பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5031-5040

5031.
சேவிப்பார் கடவுளென்று வுன்னைத்தானும் ஜெகதலத்தில் மாண்பரெல்லாம் மயங்கியல்லோ
தாவியே சதாகாலம் பக்கலப்பா சட்டமுடன் கார்த்திருப்பார் கோடிமாண்பர்
ஆவிபொரு ளுடலாதி யனைத்துமப்பா வப்பனே யுந்தமக்கு தத்தமென்பார்
பாவியென்ற நாமமது படைக்காமற்றான் பாருலகில் சத்தியனாய் வாழ்வாய்தானே
5032.
தானான புலிப்பாணி மைந்தாகேளு தப்பாமல் எந்தனுக்கு குருதானப்பா
தேனான காலாங்கி நாதர்தம்மை தேற்றமுடன் சதாகாலம் மனதிலுன்னி
பானான மனோன்மணியாள் பாதம்போற்றி பான்மைபெற எப்போதும் தொழுதுமல்லோ
கோனான குருக்கள்மார் ரிஷிகள்தம்மை கொற்றவனே தான்நினைந்து நடத்துவாயே
5033.
நடத்துகையில் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ராஜாதிராஜ ரெல்லாம் மெச்சுதற்கு
திடமான தந்திரமாஞ் ஜாலப்போக்கு செப்புகிறேன் மாணாக்கர் யுந்தமக்கு
அடலான தந்திரமாம் மாயதந்திரம் அப்பனே யாருந்தான் அறியமாட்டார்
கடலான கள்ளனைத்தான் பிடிக்கவல்லோ காசினியி லின்னமொரு மதிசொல்வேனே
5034.
மதியான ஜாலமொன்று சொல்வேனப்பா மகத்தான காலாங்கி நாதர்தம்மை
துதியுடனே தான்வணங்கி துய்யபாலா துப்புரவாய் யுந்தனுக்குக் கூறுவேன்யான்
நிதியெடுத்த கள்ளனைத்தா னறிவதற்கு நீதியுடன் தந்திரமாஞ் ஜாலவித்தை
பதியான களவுசென்ற மாளிதன்னில் பட்சமுடன் தானடுத்து செப்பக்கேளே
5035.
செப்பவென்றால் நிதிபோன மாளிதன்னில் சிறப்புடனே நீசென்று ஜாலஞ்செய்வாய்
ஒப்பமுடன் நிதியெடுத்த மாண்பர்தம்மை ஓகோகோ யாவரையுந் தானழைத்து
தப்பிதங்கள் நேராமல் மைந்தாகேளு தன்மையுடன் சந்தேகப் பட்டபேரை
மெய்யுடனே யவர்கையில் வரிசியப்பா மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே
5036.
கேளப்பா யவரவர்கள் கையிலப்பா கெடியான பச்சரிசி நிரம்பவுந்தான்
ஆளப்பா தனித்தனியே கொடுத்துமைந்தா வப்பனே யவர்களுக்கு வணக்கங்கூறி
மாலப்பா மாண்பர்களே நீங்களெல்லாம் மயங்காமல் பொருளெடுக்க வில்லையென்று
தேளப்பா கொட்டினது போலேயப்பா தேற்றமுடன் யான்கூறும் மொழியைக்கேளே
5037.
மொழியான வார்த்தையது என்னவென்றால் மோசமில்லை நீங்களுந்தான் நடுங்கவேண்டாம்
வழியுடனே பச்சரிசி வாயிலிட்டு வண்மையுடன் தான்மென்று மைந்தாகேளு
சுழியான வாயில்மென்ற வரிசிதன்னை சூட்சமுடன் பூமிதனில் முழியவேண்டும்
பழியான எலுமிச்சம் பழத்தையப்பா பாண்மையுடன் வாய்தனிலே கடிப்பாய்தானே
5038.
கடித்துமே பழரசத்தை மாணாக்காளே கருத்துடனே பூமிதனில் முழியவேண்டும்
துடிப்புடனே பொருளெடுக்க வில்லையென்று தூய்மையுடன் சத்தியங்கள் செய்யவேண்டும்
நடித்துமே சோதனைகள் தந்துமல்லோ நலமுடனே செல்கவென்று விடையுந்தந்து
முடித்துமே மந்திரங்கள் ஓதினாற்போல் முனையான தலைவாசல் முன்னேநில்லே
5039.
நிற்கையிலே மாண்பரெல்லாம் சோதித்தாகிவந்து நிலையான நிலைதனிலே நிற்கும்போது
அற்பமென்று நினையாமல் வவர்கள்தன்னை அன்புடனே தான்நினைந்து வப்பாகேளு
சொற்படியே நீயுமிந்த வரிசிதன்னை சொந்தமுடன் காட்டவென்று வினயங்கேளு
உற்பனமா யுமிழ்ந்ததொரு வரிசியப்பா ஓகோகோ குழம்புபோ லிருக்கும்பாரே
5040.
பாரப்பா பொருளெடுத்தோன் வரிசிதானும் பான்மையுடன் பொடிபொடியாய் இருக்கும்பாரு
நேரப்பா யெடுக்காத பேர்கட்கெல்லாம் நேர்மையுடன் வரிசியது குழம்பாய் நிற்கும்
சீரப்பா பழமது வுமிழ்ந்தபேர்கள் சிறப்பான நாவதனில் ரசமுண்டாகும்
ஆரப்பா யெடுக்காத பேர்கட்கெல்லாம் அப்பனே ரசமதுவு மதிகங்காணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக