பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5471-5480

5471.
வணங்கியே சதாநித்தம் உந்தன்பக்கல் வளமான நிதியனைத்தும் உனக்கேயீவார்
சுணங்கமது வாராமல் எந்தநாளும் துப்புரவாய் யுனைப்பணிந்து போற்றுவார்கள்
மணங்கமழும் லீலாவி னோதந்தன்னில் மார்க்கமுடன் எந்நாளும் பட்சம்வைத்து
இணங்கியே பரபுருஷர் முகமும்பாரார் எழிலான அடைக்கலந்தன் வசியம்பாரே
5472.
பாரேதான் யின்னமொரு கருமானங்கேள் பட்சமுடன் யானுரைப்பேன் மைந்தாகேளு
சீரேதான் காலாங்கி நாதர்தம்மால் சிறப்பான வித்தையது சிடிகைவேதை
நேரேதான் நூறாண்டு சென்றகாகம் நெடிதான காகமது கொண்டுவந்து
தீரேதான் காகமது வாயிலப்பா திகழான கறுப்பனென்ற பூச்சிதானே
5473.
தானான காகமது சொல்லக்கேளு தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
வேனான காகமது தன்னிலப்பா விருப்பமுடன் பூச்சிதனை யூட்டியேதான்
கோனான மண்டரண்டங் கலசமப்பா கொற்றவனே தாளியீட்டு சீலைசெய்து
தேனான வாலுகையா மேந்திரத்தில் தேற்றமுடன் தானமைத்து யெரித்திடாயே
5474.
எரிக்கவென்றால் விறகதுவும் என்னசொல்வேன் எழிலான வூமத்தை விறகேயாகும்
நரிக்கியே நாற்சாமம் தீயைமூட்டி நலமாகத் தானெரிக்கப் பற்பமாகும்
முரிக்கவே பற்பமதை எடுத்துமல்லோ முனையான பற்பமதை பதனம்பண்ணு
சிரிக்கவே பற்பமதை யெடுத்தேமைந்தா சிறப்பான வாத்மஜலந் தன்னிற்கூட்டே
5475.
கூட்டியே பற்பமதை யெடுத்துமைந்தா கொப்பெனவே மாண்பரிட மேலிற்றானும்
தாட்டிகமாய்த் தூவிவரப் பலனைக்கேளும் சட்டமுடன் மாண்பரெல்லாம் வசியமாவர்
வாட்டமுடன் கேட்டதெல்லாம் உனக்கேயீவார் வளமான வஷ்டசித்து யிதனாலாகும்
மாட்டிமையா யெந்நாளு முந்தனுக்கு மகிழ்ச்சியுடன் கேட்டதெல்லாந் தருவார்பாரே
5476.
தருவாரே யுந்தனுக்கு பொடியேபட்டால் தாரிணியி லுள்ளதொரு மாண்பரெல்லாம்
குருவான குருவிவர்தா னென்றுசொல்லி கொற்றவனே யுந்தனையும் பணிகுவார்பார்
திருவான மாமுனியின் கடாட்சத்தாலே சித்திக்கும் அஷ்டசித்து கைக்குள்ளாகும்
நிருவாணி மஹேஸ்வரியாள் எந்தநாளும் நீதியுடன் வுன்பக்கல் நிற்பார்பாரே
5477.
நிற்பாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் நிலையான புலிப்பாணி மைந்தாகேளு
அற்பமென்று நினையாதே அருண்மைந்தாபார் அருமையுள்ள காலாங்கி சொன்னநீதி
சிற்பரனார் யெந்தன்குரு வாக்குதானும் சீருலகில் வொருநாளும் பொய்யாதப்பா
துப்புரவாய் தகரமுடன் தாரஞ்சேர்த்து துகையான வெள்ளையென்ற பட்டுதானே
5478.
தானான சீலையது தன்னில்மைந்தா தண்மையுடன் இரண்டையுந்தான் அதனிற்சுற்றி
மானான வெள்ளையென்ற கடுகுதானும் மகத்தான பாண்டமதி லிட்டுமைந்தா
பானான வெள்ளை கடுகெண்ணைதன்னால் பக்குவமாய் தானெரிப்பாய் நாலுசாமம்
தேனான சிரசதுவாம் மோடுதன்னில் தேற்றமுடன் மையதனை வாங்கிடாயே
5479.
வாங்கியே மையதனில் கூடச்சேர்க்கும் மகத்தான சரக்கதுவும் சொல்லக்கேளும்
ஓங்கியே பச்சையென்ற பூரந்தானும் வுத்தமனே வாடையென்ற கஸ்தூரியப்பா
தூங்கியே திரியாமல் புனுகுமைந்தா துடியான குங்குமப்பூ ரோஜனையும்சேர்த்து
சாங்கமுடன் சவ்வாதுந் தானுங்கூட்டி சட்டமுடன் தானரைப்பாய் பன்னீராலே
5480.
பன்னீரால் நாற்சாமம் அரைத்துமேதான் பாங்குபெற மையதனைப் பதனம்பன்னு
இன்னிலத்தி லுனைப்போ லார்ச்சித்து யெழிலான பூபதியா மென்னக்கூறும்
நன்னயமாய் ஆவினது வெண்ணைதன்னால் நயம்பெறவே தான்கூட்டி மத்தித்தேதான்
சொன்னபடி மையதனைக் கண்ணிற்றீட்டி சுகியுடனே வையகத்தைச் சுற்றுவீரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக