சொல்லுகிறேன் நிறைவாய்க்கேளு
குறையாத தைமாதம் மகத்திலப்பா கொற்றவனே ரெண்டாங்கால் என்னலாகும்
மறையவே திருமூல கூட்டத்தாரில் மகத்தான கன்னியது பிள்ளையாமே
5885.
பிள்ளையாஞ் சிவவாக்கிய ரென்னலாகும் பேரான திருமூலர் மரபிலுள்ள
வள்ளலெனுஞ் சேய்மடவார் கன்னிதன்னின் மகத்தான சிவவாக்கிய ராகும்பாரு
தெள்ளுதமிழ் கவிவாணர் இவர்க்கீடுண்டோ செந்தமிழின் சுவையறிந்த சிவவாக்கியர்தான்
கள்ளமது வாராத புனிதபாலன் காசினியில் அவதரித்த வுருவுமாமே
5886.
உருவான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வுத்தமனே சிகாமணியே யுண்மைபாரீர்
திருவான ராமரென்ற தேவரப்பா தீர்க்கமுடன் வந்துதித்த நேர்மைகேளிர்
கருவான மாசியென்ற திங்களப்பா கடியதோர் பூரமது ரெண்டாம்பாதம்
அருவமுள்ள ராமரென்ற தேவர்தானும் வப்பனே வந்துதித்த நாளுமாச்சே
5887.
நாளான நாலாங்கால் என்னலாகும் நலமான ராமதேவர் பிறந்தநாளாம்
ஆளான ரோமரிஷி பாட்டனுக்கு அழகாக வந்துதித்த ராமதேவன்
கோளான நூல்களிலே குற்றஞ்சொல்வார் குறையான முறைப்பாடு யேதுஞ்சொல்வார்
பாளான நூல்தனிலே சொல்லாதாலே பட்சமுடன் யானுரைத்தேன் பண்பாய்க் கேளே
5888.
பண்பான யின்னமொரு மார்க்கம்பாரு பாலகனே ஐந்தறிவிற் சிறந்தபாலா
திண்பான புஜண்டருட மார்க்கஞ் சொல்வேன் தீர்க்கமுடன் பங்குனியாந் திங்களப்பா
கண்பான வுத்திரமாம் இரண்டாம்பாதம் காசினியில் வந்துதித்த திருவுமாச்சு
மண்பான வரரிஷியின் சாபத்தாலே மார்க்கமுடன் அவதரித்த பாலனாமே
5889.
பாலனாஞ் சந்திரகுலம் விளங்கவந்த பாரினிலே வெள்ளாட்டி பெற்றமைந்தன்
மாலான ரதிகேளி மடந்தையாகும் மகத்தான வருந்துதியு மென்னலாகும்
சேலான பாக்கியமும் பெற்றபாலன் செம்மலுடன் சாபத்தால் வரத்தில்வந்து
தாலான தவசியென்ற நாமம்பெற்று தாரிணியில் புஜண்டரென்ற பேருண்டாச்சே
5890.
பேரான யின்னமொரு வழிதான்சொல்வேன் பேருலகில் கீர்த்திபெற்ற புனிதவானே
சீரான கருவூரார் பிறந்தநேர்மை செப்புகிறேன் செம்பவள வாயாகேளிர்
கூறான சித்திரையாம் மாதமப்பா குறிப்பான வஸ்தமது ரெண்டாம்பாகம்
தேறான நாட்களிலே பிறந்தசித்து தேற்றமுடன் கருவூரார் என்னலாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக