பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5291-5300

5291.
பூசியே மண்டலந்தா னிந்தபாகம் பொங்கமுடன் தான்குடித்து வருகும்போது
மாசிபடா தேகமதில் வந்தரோகம் வலுவழிந்து நாட்குநாள் குறைந்துமல்லோ
பாசியது போல்படர்ந்த சில்மிஷங்கள் பாலகனே மேனிவிட்டு பறக்கும்பாரு
காசினியில் உன்னையப்பா கடவுளாகக் கருத்தில்வைத்து காலில்வந்து பணிகுவாரே
5292.
பணிகுவார் கருமிகளும் உன்னையப்பா பாங்குடனே குடிகெடுக்கும் பாவிமார்கள்
அணியணியாய் உன்பாதந் தொழுவாரப்பா அப்பனே யுந்தமக்கு தருமமுண்டு
துணிவுடனே நீயுமொரு சித்தனாக துப்புரவாய் லோகமதி லிருந்துகொண்டு
மணிபோன்ற சின்மயத்தை மனதிலெண்ணி மகிட்சியுடன் லோகமதில் வாழ்குவீரே
5293.
வாழ்கவென்றால் பாவிகளுந் துரோகஞ்செய்தால் மார்க்கமுடன் மனந்தனிலே வையாமற்றான்
தாழ்கவே யவர்களுக்கும் பின்னும்நீதி சட்டமுடன் தான்செய்ய மெத்தநன்று
ஆழ்கவே வையகத்தில் கீர்த்திகொண்டு அடுத்தஜென்ம பகையாளி யார்வந்தாலும்
வாழ்கவே யவர்களுக்கு சோடசார வண்மையுடன் செய்குவதும் தருமம்பாரே
5294.
பாரேதா னின்னமொரு பாகங்கேளு பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாயப்பா
நேரேதான் காலாங்கி நாதர்பாதம் நெறிமுறைமைத் தான்வணங்கி நீதியாக
சேரேதான் சிங்கியது கொண்டமாண்பர் சிறப்புடனே நோயகலுங் காயமப்பா
தீரேதான் தேகமது வீறுபோக தீர்க்கமுடன் காயாதி கற்பஞ்சொல்வேன்
கூரேதான் கற்பமதை செய்துமல்லோ கொற்றவனே நீகொடுக்க தருமமாமே
5295.
தருமமா மகத்தியரும் இந்தபாகம் சட்டமுடன் பூரணத்தில் சொல்லவில்லை
கருமமது வழியாமல் மூலிகற்பம் சாங்கமுடன் சொன்னாரே வேரொன்றில்லை
திருமகளின் கடாட்சத்தால் காயகற்பம் திட்டமுடன் சொல்லவில்லை பூரணத்தில்
குருவான யெனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு நீதியாமே
5296.
நீதியால் பூமிசர்க்கரை யின்மூலம் நிட்களங்க மானதொரு பரங்கிப்பட்டை
சாதியாம் நல்லதொரு மாஞ்சில்தானும் தண்மையுள்ள தண்ணீரின் மிட்டாந்தானும்
வேதியாம் மூச்சரணை மூலந்தானும் வேகமென்ற கொடிவேலி மூலந்தானும்
ஆதியாம் பொன்னி னாவாரைமூலம் வப்பனே நிலைபனையின் மூலங்கூட்டே
5297.
கூட்டவே கற்பகமாந் தருவின்மூலம் குணமான வெந்தோன்றி மூலந்தானும்
நீட்டமுடன் நன்னாரி மூலமப்பா நிலையான வெள்ளையென்ற குன்றிமூலம்
நாட்டமுடன் மிதுவென்ன மொன்றாயல்லோ நளினமுடன் சரியெடையாய் யெடுத்துக் கொண்டு
பூட்டகமாய் ரவிதனிலே காயப்போடு புகழான மூலமதைப் பொய்யாய்ச்செய்யே
5298.
செய்யவே கல்லுரலி லிட்டுமைந்தா செப்புகிறேன் மலைத்தேனுங் கூடவிட்டு
பையவே மெழுகுபதந் தனிலிடித்து பாண்மையுடன் சிமிழ்தனிலே பதனம்பண்ணு
துய்யதொரு மெழுகதனை யந்திசந்தி துப்புரவாய்த் தானுமல்லோ கொண்டபின்பு
வெய்யவே யாவின்பாலுடனே கொள்ளு வேமென்ற வீரதுவுந் தணியந்தானே
5299.
தணியுமே முன்போல தேகந்தானும் சட்டமுடன் காந்தியது மின்னலாகும்
மணிபோன்ற காயாதி கற்பந்தன்னை மண்டலத்தி லுண்டதொரு மாண்பருக்கு
துணிவுடனே களஞ்சிக்கு மேலேயப்பா துப்புரவாய்க் கொள்ளுவது மெத்தநன்று
நணிலான தேகமது இறுகியல்லோ நயனமது பரிதிமுன்னே ஜொலிக்கும்பாரே
5300.
ஜொலிக்குமே பரிதியது மயங்கிப்போகும் தோறாமல் அருந்ததியும் கண்ணிற்றோன்றும்
வலித்ததொரு நேத்திரமும் நீரேகுன்றி வளமையுடன் கண்ணொளிவு பிரகாசந்தான்
ஒலிக்குமே வையகங்கள் கண்ணிற்றோற்றும் ஓகோகோ காலாங்கி காயகற்பம்
பலிக்குமே பாருலகில் யார்தான்செய்வார் பாலகரே புண்ணியர்க்கு வாய்க்கும்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக