பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6791-6800

6791.
ஓதவே எந்தனையும் சித்தர்கூடி ஓகோகோ நாதாக்கள் கூட்டத்தோடும்
நீதமுடன் எந்தனையும் வரவழைத்து நீதியுடன் முறைபாடு வழிபாடெல்லாம்
தோதகமாய் கட்டுரைத்தார் கோடாகோடி தேறாமல் யானுமல்லோ விடைகள்சொன்னேன்
போதனைகள் மிகவுரைத்தா இறங்கியல்லோ பொங்கமுடன் யானுமல்லோ விடைதந்தேனே
6792.
தந்தேனே விடையதுவும் என்னவென்றால் தகமையுள்ள ரிஷிகூட்ட முனிவரெல்லாம்
சொந்தமுடன் வாதாடி யுறவுகொண்டு சோராமல் எந்தனுக்கு யிதவுகூறி
வந்தனங்கள் மிகச்செய்து வஞ்சலித்து வளம்பெரிய காலாங்கி நாதசீஷா
இந்தவரை நெடுங்காலம் கோடிகாலம் இகபரமும் கண்டறிந்த சித்துபாரே
6793.
பாரேதான் வையகத்தின் மகிமையெல்லாம் பட்சமுடன் காலாங்கி நாதர்தாமும்
சீரேதான் உந்தமக்கு உபதேசங்கள் செய்துவைத்த படியாலே தோஷமில்லை
நீரேதான் குளிகையது பூண்டுகொண்டு நீடாழி யுலகமெலாஞ் சுற்றிவந்து
கூரேதான் மகிமையெல்லாம் அறிந்துகொண்டீர் கொற்றவனார் காலாங்கி கடாட்சந்தானே
6794.
தானான மகிமையெல்லாம் அறிந்தாலுந்தான் தாரணியில் ஒருபோதும் தோஷமில்லை
தோனான வுமதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலே
தேனான சாத்திரத்தின் முறைபாடெல்லாம் தெளிவுடனே சிக்கருத்து சத்தகாண்டம்
பானான சூரியன்போல் ஏழாயிரந்தான் பாடிவைத்தீர் சீனபதி மாண்பருக்கே
6795.
மாண்பான சாஸ்திரத்தை யுந்தன்சீஷன் மகத்தான புலிப்பாணிக் குபதேசித்தீர்
ஆண்மையுள்ள சித்தாதி சித்தரெல்லாம் அவர்பேரில் மெத்த மனஸ்தாபமுண்டு
வீண்போன்ற சாத்திரமா இருந்தாலல்லோ விருப்பமுடன் அவர்தமக்கு உபதேசிக்க
தாண்மையுள்ள சாத்திரந்தான் சத்தகாண்டம் தாரணியில் சாத்திரங்கள் மெத்தவுண்டே
6796.
உண்டான சாத்திரத்தை யவர்க்குமல்லோ வுத்தமனே மனதுவந்து உபதேசித்தீர்
கண்டாலும் விடுவாரோ ரிஷிகள்தாமும் கருவான மகிமையென்ற வேதைமார்க்கம்
சண்டமா ருதம்போல யுலகவாழ்க்கை சட்டமுடன் வெகுகோடி யூதிவிட்டு
மண்டலத்தில் மகிமையெல்லாம் வெளியிட்டாக்கால் மாண்பர்களும் ஒருவருந்தான் மதியார்தானே
6797.
தானான சத்தகாண்ட மேழாயிரந்தான் தகமையுடன் கூறிவிட்டீர் தோஷமில்லை
பானான யெண்ணாயிரஞ் சாத்திரத்தை பகரவேண்டாம் புலிப்பாணி நாதருக்கு
தேனான சாத்திரத்தை மனதுவந்து தேற்றமுடன் மேருகிரி தன்னிலப்பா
கோனான குகைதனிலே வைத்தாலல்லோ கொற்றவனே லோகமெலாம் மதிப்பார்தானே
6798.
மதிப்பான சாத்திரத்தை வெளியிலிட்டால் மகதேவர் ஆனவரு மொருவருண்டோ
துதிப்புடனே யொருவருந்தான் தன்னைத்தானும் துப்புரவாய் மதிப்பாரும் ஆருமில்லை
விதிப்படியே விட்டகுறை இருந்துதானால் விருப்பமுடன் வினயம்வந்து கிட்டும்பாரு
கதிபெறுவர் எண்ணாயிரங் காவியத்தால் காசினியில் அதிதமென்ற மார்க்கம்பாரே
6799.
பாரேதான் காண்டமே ழாயிரத்தில் பாருலகில் வெகுகோடி வதிசயங்கள் 
நேரேரென் சித்தாதி கூட்டத்தோடு நேர்மையுடன் பாடிவைத்த நுணுக்கமெல்லாம்
சேரேதான் கிட்டிருந்து வுளவுகண்டு சேனரகசியங் களெல்லாம் வெளியாய்விட்டீர்
ஊரேதான் உலகமெலாம் இதிலடக்கம் உத்தமனே யேழாயிரம் பாடல்தானே
6800.
பாடலாய் மறைத்துவைத்த சங்கையெல்லாம் பாரிலுள்ள மாண்பர்களுங் கண்டுகொள்வார்
தேடவே சாத்திரத்தை புனிதவானே தேற்றமுடன் புலிப்பாணிக் குறுதிகூறி
ஆடவே யம்பலத்தில் நல்லோர்தம்மை அறிவுடையோர் சிவயோக மாண்பருக்கு
கூடவே சாத்திரத்தை தேர்ந்துமல்லோ குணமான வெகுபுத்தி கூறுவீரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக