பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5091-5100

5091.
ஆச்சப்பா கோட்டையது முழுகலாச்சு வப்பனே ராஜாதி படைகள்யாவும்
போச்சப்பா கோட்டையது மண்மேடாச்சு பொங்கமுடன் மறுயுகத்தில் சாகரந்தான்
பாச்சலுடன் பொங்கியல்லோ மண்ணொதுங்கி பாங்குடனே நிலையாழி சாகரத்தில்
வீச்சலுடன் கோபுரங்கள் மாபுரங்கள் விண்ணாழிக் குள்ளாக மறைந்துபோச்சே
5092.
மறைந்துமே இலங்கையது போனபின்பு மகத்தான கோட்டைக்குள் இருக்கும்வாசல்
திறந்துமே கதவுகளுங் கலசத்தோடு திரையாழிக் கடலதனில் சிகரந்தானும்
உறைந்ததொரு கோபுரத்தில் கலசமெல்லாம் வுற்றதொரு கரைவழியே காணலாச்சு
இறையோடு ராவணனும் இலங்கைதன்னிற் திட்டமுடன் இருப்பரெனப் பேருண்டாச்சே
5093.
பேருண்டாய் வையகத்தில் மாண்பரெல்லாம் பேருலகில் யெப்போதும் இலங்கைதன்னை
சீருடனே போற்றியது மிகவுஞ்செய்து சிறப்புடனே எந்நாளுந் துதியேசெய்து
பாருலகம் சீனபதி யிருக்குதென்று பாண்மையுடன் வையகத்தோர் துதிப்பார்கண்டீர்
தாருலக மழிந்துமல்லோ சேனையெல்லாந் தப்பாமல் கடவுள்பதி சேர்ந்தார்காணே
5094.
காணவே யின்னமொரு மார்க்கம்பாரு கருவான ஜாலமொன்று வரிசிஜாலம்
தோணவே யரிசிதனை யெடுத்துக்கொண்டு தோற்றமுள்ள படியொன்று பாத்திரந்தான்
மாணவே படிநிறைய வரிசியிட்டு மன்னவனே கூரெழுத்தாணி கொண்டு
நீணவே கிட்டணைகள் செய்துமல்லோ நினவாக எழுத்தாணி தன்னைவாங்கே
5095.
வாங்கியே சபையோர்முன் ஆயிரம்பேர் வளமாகத் தானழைத்துச் செப்பக்கேளு
ஏங்கியே எல்லவரும் பார்த்தொடுங்க எழிலான கூரெழுத் தாணிதன்னை 
ஓங்கியே குத்தியல்லோ தூக்குவாய்நீ வுத்தமனே யடியதுவும் மேலேயாகும்
தூங்கியே திரியாதே மைந்தாகேளு துப்புரவாய் ஜாலமது செய்துகாட்டே
5096.
காட்டையிலே எழுத்தாணி தானுமப்பா கருவான வரிசிதனை பிடித்துக்கொண்டு
வாட்டமுடன் நிற்கின்ற வண்மைதன்னை வையகத்தில் கண்டவர்கள் மயங்குவார்கள்
கேட்டமுடன் அரிசிதனைக் கொட்டிக்காட்ட திறமுடனே கேட்பவர்க ளாமேயானால்
நீட்டமுடன் கொட்டியதைக் காட்டுவாய்நீ நிஜமென்ற ஜாலமதை மெய்யென்பாரே
5097.
பாரேதான் லோகமெல்லாம் பிர்மித்தேங்கி பாலகனே யுனைக்கண்டு வஞ்சலிப்பார்
சீரேதா னுந்தமக்கு சிறப்புமுண்டு சிற்பரனைப் போலாக எண்ணியல்லோ
நேரேதான் திரிகால பூசையோடு நீதியுடன் உபசரனை மெத்தவுண்டு
வீரேதான் சதாகாலம் உனைப்பணிந்து விருப்பமுடன் எப்போதும் துதிப்பார்தாமே
5098.
துதியான யின்னமொரு ஜாலங்கேளு துப்புரவாய் கோழியென்ற முட்டைதானும் 
பதியான வர்ணமது மேலேயேற்றி பாங்குடனே காரமென்ற காடிதன்னில்
விதியான மூன்றுநா ளூரப்போடு விருப்பமுடன் மூன்றுநாள் கழிந்தபின்பு
மதிபோன்ற பூனீராம் கிளாசுபாத்திரம் மதிப்புடனே போட்டடைக்க விதிதான்கேளே
5099.
கேளப்பா சின்னவாய் கொண்டபாத்திரம் கெடியான பாத்திரமாம் வாயினுள்ளே
பாளப்பா போகாமல் முட்டைதன்னை பான்மையுடன் கையினாற் றள்ளமுட்டை
வீளப்பா தோள்போலே யுள்ளேபோகும் விருப்பமுடன் மறுபடியும் பாண்டத்துள்ளே
நாளப்பா போகாமல் ஜலத்தைவிட்டு நாயகனே யொருநாழி பொருத்திடாயே
5100.
பொறுத்துமே ஜலமதனை யிறுத்துப்போடு பொன்னவனே எப்போதும் போலேயப்பா
நிறுத்துமே முட்டையது கல்லுபோலாம் நீமகனே பாண்டத்துள் உருட்டிக்காட்டு
திருத்தமுடன் முட்டையது மகிமைவித்தை தீர்க்கமுடன் யாரேனுங் காணமாட்டார்
பொருத்தமுள்ள முட்டையென்ற வித்தைதானும் பொங்கமுடன் மாணாக்கள் பிழைக்கத்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக