பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5531-5540

5531.
பாரேதான் சீனபதி விட்டுமல்லோ பாங்கான குளிகையது பூண்டுகொண்டு
நேரேதான் மலையாளங் குடகுநாடு நேர்மையுடன் வெகுதேசஞ் சுற்றிவந்தேன்
சீரேதான் சிங்கணர் கொங்கணவர்தாமும் சிறப்பான மராட்டியப் பரரைக்கண்டேன்
கூரேதான் கன்னடையர் மலையாளரப்பா குறிப்பான குசலரவர் வேளாளர்தாமே
5532.
தாமான துலுக்கருடன் மலுக்கர்தாமும் தகமையுள்ள வேளாள மாண்பருண்டு
கோமான குருக்களென்றும் ராஜரென்றும் குவலயத்தில் சித்துமுனிப் புருஷரென்றும்
தேமான பலபலவாஞ் சாதிபேதம் தேசமதில் கண்டதல்லோ லக்கோயில்லை
பூமான்கள் கற்றதொரு தொழிலையெல்லாம் பூவுலகில் கண்டறிந்தேன் போகர்தானே
5533.
தானான போகரிஷி முனிவர்தானும் தகமையுடன் கண்டறிந்த அதர்வனத்தை
வேனான விலாடமென்ற நகருக்கப்பால் வேந்தருட பதிதனிலே சென்றேன்யானும்
மானான மகதேவர் காலாங்கிநாதர் மன்னவனார் கூறியதோர் வாக்குநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே தேசமென்ற விலாடநகர் சென்றிட்டேனே
5534.
சென்றேனே விலாடநகர் பதியிலப்பா செம்மலுடன் மாண்பருட வதிசயங்கள்
குன்றான மலைபோலே கோடியுண்டு கொற்றவர்கள் பஞ்சவரின் சேனைகண்டேன்
வென்றிடவே மூலபல யுத்தந்தன்னில் வெகுகோடி மாண்பரெல்லாம் மடிந்தாரங்கே
அன்றுதிரி யோதிரனார் சேனைவர்க்கம் அவ்வனத்தில் சமாதிபதி கண்டிட்டேனே
5535.
கண்டேனே சமாதியது கோடாகோடி காசினியில் யாரேனுங் கண்டதில்லை
அண்டர்முனி ராட்சதர்கள் சமாதிவர்க்கம் அவ்வனத்தில் சுத்திவந்து காண்பரங்கே
கொண்டல்வண்ணன் அச்சுதனார் போர்கள்செய்த கோடான கோடிவகை யாயுதங்கள்
பண்டுளவு மாலையணி பூண்டமாது பாங்கான கோயில்தனில் பார்த்திட்டேனே
5536.
பார்த்தேனே வில்லம்பு முப்பத்திரண்டும் பாங்கான காளியுட தேவஸ்தானம்
சேர்த்துமே மலைபோலே யாயுதங்கள் சேனையெடு படைக்கூட்டம் திரள்கூட்டங்கள்
கோர்த்துமே விலாடபுர பதியிலப்பா கொற்றவர்கள் சமாதியது பதியுங்கண்டேன்
தீர்த்தமுடன் சிவலிங்க சமாதிகோடி திரைகோடி வரைகோடி தீராதானே
5537.
தீரவே சமாதியிடஞ் சென்றேன்யானும் திரள்வீரர் பஞ்சவர்கள் போர்க்களத்தை
சோரமெனும் வீராதி வீரர்தாமும் சொற்பெரிய அரண்வாயல் அரக்குக்கோட்டை
நேரமுடன் குளிகையது கொண்டுயானும் நெடுந்தூரம் பாஞ்சாலன் பதியின்மட்டும்
சேரவே சென்றல்லோ வெற்றிகொண்டோன் ஜெயமான சமாதியிங் காவலுண்டே
5538.
காவலாங் கட்டென்ன வதிகாரங்கள் கருதவென்றா லாதிசேட னிலுமாகா
ஆவலுடன் காலாங்கி தனைநினைத்து அதிகவழி நெடுந்தூரஞ் சென்றேனப்பா
போவதுவும் வருவதுவும் சமாதிபக்கல் பொங்கமுடன் மாண்பர்களோ சொல்லொண்ணாது
சாவதுவில் மாடுபிடி போர்க்களத்தில் சட்டமுடன் காவல்தனை பார்த்திட்டேனே
5539.
பார்த்தேனே மாண்பர்களை யடியேன்தானும் பக்குவமாய் வாய்மொழியை யறியவென்று
சேர்த்துமே கரங்குவித்து தாள்பணிந்து தேற்றமுடன் மாண்பர்களைக் கண்டேன்யானும்
தீர்த்தமுடன் சமாதியது யேதென்றென்ன திரளான படைவீரர் காவலாளி
பார்த்தனெனும் பஞ்சவர்கள் படுகளந்தான் பாரினிலே போரிட்ட விலாடங்காணே
5540.
காணவே யெந்தனுக்கு சொன்னாரங்கே கவனமுடன் குளிகைகொண்டு நின்றுமல்லோ
தோணவே திடுக்கிட்டு மனதுயேங்கி தொல்லுலகில் துரியோதனன் களந்தானங்கே
பூணவே யெந்தனுக்கு சொல்லவென்று புகழாக வடியேனுங் கேட்டேனங்கே
ஆணவம் பூண்டதொரு போர்க்கலத்தை யங்ஙனவே எந்தனுக்குக் காண்பித்தாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக