பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5851-5860

5851.
காலனாம் நெடுந்தூத காலசித்து காசினியில் சமாதிமுகம் செல்வதற்கு
பாலகனாம் சீஷவர்க்க மாண்பர்தம்மை பட்சமுடன் தாமழைத்த சித்துதாமும்
சீலமுடன் முப்பத்து வாறுவாண்டு சிறப்புடனே வையகத்தில் இருந்தசித்து
கோலமுடன் முகமறியா பாலசித்து கொற்றவனே வெகுகால மிருந்தசித்தே
5852.
சித்தான சித்தனிட மார்க்கஞ்சொன்னேன் சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா மயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங் கணக்கோயில்லை சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழி கொண்டசித்து சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே
5853.
என்னவே சிவசுப்பிர மணியரான யெழிலான சித்துக்கு வயதோயில்லை
பன்னவே பலசாஸ்திர நூல்கள்தன்னில் பாகமுடன் வயததுவுங் கூறவில்லை
சொன்னபடி சுருதிமுறை வேதாகமங்கள் தோற்றமுடன் பலபேரும் பாடிவைத்தார்
நன்னயமாய் சுப்பிரமணியர் காப்பேயென்று நாட்டினார் நூல்களெல்லாம் நாட்டினாரே
5854.
நாட்டினதோர் நாமமதைக் கண்டதல்லால் நாதாந்த வயததுவைக் கண்டதில்லை
தாட்டிகமாய் யின்னமொரு வயணஞ்சொல்வேன் தயாளமுள்ள சிறுபாலா சாற்றக்கேளிர்
வாட்டமுடன் யூகியென்ற முனிவர்தானும் வகுப்பான வயததுவும் ஏதென்றாக்கால்
மாட்டிமையாய் அறுநூற்று யெண்பதாண்டு மார்க்கமுடன் வையகத்து சித்துபாரே
5855.
பாரேதான் நீலகண்ட ரிஷியார்தம்மால் பாருலகில் உபதேசம் பெற்றசித்து
நேரேதான் சமாதிமுகந் தன்னிற்சென்று நேர்மையுடன் இருபத்தோர் ஆண்டுமட்டும்
தீரேதான் சமாதிமுகம் இருந்துமல்லோ தீர்க்கமுடன் வையகத்தில் வந்தசித்து
பேரேதான் நூல்தனிலே யூகியென்றும் பேருலகில் கீர்த்திபெற்ற சித்துதாமே
5856.
தாமான சாத்திரங்கள் அழிந்தசித்து தாரிணியில் நெடுங்கால மிருந்தசித்து
கோமான்கள் உபதேசம் பெற்றசித்து குவலயத்தில் இவர்போலும் யாருமுண்டோ
பூமான்க ளானதொரு மாண்பரெல்லாம் புகழ்ச்சியுடன் இவர்பாதம் புகழுஞ்சித்து
சாமான்ய மானதொரு சித்துபோல சட்டமுடன் வையகத்திற் காணார்தாமே
5857.
தானான இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள பூபாலா மணியேகேளிர்
பானான திரணாக்கிய முனிவர்தானும் பாருலகில் நெடுங்கால மானசித்து
கோனான வயததுவும் ஏதென்றாக்கால் கொற்றவனே துலாயிரத்து எண்பதாண்டு
மானான சமாதிமுகஞ் சென்றசித்து மார்க்கமுடன் இருபத்தி ரண்டுதானே
5858.
ஆண்டான வருஷமது இருபத்திரண்டு வப்பனே சமாதிமுகம் இருந்தசித்து
பாண்டவர்கள் ஐவருங் காணாமுன்னே பாருலகில் வெகுகால மிருந்தசித்து
தாண்டவம்போல் ஜெமதக்கினி முனிவர்தானும் தாரிணியில் பெற்றெடுத்த சித்துவாகும்
மாண்டதொரு மாண்பரெல்லாம் வையகத்தில் வாழ்த்தியல்லோ வஞ்சலிகள் செய்தசித்தே
5859.
சித்தான சித்துமுனி இவர்தானப்பா சீருலகில் ரிஷிவர்க்கக் கூட்டத்தோடு
முத்திபெற நல்வழிக்கு உறுதிகொண்டு மூதுலகில் சின்மயத்தை மனதிலுன்னி
சத்தியுடன் மனோன்மணியை தியானித்தேதான் சதாகால நிஷ்டைகுறி களங்கனாதி
புத்தியுடன் வையகத்தில் தவசியாகி பொன்னுலகு பதிதனிலே சேர்ந்தார்காணே
5860.
சேரவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் செம்மலுடன் புலிப்பாணி மைந்தாகேளு
வாரமுடன் சண்டீசுவரர் வளமைகேளும் வண்மையுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
தீரமுடன் நானூற்றி யறுபதாகும் தீர்க்கமுடன் அவர்நூலில் சொன்னநீதி
சாரமுடன் சமாதிமுகஞ் சென்றசித்து சாங்கமுடன் வையகத்து சித்துகாணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக