பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5601-5610

5601.
பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பாண்மையுடன் அறிந்தவரை சொல்வேன்யானும்
சீரப்பா வையகத்தில் விருட்சந்தானும் சிறப்பான கோடியுண்டு லக்கோயில்லை
நேரப்பா கனிவகைகள் கோடியுண்டு நேர்மையுடன் கண்டறிந்து பார்த்ததுண்டு
ஆரப்பா கற்பகமாம் விருட்சந்தானும் அவனிதனில் மாண்பருக்கு உகந்ததாச்சே
5602.
ஆச்சப்பா விருட்சவகை கோடியுண்டு வப்பனே கர்ப்பகத்தின் விருட்சந்தன்னை
மாச்சலுடன் எதுகேட்டால் தருவேனென்று மகத்தான விருட்சமது கூறும்வண்ணம்
ஏச்சலது வாராமல் இருக்கும்விருட்சம் எழிலான வையகத்தோர்க் கானஜாதி
காச்சலுடன் பூமிதனில் வாழுஞ்சாதி கனமான விருட்சமென்ற மரமுமாச்சே
5603.
ஆச்சப்பா மாந்தருக்கு பஞ்சபூதம் வப்பனே வாத்துமமா மென்னலாகும்
மூச்சொடுங்கும் மிருகமதுக் கறிவுநாலு முனையான சீஷனென்றே செப்பலாகும்
பாச்சலுடன் பறக்கின்ற பட்சியப்பா பாங்கான வறிவதுவும் மூன்றேயாகும்
மேச்சலுடன் மார்புதன்னால் நகரும்ஜெந்து மேன்மையுடன் அறிவதுதான் ரெண்டதாமே
5604.
இரண்டான விருட்சத்துக் கறிவுவொன்று எழிலான சாத்திரத் தொகுப்பின்கூறு
திரண்டதொரு கவிவாணர் சொன்னவாக்கு திக்கெட்டும் சித்தர்முனி கண்டாராய்ந்து
மிரண்டதொரு மானிடர்க்கு வையகத்தில் மிக்கான தொகுப்புவகை யாவுங்கூறி
காண்டகம்போல் போகரே ழாயிரந்தான் காசினியில் பாடிவைத்த பண்பதாமே
5605.
பண்பான யின்னமொரு மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மைந்தாபாரு
நண்பான வையகத்தில் கோடிமன்னர் நாடாண்டு காடுரைந்தார் லக்கோயில்லை
பெண்பான செங்கோலின் பெருமைமார்க்கம் பேரான வமைப்புசிலர் கண்டாரங்கே
சண்டாள வேந்தருக்கு யாதொன்றில்லை சட்டமுடன் போகரிஷி கூறுவேனே
5606.
கூறுவேன் சக்கரவர்த்தி என்றுமேதான் குவலயத்தில் பேர்கொண்டு லாபமென்ன
மாறுடைய வேந்தர்களா யவதரித்து மானிலத்தில் மன்னவரா யிருந்துமென்ன
வேறுபட மாண்பர்களை வருத்தல்செய்து வேண்டியதோர் நிதியனைத்தும் கொள்ளைகொள்வார்
ஆறுதலங் கட்டறியார் மன்னர்தாமும் அகதிபர தேசியரைத் தேடார்காணே
5607.
தானான மன்னர்க்கு முறையேதென்றால் தாக்கான வங்கமது பத்துமுண்டாய்
கோனான அஷ்டசெல்வந் தானுங்கொண்டு கொற்றவனார் பேர்தனையே வகிக்கவேண்டும்
தேனான வெற்றியது எட்டும்பெற்று திரளான பொருளதுவும் நான்குங்கொண்டு
மானான நிதியனைத்துங் கொண்டுமல்லோ மகத்தான மங்களமும் எட்டுந்தானே
5608.
எட்டான மங்களமும் இருக்கவேண்டும் எழிலான பேறுபதி னாறுவேண்டும்
மட்டான கனமெட்டும் இருக்கவேண்டும் மகத்தான விளையாட்டும் எட்டுவேண்டும்
திட்டமாஞ் சேனைதுகை பத்தும்வேண்டும் திகழான புங்கசித்தி யெட்டும்வேண்டும்
வட்டமுடன் போகமது யெட்டும்வேண்டும் வளமான ராஜர்களுக் குகந்தவாறே
5609.
வாறான செருக்கு இருநாலதாகும் வண்மையுள்ள செங்கோலு மேழதாகும்
கூறான கலையதுவும் ஆறும்வேண்டும் குறிப்பான காமமதை மூன்றும்விட்டு
தாறான திரவியங்கள் அனைத்தும்பெற்று தாக்கான தீக்குணங்கள் பத்தும்விட்டு
சேறோடுங் கொங்கையாமும் மணியும்பெற்று சிறப்பான பணிதிமுதல் கொண்டார்தாமே
5610.
கொண்டதொரு வேந்தனுக்கு இதுகள்வேண்டும் கோடான கோடிபொருள் இருந்துமென்ன
அண்டிவந்த யதிதிபர தேசியர்க்கு வன்புடனே கர்ணனைப்போல் யீயவேண்டும்
வண்டணிமார் குடிப்படைகள் தன்னைத்தானும் வளமையுடன் கற்பழிக்க லாகாதப்பா
சண்டமா ருதம்போலே செங்கோல்நாட்டி சதுருடனே யாள்பவனே மன்னனாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக