பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5411-5420

5411.
தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
நாறான வண்டமென்ற காகமப்பா நலமான தாகமது கொண்டுவந்து
மாறான வுயிரதுவும் போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
கூறான நீலாஞ்சனக் கல்லுதானும் கொற்றவனே யிருக்குமது பாருபாரே
5412.
நூறான வருஷமது கடந்தகாகம் நுட்பமுடன் கண்டறிந்து மைந்தாகேளு
நாறான வண்டமென்ற காகமப்பா நலமான காகமது கொண்டுவந்து
மாறான வுயிரதுவும் போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
கூறான நீலஞ்சனக் கல்லுதானும் கொற்றவனே யிருக்குமது பாருபாரே
5413.
பாரேதான் நீலஞ்சனக் கல்லுதன்னை பட்சமுடன் தானெடுத்து மைந்தாகேளு
சீரேதான் பதனமது செய்துமல்லோ சிறப்பான வையகத்தில் மாந்திரீகனாவாய்
நேரான ராஜாதி ராஜர்தானும் நேர்மையுடன் சமாதிவைத்த நிதியனைத்தும்
கூரேதான் சல்லியமாம் வித்தைதன்னால் குறிப்பான வஞ்சனத்தால் எடுக்கக்கேளே
5414.
கேளேதான் கருவென்ற மைதானப்பா கெணிதமுடன் வுள்ளங்கை தன்னிற்றோய்த்து 
சூளேதான் அஞ்சனமாங் கல்லைத்தானும் சுத்தமுடன் வுள்ளங்கைத் தன்னில்வைத்து
பாளேதான் போகாமல் அஞ்சனத்தை பஞ்சமுடன் தான்பார்க்க நிதிகள் தோன்றும்
ஆளேதான் திரவியத்தை எடுக்கலாகும் அப்பனே நீலாஞ்சன மகிமைபாரே
5415.
மகிமையாம் இன்னமொரு மார்க்கங்கேளு மகத்தான நீலாஞ்சனக் கல்லினாலே
அகிலமெலாம் நிதியெடுக்க இதனாலாகும் அப்பனே அஞ்சனமும் இதற்கீடல்ல
முசியாமல் சித்தர்முனி ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சாஸ்திரங்கள் அனேகஞ்செய்தார்
தகியுடனே நீலாஞ்சனக் கல்லின்மார்க்கம் சாற்றலில்லை சித்தர்முனி ரிஷிகள்தாமே
5416.
தாமான சாஸ்திரத்தி னுளவுகண்டு தண்மையுடன் சீனபதிப் பெண்களுக்கு
சாமான மாகவல்லோ குளிகைகொண்டு சட்டமுடன் சீனபதிக் கேகினேன்யான்
நாமேதான் சொன்னபடி நீலாஞ்சனத்தை நாட்டமுடன் போதித்தேன் மாண்பருக்கு
வேமேதான் சீனபதிப் பெண்களெல்லாம் வேகமுடன் தெரிசனத்தைக் கண்டார்தாமே
5417.
கண்டாரே யின்னமொரு மார்க்கங்கேளு கனமான சீனபதி மாண்பரெல்லாம்
தெண்டமுடன் காலாங்கி நாதருக்கு தேற்றமுடன் சீர்பாதந் தாள்பணிந்து
வண்டணிமார் பெண்களெல்லாம் ஆலோசித்து வளமான வண்டமென்ற காகந்தன்னை
கொண்டுவர தம்மனதில் ஆலோசித்து கொம்பனைமார் எந்தனுக்கு ஓதினாரே
5418.
ஓதவே சீனபதிப் பெண்களல்லோ வுத்தமர்கள் எல்லவரும் ஒன்றாய்க்கூடி
நீதமுடன் காகமதைத் தேடும்போது நிலையான காகமது காணாமற்றான்
வேதமுடன் வெள்ளையென்ற காகந்தானும் வெட்டவெளி கானகத்தில் காணலாச்சு
ஆதமுடன் காகமதைக் கண்டுமல்லோ வப்பனே கல்லதனைக் கண்டார்தானே
5419.
தானான கல்லதனை யெடுத்தபோது தண்மையுள்ள கல்லதுவும் வெண்மையாச்சு
கோனான குருசொன்ன வாக்குபோல கொற்றவனே நீலமென்ற கல்லேயில்லை 
பானான மாண்பரெல்லாம் பலபேர்கூடி பண்பான யோசனைகள் செய்திட்டார்கள்
மானான தேசமது வெண்மையப்பா மகத்தான காகமது வெள்ளையாச்சே
5420.
ஆச்சப்பா நீலாஞ்சனக் கல்லுதன்னை வப்பனே பரிட்சையது செய்யும்போது
மூச்சடங்கி முன்போன காகத்தின்கல் முனையான நீலமென்ற வர்ணத்தாலே
பாச்சலுடன் வையகத்தில் நிதிகளெல்லாம் பாங்குடனே எடுப்பதற்கு பண்பதாச்சு
ஆச்சரிய மானதொரு வெண்காகத்தில் அன்பான கல்லதுவும் வோடாதன்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக