பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5481-5490

5481.
சுற்றயிலே யுனைக்கண்ட மாண்பரெல்லாம் சுகமுடனே மன்மதனா ரென்றுசொல்லி
வெற்றிபெற யுனைவணங்கி பின்னேசென்று விருப்பமுடன் கேட்டதெல்லா மீவார்பாரு
எற்றிசையும் உனைக்கண்டு யேங்குவார்கள் எழிலான மையினது வேகத்தாலே
நெற்றிதனில் மையதனை யிட்டாயானால் நேர்மையுடன் சிவராஜன் என்பார்பாரே
5482.
பாரேதான் சித்தர்முனி ரிஷிகள்தேவர் பண்புடனே சாத்திரங்கள் அனேகஞ்செய்தார்
நேரேதான் சிடிகையென்ற வேதையப்பா நேர்மையுடன் கைகண்ட வேதைதன்னை
தீரேதான் வையகத்து மாண்பருக்கு சிறப்புடனே பாடியல்லோ மறைத்துவைத்தார்
கூரேதான் மாணாக்கள் பிழைக்கவென்று கூறினேன் சிடிகையென்ற வேதைதானே
5483.
காணவே மையதனால் அனேகசித்து கருத்துடனே லலாடமதி லிட்டுமைந்தா
தோணவே யுந்தனுக்கு வேணமட்டும் துப்புரவாய் ராஜரிட கோட்டைதன்னில்
பூணவே நிதியிருக்கும் ஸ்நாணம்தன்னில் பொங்கமுடன் சென்றல்லோ மைந்தாகேளு
நீணவே காவலர் முன்னிருக்கும் நிதியனைத்தும் கண்ணெதிரே யெடுக்கலாமே
5484.
எடுக்கலாம் கோடிதன மெடுக்கலாகும் எழிலான வரண்மனையின் நிதிகளெல்லாம்
அடுத்ததொரு மாண்பர்களும் பார்த்திருக்க வளவற்ற திரவியங்கள் எடுக்கலாகும்
தொடுத்ததொரு வசியமென்ற மையினாலே தோறாமல் அஷ்டசித்து மாடலாகும்
விடுத்ததொரு காலாங்கி கடாட்சத்தாலே விருப்பமுடன் பாடினதோர் வசியமாமே
5485.
ஆமேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நாமேதான் சொன்னபடி போகர்வாக்கு நானிலத்தில் பொய்யாது மெய்யேயாகும்
போமேதான் மாதரிட வசியமப்பா பொங்கமுடன் இன்னமொரு வயணஞ்சொல்வேன்
வேமேதான் தாரமென்ற சிலையுங்கூட்டு விருப்பமுடன் ரோசனையுந் தானுங்கூட்டே
5486.
கூட்டியே பச்சையென்ற பூரந்தானும் கூறான காந்தமது தானுஞ்சேர்த்து 
மாட்டியே வாஞ்சிநேயர் பலத்தினாலே மார்க்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வாட்டமுடன் தானரைத்து சிமிளில்வைத்து வளமாக கஸ்தூரி புனுகுசேர்த்து
நாட்டமுடன் கரந்தனிலே பூசிமைந்தா நலமாக $தலையில் பூசிடாயே
5487.
பூசியே நசிமசி யென்றேயோது புகழான கருவதுவும் வுருவுமேறி
மாசிபடா மனததுவங் கலங்கியேதான் மகத்தான சிந்தனையு மதிகமாகி
ஆசியுடன் வரும்போது மைந்தாகேளு வப்பனே வாத்மஜலங் கூடச்சேர்த்து
வாசியுடன் வுருவதும் லட்சமோது வரையுடனே பெண்ணுருவாய் வருவாள்பாரே
5488.
வருவாளே மோகமது கொண்டுமல்லோ மகத்தான நிதியனைத்து மீவாள்பாரு
உருகியே மனமதுவும் மிகவும்வாடி உத்தமனே யுன்பின்னே துடறுவாள்பார்
கருகியே முகம்வேர்த்து மனம்வேறாகி கட்டழகி பொன்மாது வருவாள்பாரு
திருவினையாள் மனோன்மணியாள் முன்னேநிற்பாள் திரமுடனே அஷ்டசித்தி கைக்குள்ளாச்சே
5489.
ஆச்சப்பா கமலமுனி யனந்தம்போக்கு வப்பனே சொல்லிவைத்தார் லக்கோயில்லை
மூச்சடங்கி வையகத்திற் சென்றுமேதான் மூதுலகில் திரும்பிவந்து கண்டபின்பு
பேச்சொடுங்கி சிலகாலஞ் சமாதிநின்று பேரின்ப நிலைதனிலே யிருந்துகொண்டு
பாச்சலுடன் சிடிகையென்ற வேதைகோடி பலபலவாய் பாடிவைத்தார் கமலர்தானே
5490.
தானான வித்தையது யதிகஞ்சொன்னார் தண்மையுடன் காலாங்கி வித்தைக்கொவ்வா
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொட்டினார் இதுபோல சிடிகைவேதை
தேனான மனோன்மணியாள் கிருபையாலே தெரிவித்தே னுந்தனுக்கு சொன்னேனப்பா
பானான வித்தையெல்லாங் கூறப்போனால் பாங்கான வேழாயிரம் இடங்கொள்ளாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக