பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4971-4980

4971.
கண்டதொரு வதிசயங்க ளெல்லாங்கண்டேன் காசினியில் காணாத காட்சியெல்லாம்
சண்டமாருதம் என்னும் மேருதன்னில் சாங்கமுடன் மகிமையெல்லாம் கண்ணிற் கண்டேன்
கொண்டல்வண்ணன் மேகமென்ற இடியுங்கண்டேன் கோடான கோடிவரை முனையுங்கண்டேன்
விண்டிடு வதிசயங்கள் யாவும்பார்க்க விருப்பமுடன் மேல்வரையில் வந்திட்டேனே
4972.
வந்தேனே யென்றுமேதான் இதவுகூற வளமையுள்ள ரிஷியாரும் மனதுவந்து
விந்தையுள்ள வதிசயங்கள் எல்லாஞ்சொல்லி வேதாந்தத் தாயினது மார்க்கங்கூறி
அந்தமுடன் கைலாச பதியிற்செல்ல வப்பனே எந்தனுக்கு விடையுந்தந்து
சுந்தரனே எந்தனையும் ஆசீர்மித்து சூட்டினார் இருபத்தோர் வரையிற்காணே
4973.
வரையான கைலாச பதியைக்காண வண்மையுடன் காலாங்கி கடாட்சத்தாலே
திரைபோன்ற கடலோரஞ் சுற்றிவந்தேன் தீரமுடன் இருபத்தோர் வரையிற்சென்றேன்
நரையான மேருகிரி சிகரந்தன்னில் கைலாச நாதரையான் காணவெண்ணி
குறையதுவும் நேராமல் அடியேன்தானும் குளிகைகொண்டு மேல்வரையிற் சென்றேன்தானே
4974.
தானான மேருகிரி தன்னிலப்பா தண்மையுடன் இந்திரனார் பதியுங்கண்டேன்
தேனான மனோன்மணியாள் பீடங்கண்டேன் தேற்றமுடன் கருடகந்தருவர் கண்டேன்
கோனான யஷ்டதிக்கு பாலர்கண்டேன் கூறான நாற்பத்தொண் ணாயிரம்பேர்
மானான மகதேவர் முனிவர்கண்டேன் மகத்தான முப்பத்து மூன்றுதானே
4975.
மூன்றான தேவர்முதல் கோடியப்பா முனையான ரம்பை ஊர்வசியாளோடும்
சான்றதொரு நந்தீசர் முதலானோரும் சார்பான பிரிங்கி மகாரிஷியாரோடும்
போன்றதொரு மார்க்கண்ட முனிவரோடும் புகழான குருந்தர்முதல் வசிட்டரோடும்
சான்றதொரு நாரதமா முனிவரோடும் சார்பான பதிதனையே பார்த்திட்டேனே
4976.
பார்த்திட்டேன் சிவனடியார் கூட்டத்தோடும் பாங்கான தேவகன நாதரோடும்
தீர்த்தமுடன் வைகைதனை வரவழைத்து தீர்க்கமுடன் வாரிதியை யுண்டதீரன் 
கோர்த்தவகை வைத்ததொரு குண்டோதரன் குண்டலியாம் பூதமதை யானுங்கண்டேன்
ஆர்த்துமே பிர்மாவின் பாதங்கண்டேன் வன்பான சிவபாத தூள்கண்டேனே
4977.
தூளான பாத்திரத்தின் தூசுகண்டேன் துகளற்ற விஷ்ணுசக் கரமுங்கண்டேன்
காளானின் நிறம்போல பாரிசாதம் களவமென்ற மாலையுடன் அனேகர்கண்டேன்
பாளான நரகமுடன் மோட்சங்கண்டேன் பாங்கான எமதூதர் சேர்வைகண்டேன்
ஆளான மாண்பர்களின் பாவந்தன்னை அநியாயமான தண்டனை கண்டேனே
4978.
தண்டனையாம் அவரவர்கள் செய்தகுற்றம் தாக்கான படுநரகில் வீழக்கண்டேன்
மிண்டான அவரவர்கள் செய்தகர்மம் விளைந்துதடா கொடியதொரு நீதிதண்டம்
அண்டர்முனி ராட்சதர்கள் முதலானோர்கள் அவரவர்கள் செய்ததொரு வினைபாவத்தால்
தண்டனைகள் காலதூதர் செய்யக்கண்டேன் தகமையுள்ள இந்திர பதியிற்றானே
4979.
தானாக அவரவர்கள் செய்தபுண்ணியம் தக்கபடி மாண்பர்களுக்கு உகந்தமார்க்கம்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சொற்படியே யாவுங்கண்டேன்
தேனான மோட்சமென்ற பீடந்தன்னில் தேற்றமுடன் புண்ணியர்கள் இருக்கக்கண்டேன்
மானான மகதேவர் புண்ணியக்கூட்டம் மார்க்கமுடன் கூடிருக்கப் பார்த்திட்டேனே
4980.
பார்த்தேனே யொருகோடி வெள்ளஞ்சேனை பாங்கான மேருகிரி தன்னிலப்பா
தீர்த்தமுடன் கைலங்கிரி வாசர்தன்னை சிறப்புடனே கைலாய பதியிற்கண்டேன்
சேர்த்ததொரு வெகுமாண்பர் கூட்டத்தோடும் ஜெகதலத்தில் புண்ணியர்கள் அனேகங்கண்டேன்
நேர்த்தியுடன் பட்டதிசை தன்னிலப்பா நேர்மையுடன் அதிசயங்கள் மிகவுண்டாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக