பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5591-5600

5591.
ஒண்ணவே சிலதேச மாண்பரப்பா வுத்தமனே அந்தவண்ணன் முகமுமாகும்
எண்ணவே முடியாது ஜாதிபேதம் எழிலான பேதமது லக்கோயில்லை
கண்ணவே சாதியது பதினெட்டாக காசினியில் அவதரித்தார் கோடிமாண்பர்
எண்ணவே முடியாது யாராலுந்தான் எழிலான ஜாதியிட மார்க்கந்தானே
5592.
மார்க்கமா மின்னமொரு மகிமைகேளு மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
ஓர்க்கவே ஜாதியது பேதாபேதம் எழிநூற்றிரு பத்தினாலு சொச்சமாகும்
மூர்க்கமாம் மாண்பரோடு பேசும்பட்சி முனையான முப்பத்தி ரெண்டேஜாதி
ஆர்க்கவே பரிபாஷை தெரிந்தபட்சி வப்பனே சோடசமும் ஜாதிபதினாறே
5593.
ஆறான பட்சியது அனந்தமுண்டு அதுதனக்கு குணாகுண பேதமில்லை
நூறான வாண்டுக்கு ளிருக்கும்பட்சி நுண்மையுடன் கலைகள் பதினாறதாகும்
நூறான மற்றதோர் பட்சியெல்லாம் துப்புரவாய் வயததுவுங் கொஞ்சமாகும்
தேறான மற்றதோர் பட்சிக்கப்பா தேசத்தில் பகுத்தறிவு இல்லைதானே
5594.
தானான மிருகத்தின் வளப்பஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தேசமெல்லாம் குளிகையது பூண்டுகொண்டு
மானான மிருகத்தின் மகுத்துவத்தை மண்டலத்தில் கண்டறிந்து வந்தேன்பாரே
5595.
பாரேதான் மிருகத்தின் வளப்பஞ்சொல்வேன் பாங்கான மனோலயத்தை யறிந்தஜாதி
நேரேதான் மிருகமது சோடசமாகும் நேர்மையுடன் ஜாதியது பதிணாரேயாகும்
சீரேதான் மிருகமது பரிபாஷைபேசும் சிறப்பான மற்றதோர் மிருகமெல்லாம்
வேரேதான் பகுத்தறிவு யில்லையப்பா வேதாந்தக் காலாங்கி யருள்வாக்காச்சே
5596.
வாக்கான வாக்கதுவும் அறிந்தஜாதி வளமான நயமென்ற பாஷைதன்னை
நோக்கமுடன் தானறியும் மிருகஜாதி நுண்மையுடன் மார்பதனில் நகருஞ்சாதி
ஏர்க்கவே ஜாதியது பேதாபேதம் எழிலாகத் தாமுரைப்பேன் வண்மைபாரு
தீர்க்கமுடன் பூமிதனில் நகருஞ்சாதி திறமான காலில்லா ஜாதிதானே
5597.
தானான ஜாதிவகை சொல்வேன்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
தேனான பூமிதனில் விஷமுள்ளஜெந்து தேசத்தில் அறிவுள்ள ஜெந்தொன்றப்பா
மானான மாணிக்கப் பாம்பேயல்லால் மற்றதொரு ஜெந்துக்கள் யாதொன்றில்லை
பானான வையகத்தில் கோடியுண்டு பாலகனே வாலகாலப் பாம்பாகாதே
5598.
ஆகாது பரிபாஷைத் தெரிந்தபாம்பு வப்பனே யாரறிவார் மண்டலத்தில்
சாகாது கோடியுக மிருக்கும்பாம்பு சர்ப்பராஜ னென்றல்லோ பேருண்டாச்சு
வேகாது காடுதீப் பட்டெரிந்தால் வேகமுடன் ஆகாயம் பறக்கும்பாம்பு
போகாது சிறகுடைய சர்ப்பமல்லோ பொங்கமுடன் கண்டறிந்த பாம்புதானே
5599.
பாம்பான மற்றதோர் ஜீவஜெந்து பாரினிலே எத்தனையோ கோடியுண்டு
தீம்பான ஜெந்துக்கள் வையகத்தில் தரளான கணக்குவகை கூறப்போமோ
வீம்புடனே சீவவதை செய்திட்டாலும் வித்தகனே யதற்கொன்றும் தெரியாதப்பா
ஆம்பலுடன் கொட்டியவர் மலர்தல்போலும் வப்பனே யவனிதனி லதிகமுண்டே
5600.
உண்டான புலிப்பாணி மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
கண்டதொரு வையகத்தில் விருட்சந்தன்னில் காலாங்கி நாதரவர் அறிந்தமட்டும்
அண்டமதில் ஆகாய தேவரெல்லாம் வன்புடனே யுகந்துகொண்ட விருட்சந்தன்னை
சண்டமா ருதம்போல விருட்சந்தன்னை சாற்றுகிறேன் புலிப்பாணி மைந்தாபாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக