பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6751-6760

6751.
தானான சமாதியிலே நின்றுகொண்டு சட்டமுடன் யோகமது கொள்ளும்போது
கோனான குருநிலையை கைநிலையாய் குவலயத்தில் நடப்பவனே யோகவானாம்
தேனான தேஜொளிவின் மயத்தைக்கண்டு தேற்றமுடன் சொக்கியல்லோ போகாமற்றான்
பானான பரஞ்சுரைப் பற்றியல்லோ பரவெளியில் சமாதிவழி சாதிப்பாயே
6752.
சாதிக்க முச்சுடரை யறியலாகும் சட்டமுடன் நிஷ்டானு பூதிகொண்டு
ஆதியந்தக் கருவிகர முளவாராய்ந்து வஷ்டாங்க யோகநிலை தன்னிற்சென்று
நீதியுடன் மாயவலை சிக்கறுத்து நிஷ்களங்க மானசுபா நிலையிற்சென்று
சோதியெனும் உட்பொருளை மனதிலுன்னி சுந்தரனே கமலமென்ற பீடந்தாக்கே
6753.
தாக்கையிலே கேசரத்தில் நின்றுகொண்டு தகமையுள்ள பூரணத்தைப் போற்றிச்செய்து
நோக்கமுடன் கும்பத்தின் மேலிருந்து நொடிக்குள்ளே சுவாதிஷ்டானந் தெரிந்து
வாக்குடனே மனோலயத்தை யுச்சரித்து வளமுடனே யஷ்டநிலை பதியிற்சென்று
தூக்கமெனும் இருட்கடலை விட்டகற்றி துய்யகரு ணானந்தங் கருவிபூணே
6754.
பூணவே கருவியென்றால் ஞானப்பாலை புகழான பவக்கடலை விட்டகற்றி
தோணவே சின்மயத்தை மனதிலுன்னி தோறாத கடுஞ்சினத்தை சிக்கறுத்து
வேணபடி முச்சுடரைப் பற்றியல்லோ வேதாந்த மனோன்மணியைத் துதித்துநின்று
நீணவே வைராக்கிய கியானமூட்டி நிஷ்களங்க மானதொரு நிலையில்நில்லே
6755.
நில்லப்பா பசுபதியாம் பாசந்தன்னை நினைவான மவுனமென்ற நிலையிற்பூட்டி
வல்லதொரு பிரகாச நிலையில்நின்று வளம்பெறவே சூக்குமத்தின் வேரறுத்து
புல்லவே பாஷாந்திர பேதாபேதம் புகழான கருவிகர ணாதியந்தம்
நல்லதொரு சிவானந்த நிலையைப்பற்றி நாட்டமுடன் மனதுவந்து நவிலக்கேளே
6756.
நவிலவே சிதாபாச வலையகற்றி நலமுடனே பௌஷிகத்தின் வேரறுத்து 
நவிலவே கற்பாந்திர காலமட்டும் கருத்துடனே சச்சிதா நிலையைப்பற்றி
புவிலவே யருட்கடலை காண்பதற்கு புகழான இருட்கடலை விட்டகற்றி
நவிலவே வித்தியா ரண்ணியத்தை விருப்பமுடன் கூறுகிறேன் உண்மைபாரே
6757.
பாரேதான் சன்னியாசி வர்த்தங்கொண்டு பாங்கான கலையகற்றி நிலையைப்பற்றி
சேரேதான் சிவானந்த லாகிரியாலே செம்மலுடன் குருசம்பிர தாயவர்க்கம்
நீரேதான் கற்றறிந்து நிலையில்நின்று நிட்சிதமாம் பொருளதனை விட்டகற்றி
கூரேதான் சசிவர்ண சுயரூபத்தை குணமுடனே யோதுகிறேன் இன்னந்தானே
6758.
தானான மனக்குரங்கை விட்டகற்றி தண்மையுள்ள இதிகாசப் பொருளறிந்து
தேனான வமுர்தமெனு மட்சீரபாத்திரம் தெகிட்டாத தெள்ளமுர்த ஞானப்பாலை
மானான மதியமுர்தம் கொண்டாற்போல மதகரியா மாணுவத்தை யொடுக்கிநின்று
பானான பத்மமெனும் யுகாந்தப்போரை பற்றறுத்து விட்டறுத்து பதிவாய்நில்லே
6759.
நிற்கையிலே ஜோதிமயம் தன்னிற்றோற்றும் நீதியுள்ள பாடுதுறை வழிதான்காட்டும்
அற்பமென்று நினையாதே அடிவணங்கி அம்பரத்தின் மேலிருந்து அறிவாலுன்னி
சொற்பமதாய் வாசியதை கீழ்நோக்காமல் சோராமல் மனந்தளர்ந்து சூட்சமேகி
உற்பனமாய் உமிநீரை வழலையாக்கி வுத்தமனே நாள்தோறும் அமுர்தமுண்ணே
6760.
உண்ணவே தேகமெனும் கோட்டைதன்னில் வுத்தமனே உட்கோட்டை யேழுகோட்டை
நண்ணவே துவாரமது வொன்பதாகும் நலமான பஞ்சேந்திர மைந்துமாகும்
திண்ணவே யுடல்பொரு ளாவியந்தம் தீர்க்கமுள்ள ஏழுசுற்று கோட்டைக்குள்ளே
வண்ணமுடன் கலையதுதான் முப்பத்திரண்டு வளமான இடைகலையின் கலைதான்ரெண்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக